ராமனும், ராமகாதையும், தமிழகமும்

ராம கதைக்கு விதை ரிக் வேதத்தில் உள்ளது என்றும் ரிக் வேதகாலம் கி.மு.750 முதல் 1000 வரை என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஜனகன் என்ற பெயர் சதபதப் பிராம்மணத்திலும், தைதரீய பிராம்மணத்திலும் காணப்படுகின்றன.

வியாசன்

1/22/2024

ராம கதைக்கு விதை ரிக் வேதத்தில் உள்ளது என்றும் ரிக் வேதகாலம் கி.மு.750 முதல் 1000 வரை என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஜனகன் என்ற பெயர் சதபதப் பிராம்மணத்திலும், தைதரீய பிராம்மணத்திலும் காணப்படுகின்றன. ஆனால் இவற்றில் ராமாயணம் கதை வடிவில் இல்லை.

வால்மீகி முனிவர்தான் ராமனின் புகழ்பாடிய ராமாயணத்தைக் காவியமாகப் பாடிய ஆதிகவியென்கிறார்கள். அவர் காலத்திலே வழங்கி வந்த இராம கதைகளை எல்லாம் ஒருங்கு திரட்டிக் காவிய வடிவம் கொடுத்தவர் என்கிறார் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை. வால்மீகி முனிவர் ராமகாவியத்தை இயற்றிய காலம் கி.பி.438 என்று உறுதியாகச் சொல்கிறார் சென் குப்தா என்ற ஆய்வியல் அறிஞர்.

மகாபாரதத்தில் ராம காதையைக் காண்கிறோம். ராமோபாக்கியானம் என்ற பெயர் பெற்றுள்ளது அக்கதை. இதனை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரருக்குச் சொல்வது போல வருகிறது.

புத்த ஜாதகக் கதைகளில் ராமாயணத்தைக் காண்கிறோம். ஜாதகக் கதைகளில் மூன்று ராம காதையைக் கூறுகின்றன. ராமரைப் பற்றிய கதைகளே இவையென்றாலும் இவை வால்மீகி ராமாயணத்துக்கு மாறுபட்டவையாக விளங்குகின்றன.

ஜைனர்களில் இருபிரிவினரான சுவேதம்பர ஜைனம், திகம்பர ஜைனம் ஆகியவற்றிலும் தங்கள் மதக்கோட்டுபாடுகளுக்கு ஏற்ப ராமகாதையை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். திகம்பர ஜைனராகிய குணபத்திரர் என்பவர் தம் பிரிவுக்கு ஏற்ப ராமனின் கதையை அமைத்துக் கொண்டார். இவை எல்லாம் வால்மீகி ராமாயணத்துக்குப் பிறகு தோன்றியவை என்கிறார்கள்.

புராணங்கள் மொத்தம் 18. இவை அனைத்திலும் பல்வேறு மாறுதல்களுடன் ராமகதையைக் காணமுடியும். பிரம்மாண்ட புராணத்தில் காணப்படும் ராமனின் கதைதான் அத்யாத்மா ராமாயணம் என்ற பெயரில் விளங்குகிறது.

திபேத், துருக்கி, இந்தோனேசியா, ஜாவா, இந்தோ சீனா, சையாம், பர்மா முதலிய பல நாடுகள் தங்கள் நாட்டுக்கு ஏற்ப ராம கதையை அமைத்துக் கொண்டுள்ளார்கள்.

தமிழ்மொழியில் மிகப்பெரும் காப்பியங்களான சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி என்ற ஐந்தில் பிரதானமானது சிலப்பதிகாரம். இது கி.பி.மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டது.

சிலப்பதிகாரம் மதுரைக்காண்டம் புறஞ்சேரியிறுத்த காதையில் பின்வரும் வரிகளில் இளங்கோவடிகள் சொல்கிறார்-

பெருமகன் ஏவல் அல்லது யாங்கணும்
அரசே தஞ்சம் என்று அருங்கானடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போல்
பெரும் பெயர் மூதூர் பெரும் பேதுற்றதும்.

அதாவது, ராமன், சீதை, லட்சுமணனுடன் வனத்துக்கு சென்ற போது அயோத்தி நகரம் எப்படிக் காட்சியளித்த தோ அதே போன்ற காட்சிகளை புகார் நகரம் வழங்கியது என்கிறார். அயோத்தியும் ராமன் சிலம்பில் நிறைய இடங்களில் வருகிறார். அயோத்தியும் இப்படிக் குறிப்பிடப்படுகின்றது.

இதே சிலப்பதிகாரத்தில் மதுரைக்காண்டம் -ஆய்ச்சியர் குரவையில் இப்படி வருகிறது:

மூவுலகும் ஈரடியால்முறை நிரம்பாவகை முடியத்
தாவிய சேவடிசேப்பத் தம்பியொடு காண்போந்து
சோவரணும் போர்மடியத் தென்லிங்கைக் கட்டழித்த
சேவகன் சீர்கேளாத செவி என்ன செவியே
திருமால் சீர்கேளாத செவி என்ன செவியே.

மணிமேகலையில் ஒரு பாடலில் இதுபோன்று வருகிறது.

(சிலப்பதிகாரம் 12-63-66)

(ஆய்ச்சியர் குரவை-14)

நெடியோன்‌ மயங்கி நிலமிசைத்‌ தோன்றி
அடலறு மூன்னீர்‌ அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்‌
அணங்குடை அளக்கர்‌ வயிறு புக்காங்கு.

(மணிமேகலை 17-10-14)

இப்பாடலில், காயசண்டிகை யானைப்பசி என்னும் நோயால் வாடுகிறாள்., அவள் மணிமேகலையிடத்தில் தன் பசி பற்றிக் கூறும்போது, திருமால் தன் வடிவத்தை மறைத்துப் பூமியிலே இராமனாகத் தோன்றிக் கடலிலே அணை கட்டியபோது குரங்குகள் கொண்டு வந்து எறிந்த குன்றுகளை எல்லாம் கடல் விழுங்கி மேலும் மேலும் வேண்டி நின்றது போலஎன்று தன் பசிக்கு உவமை கூறுகிறாள்.

எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றில் ஒரு பாடல். இந்தப் பாடலில் ராமாயணத்தில் ஒரு முக்கியமான சம்பவம் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது.

கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வவ்விய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை யிழைப் பொலிந்தாங்கு
அறாஅவரு நகை இனிது பெற்றிகுமே

(புறம்-378)

இப்பாடலில், பசுங்குடையார் என்ற புலவர், இளஞ்செட்சென்னி என்னும் சோழ அரசனைப் புகழ்ந்து பாட அரசன் சில அணிகளைப் புலவருக்குப் பரிசாக வழங்கினான். அந்த அணிகளைக் கொண்டு போய் தம் குழந்தைகளுக்குக் கொடுத்தார் புலவர். குழந்தைகள் காலுக்கு இட வேண்டிய அணிகளைக் கைக்கு இட்டும் கைக்கு இடவேண்டியவற்றைக் காலுக்கும் இட்டு மாறி மாறி அணிந்து மகிழ்ந்தன.

இது எதுபோல இருந்தது என்றால்,ராவணன் சீதையைத் தூக்கிச் சென்றபோது அவள் தனது அணிகள் சிலவற்றை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிக் கீழே எறிந்தான். அது ருஷ்யமுக பர்வதத்தில் இருந்த குரங்குகள் நடுவில் விழுந்தது. இந்த மூட்டையை எடுத்த குரங்குகள் அந்த அணிகளை கை கால் மாற்றி இட்டு அவற்றை அணிந்து கொண்டு குதித்தன. குழந்தைகளின் செயலும் இவ்வாறு இருந்தது என்று அந்த சங்க இலக்கியம் சொல்கிறது.

எனவே, ராமனின் கதை தமிழ் மக்களுக்குப் புதியது இல்லை. கம்பனுக்கும் பலநூறு ஆண்டுகள் முந்தைய காலத்திலேயே தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்த ஒன்றாகும். அத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்ட அற்புதமான கதைக்குக் காவிய வடிவம் தந்து நம்மிடையே கம்பர் கவிச்சக்கரவர்த்தி ஆகியிருக்கிறார். கம்பராமாயணத்தின் சிறப்பு குறித்துப் பாடாத புலவர்கள் இல்லை. படித்து மெய்சிலிர்க்காத அன்பர்கள் இல்லை. தமிழ்மொழியின் பெருவரம் கம்பராமாயணம்.

Subscribe to our newsletter