ராமனின் அன்பில் திளைத்த குகன்

முனிவர்கள் அளித்த விருந்தை ராமன் ருசித்திருந்த பொழுது, குகன் என்ற பெயரை உடையவன் அங்கு வந்தான். அந்தக் குகன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன். தூய்மையான கங்கையின் துறையில் பழங்காலம் தொட்டு ஓடங்களை செலுத்தும் உரிமை பெற்றவன். பகைவர்களைக் கொல்லும் வில்லை உடையவன். மலை போன்ற திரண்ட தோள்களை உடையவன்” என்று குகனை மிகவும் அட்டகாசமாக அறிமுகம் செய்கிறார் கம்பர்.

வியாசன்

1/29/2024

கம்பராமாயணத்தில் ராமன் வனம் புகுகிறான். அவன் குகனைத் தோழமை கொண்ட செய்தியை மிகவும் பிரமாதமாக வருணிக்கிறார் கம்பர். ஏதோ திரைப்படங்களில் கதாநாயகனை அறிமுகப்படுத்துவது போன்ற வார்த்தைக் களேபரங்களுடன் எழுகிறது கம்பரின் இந்தப் பாடல் :-

ஆய காலையின், ஆயிரம் அம்பிக்கு

நாயகன், போர்க் குகன் எனும் நாமத்தான்,

தூய கங்கைத் துறை விடும் தொன்மையான்,

காயும் வில்லினன், கல் திரள் தோளினான்.

முனிவர்கள் அளித்த விருந்தை ராமன் ருசித்திருந்த பொழுது, குகன் என்ற பெயரை உடையவன் அங்கு வந்தான். அந்தக் குகன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன். தூய்மையான கங்கையின் துறையில் பழங்காலம் தொட்டு ஓடங்களை செலுத்தும் உரிமை பெற்றவன். பகைவர்களைக் கொல்லும் வில்லை உடையவன். மலை போன்ற திரண்ட தோள்களை உடையவன்” என்று குகனை மிகவும் அட்டகாசமாக அறிமுகம் செய்கிறார் கம்பர்.

பொதுவாக பௌராணிகர்கள் குகனை ஏதோ ஏழை வேட்டுவன் போல காலங்காலமாக மேடைகளில் சித்தரித்து வருகிறார்கள். ஆனால் குகன் சிருங்கிபேரம் என்ற நாட்டை ஆண்ட மன்னன். ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன். கங்கைத் துறையில் பழங்காலம் தொட்டு ஓடங்களை செலுத்தும உரிமை பெற்றவன் என்று இப்பாடலில் குகனின் மேன்மைகள் பற்றிக் கூறினாலும் நம்முடைய பௌராணிகர்கள் அவனுக்கு பரிதாபமான ஒரு தோற்றத்தைத் தரமுயற்சிப்பது இன்று வரை புரிந்து கொள்ள முடியாத விஷயம்.

ராமாயணத்தில் குகன் பாத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. வால்மீகி ராமாயணத்திலும் ராமன் குகனை தனது சகோதரனாக ஏற்றுக்கொள்கிறோன். ராமனுக்கும் குகனுக்கும் உள்ள நட்பு குறித்து கம்பர் மூன்று இடங்களில் விரிவாகக் கூறியிருக்கிறார்.

குகன் ஆண்ட சிருங்கிபேரம் காடும் நதியும் சேர்ந்த இடம். அவனுடைய குடிபடைகள் காட்டையே நம்பியிருந்த வேடுவ இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் தலைவன் இவன். குகன் அயோத்தி ராமனைப் பற்றிக் கேள்விப்பட்டு அவன் மீது மட்டற்ற அன்பைத் தனக்குள் வளர்த்து வந்தான். ஏறத்தாழ ஆண்டாள் கண்ணனின் மீது கொண்ட அன்புக்கு ஈடானதாகக் கம்பர் காட்டுகிறார்.

அயோத்தியை விட்டு ராமன் வனம் ஏகியதும் அவன் தன்னுடைய சிரங்கிபேரத்துக்கு வந்த செய்தியைக் கேள்விப்பட்டு குகன், அவனை சந்திக்கும் பொருட்டு மலைத்தேனுடன் மீனை ஆசையுடன் கொண்டு செல்கிறான். அயோத்தி மக்கள் ராமனுடனே கிளம்பி காட்டுக்கும் உடன் வருகின்றனர். அதனால் அங்கு பெருங்கூட்டம் இருக்கிறது. குகன் ராமனை சந்தித்ததில்லையாததால், லட்சுமணனை ராமர் என்று எண்ணி அவருடன் உரையாட ஆரம்பிக்கின்றான்.

தான் ராமன் இல்லையென்றும் அவனுடைய இளைய சகோதரன் லட்சுமணன் என்றும் கூறவே, உள்சென்ற குகன் ராமனை சந்தித்து தான் கொண்டு வந்த தேனையும் மீனையும் தருகிறான். பின் ராமனிடம், “நீங்கள் என்னுடன் சிருங்கிபேரத்திலேயே தங்கிவிடுங்கள்” என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறான். அதை மறுத்த ராமன், குகனிடத்தில் “நாங்கள் நால்வருடன் உன்னையும் சேர்த்து ஐவரானோம். ஆகையால், தமையனே... எங்கள் மூவரையும் எங்களை மிக்க அன்புடன் பின்தொடரும் அயோத்தி மக்களிடமிருந்து எங்களைப் பிரித்து வனவாசம் செய்ய உதவவேண்டும்” என்று கேட்கிறான். அதன்படி அயோத்தி மக்கள் யாரும் அறியாதபடி ராமர், சீதை, லெட்சுமணனை தன்னுடைய நாவாய் மூலமாக அடர் காட்டுக்குள் கொண்டு சென்று சேர்க்கிறான் குகன். இது ஒரு தருணம்.

மற்றொரு தருணத்தில், பரதன் தனது அண்ணன் ராமனைத் தேடிக்கொண்டு சிருங்கிபேரம் வந்த சமயம் அதை அறிந்த குகன், இவன் ராமனுடன் போரிட்டு அவனை அழிக்க வந்திருக்கிறான் என்று பரதனை எதிர்த்துப் போரிடக் கிளம்புகிறான் குகன். பரதன் அவனைத் தொழுது, என் அன்புத் தமையனை பார்த்தவர் நீங்கள். அவருடன் பேசியும் இருக்கிறீர்கள். நான் அவரை அழைத்துக்கொண்டு எங்கள் அயோத்திக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன் என்கிறான் பரதன். அண்ணன் எங்கே என்று பதட்டத்துடன் கேட்கிறான்.

ராமன் மீது பரதன் கொண்ட பேரன்பைப் பார்த்த குகன் மனம் நெகிழ்ந்து,

தாய் உரை கொண்டு, தாதை

உதவிய தரணி தன்னைத்

தீ வினை என்ன நீத்துச்

சிந்தனை முகத்தில் தேக்கிப்

போயினை என்ற போழ்து,

புகழினோய்! தன்மை கண்டால்

ஆயிரம் இராமர் நின் கேழ்

ஆவரோ? தெரியின் அம்மா

என்ற அருமையான உணர்ச்சி ததும்பும் பாடல் இதனால் நமக்குக் கிடைக்கிறது. அதாவது, "தாயின் வரத்தினால் , தந்தை தந்த அரசை தீவினை என்று நினைத்து, அந்த அரசை மீண்டும் இராமனிடம் தர வந்திருக்கும் உன்னைப் பார்த்தால், ஆயிரம் இராமர் உனக்கு இணையாவார்களா, தெரியவில்லை“ என்று வணங்கி நெகிழ்ந்து நிற்கிறான் குகன்.

மூன்றாவது தருணம்- நிறைவாக விடைக்கொடுத்த படலத்தில் ராமன் பட்டாபிஷகத்துக்கு குகன் வருகிறான். அங்கு ராமனிடத்தில் நிறைவாக, விடைக்கொடுத்த படலம் என்ற இடத்தில், ராமரின் பட்டாபிஷேகத்திற்கு குகன் வருகிறான். அங்கு ராமரிடத்தில் “நாவாய் வேட்டுவன் நாய் அடியேன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான். ராமனும் குகனுக்கு பரிசு பொருட்கள், ஆடை ஆபரணங்கள் அனைத்தையும் கொடுத்து அவனை கௌரவிப்பதாக கூறப்பட்டுள்ளது.

பணி மொழி கடவாதான், பருவரல் இகவாதான்,

பிணி உடையவன் என்னும் பிரிவினன், விடைகொண்டான்;

அணி இழை மயிலோடும் ஐயனும் இளையோனும்

திணி மரம், நிறை கானில் சேணுறு நெறி சென்றார்.

என்ற பாடலும் குகனின் அன்பை அற்புதமாகப் படம் பிடித்துக் காண்பிக்கும் அருமையான பாடலாகும்.

இப்படி காவிய நாயகன் ராமனின் பேரன்பைப் பெற்றவன் குகன். மிகப்பெரிய நாட்டின் தலைவனாக இருந்தும் வீரம் பொருந்திய பெருங்கூட்டத்தின் தலைவனாக இருந்தும் ராமன் மீது கொண்ட பேரன்பால் தன்னைச் சுருக்கிக் கொண்டு ராமனைத் தொழுது நின்று அவனுக்குத் தோளுக்குத் தோள் நின்ற சகோதரனாக, ராமனாலேயே “குகனுடன் ஐவரானோம்” என்று அன்பு ததும்ப அழைக்கப்பட்டவன்.

கம்பராமாயணத்தில் குகப்படலத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் அன்பைச் சுமந்து வருபவை. அன்பின் தத்துவத்தை சாரமாகத் தருபவை. சென்ற வழியில் எல்லாம் அன்பை விதைத்துச் சென்றவன் ராமன். அவனுடைய அன்புக்குப் பாத்திரமான எத்தனையோ பாத்திரங்களில் குகன் பிரதானமானவன் என்பது கம்பனின் ஒவ்வொரு பாடலிலும் விளங்கும்.

Subscribe to our newsletter