தைப்பூசமும் தமிழ்க்கடவுளும்
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாட்களில் முதன்மையானது தைப்பூசம் எனலாம்.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாட்களில் முதன்மையானது தைப்பூசம் எனலாம். தை மாதத்தில் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து பெளர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நன்னாளே தைப்பூசம்.
வேளாண்மையை தங்கள் பிரதான வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்தவர்கள் பண்டைய தமிழர்கள். தை மாதத்தில் தாங்கள் அறுவடை செய்த விளைபொருட்களை முருகப்பெருமானுக்கு சமர்ப்பிக்கும் நோக்கில் தைப்பூசம் நாளில் காவடி எடுத்துச்சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
அதன் நீட்சியாகவே இன்றளவும் தமிழ்நாடு மட்டுமில்லாமல், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உட்பட தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தைப்பூசம் திருநாளில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் பக்தர்கள் காவடி எடுக்கும் நிகழ்வுகளை நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பாக, பழனி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்துச்செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அசுரர்களை சம்ஹாரம் செய்வதற்காக முருகப்பெருமானுக்கு, பார்வதி தேவி ஞானவேல் வழங்கிய இடமென்று பழநி திருத்தலம் கருதப்படுவதால், அங்கே தைப்பூசம் திருநாள் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
காவடி என்பது இரண்டு பக்கங்களிலும் இரண்டு பாத்திரங்களை கொண்ட ஒரு அமைப்பு. அவற்றுள் ஒரு பாத்திரத்தில், பாதயாத்திரையின் போது தங்களுக்கு வேண்டியப்பொருட்களை வைத்திருப்பார்கள். மற்றொரு பாத்திரத்தில், பால், பன்னீர், இறைவனுக்கு சமர்ப்பிக்க வேண்டிய மலர்கள், நெல்மணிகள், தானியங்கள் என முருகக்கடவுளுக்கு செலுத்த வேண்டிய பொருட்களை கொண்டுச்செல்வார்கள்.
காவடியின் இந்த அமைப்புக்குப்பின் ஒரு தத்துவம் இருக்கிறது. மனிதர்களாகிய ஜீவாத்மாக்கள் தங்கள் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையையும், இறைவனுக்கு செய்யும் பக்தியையும் சரிசமமாக சுமக்க வேண்டும் என்பதே இதன் உட்பொருள் என்கிறார்கள். இரண்டு பக்கங்களிலும் பாரம் இருக்கும்போது எந்தப்பக்கத்தில் சுமை கூடினாலும் சுமப்பது கடினம். அதுபோல், இல்லற வாழ்க்கையை துறந்துவிட்டு, தன் பொறுப்புகளை சரிவர நிறைவேற்றாமல், எப்பொழுதும் கடவுள், கோயில் எனத் திரிந்துக் கொண்டிருந்தாலும் வாழ்க்கைக்கு நல்லதல்ல. அதே போல, சம்சார பந்தத்தில் உழன்று, உலக சுகங்களில் மனம் லயித்து, இறைவன் மீதான நினைப்பே இல்லாமல் போனாலும் அது சரியல்ல. இந்த இரண்டும் சரிசமமாக இருக்க வேண்டும் என்பதே தைப்பூசம் திருநாளில் முதன்மை வகிக்கும் காவடியின் உன்னத தத்துவம் ஆகும்.

