இலங்கை: இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்

இராஜ கோபுரத்துடனான இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு 1998 மற்றும் 2010ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மீண்டும் ஆலயம் புனரமைக்கப்பட்டு இந்த ஜனவரி மாதம் (21) 2024ல் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது.

ர.அ. பிரசாத்

1/22/2024

புராதன விக்கிரகமான ஆதிமூல அம்மன் சிலையினை அக்காலத்தில் அங்கு வாழ்ந்த சங்கப்பிள்ளை எனும் பூசாரி நாள்தோறும் வழிப்பட்டு வந்துள்ளார். இவ்விக்கிரகம் ஸ்ரீ முத்துமாரியம்மன் என எண்ணிய அவர், அதனை தன்னால் இயன்றளவு பரிபாலனம் செய்து வரும் நாளில் ஏதோ ஒரு காரணத்தில் திடீரென இரண்டு கண்களிலும் கண்பார்வையை இழந்த ரெங்காயி என்ற பெண், அம்மன் மீது அளவற்ற பக்தியை கொண்டு தனக்கு மீளவும் இரு கண்களில் பார்வை கிடைக்க வேண்டும் என எண்ணி, நாள்தோறும் நீராடி அம்மனை தொடர்ந்து 48 நாட்கள் விளக்கேற்றி வழிபாட்டு வந்துள்ளார்;. இவ்விதம் இந்த மரத்தடிக்கு வருகைத் தந்து, கல் வடிவிலான அம்மன் சிலை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை சுத்தம் செய்து, அம்மனுக்கு விளக்கேற்றுவதை ரெங்காயி தனது அன்றாட பணியாக தொடர்ந்துள்ளார். இந்த பூவரச மரத்தடியில் காணப்பட்ட புற்றில் பாம்பொன்று இருந்துள்ளதாகவும், அந்த பாம்பை ரெங்காயி தடவிய போதிலும், பாம்பு அவரை தீண்டாது எனவும் கூறப்படுகின்றது. இவ்வாறு 48 நாட்கள் தொடர்ந்து விளக்கேற்றி வழிபாடுகளை நடாத்தி வந்த ரெங்காயிக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது.

பூவரச மரத்திற்கு அருகில் காணப்பட்ட நான்று ஈரப்பலா மரங்களும் இயங்கையாகவே சரிந்து வீழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து, பூவரச மரத்திற்கு அருகில் ஆலயமொன்றை நிர்மாணிக்க பிரதேச மக்கள் தீர்மானித்தனர். இந்த நிலையில், கொட்டகையொன்றை அமைக்க சங்கப்பிள்ளை பூசாரி முயற்சி செய்துள்ளார். எனினும், இந்த பூவரச மரம் மற்றும் கல் சிலை அமைந்துள்ள காணிக்கு சொந்தமான மொஹமட் ஸ்மெயில் மற்றும் காசிம் ஸ்மெயில் ஆகியோர் எதிர்ப்பை வெளியிட்டனர். தமது காணியில் ஆலயத்திற்கான கொட்டகையை அமைக்க வேண்டாம் என சங்கப்பிள்ளை பூசாரியை தடுத்தனர். அன்றைய தினம் இரவு காணி உரிமையாளர்களின் கனவில் அம்மன் வந்துள்ளதாக கூறப்படுகின்றது. அடுத்த நாளே ஆலயத்திற்கான கொட்டகையை அமைக்க காணி உரிமையாளர்கள் அனுமதி வழங்கியுள்ளதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

சிங்கராஜ வனத்தின் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள அம்மன் ஆலயமாக இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் விளங்குகின்றது.

நான்கு புறங்களும் சிங்கராஜ வனம் சூழ, இயற்கை நீர்வீழ்ச்சியை நோக்கியவாறு முழுமையான இயற்கை அன்னையின் புடைசூழ மலையகத்தில் அமையப்பெற்ற தலமாக இந்த ஆலயம் விளங்குகின்றது.

இலங்கையின் பண்டைய காலம் முதல் பல அம்மன் ஆலயங்கள் அமைக்கப்பட்டு மக்களால் போற்றப்பட்டு வருகின்றன.

அவ்வாறான ஆலயங்களில் இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் பிரசித்தி பெற்ற ஒரு ஆலயமாகும்.

இந்த ஆலயத்தில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளமையினால், உள்நாட்டு பக்தர்கள் மாத்திரமன்றி, வெளிநாட்டு பக்தர்களும் இங்கு வருகைத் தருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயமானது, இற்றைக்கு நூற்றாண்டுகள் கடந்த மிகவும் பழைமையான ஆலயமாகும்.

இந்த ஆலயத்தின் மூல மூர்த்தியாக ஸ்ரீ முத்துமாரியம்மன் வீற்றிருந்து, பக்த அடியார்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.

சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் மொஹமட் ஸ்மெயில் அலிக்கு சொந்தமான ஒரேன்ஜ்பீல்ட் தோட்டத்திலுள்ள காணியிலேயே, புராதன ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் காணப்பட்டதாகவும், அங்கிருந்த பூவரச மரத்தின் அடியில் இருந்த புற்றொன்றில் புராதன அம்மன் விக்கிரகம் காணப்பட்டதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இவ்விக்கிரகமே காலப் போக்கில் பல மாறுதல்களுக்கு உட்பட்டு கும்பாபிஷேகங்கள் நிகழ்த்தப்பட்டு தற்போது காணப்படும் ஸ்ரீ முத்துமாரியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பகுதியில் சிறிய மடாலயமொன்று நிர்மாணிக்கப்பட்டு வழிபாடுகள் நடாத்தப்பட்டு வந்துள்ளன. இந்த அம்மன் சக்தி மற்றும் பெருமை நாளா திசைகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. நாளாந்தம் பூஜைகளை செய்ய பக்தர்கள் ஆலயத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். இந்த ஆலயத்தை பிற்காலத்தில் முத்துச்சாமி பண்டாரம் நிர்வகித்து வந்துள்ளார். அதன்பின்னர், ஆலயத்தை 1940ம் ஆண்டு காலப் பகுதியில் சிவத்திரு ஏ.கே.சுப்பையா பொறுப்பேடுத்து நிர்வாகத்தை நடாத்தி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, நாளாந்தம் காலை, நண்பகல், மாலை என மூன்று வேளை பூஜைகள் நடாத்தப்பட்டு வந்துள்ளன.

அதன்பின்னரான காலத்தில் ஆலயத்தின் பெருமை நாட்டின் நான்கு திசைகளுக்கும் பரவ ஆரம்பித்தது. ஆலயத்தை நோக்கி வருகைத் தரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்தது. சிவத்திரு ஏ.கே.சுப்பையா என்பவரின் பணி 1970ம் ஆண்டு வரை தொடர்ந்துள்ளதாக பிரதேசத்தில் வாழும் முன்னோர்கள் கூறுகின்றனர். 1970ம் ஆண்டுகளுக்கு பின்னரான காலத்தில் சிவத்திரு சுப்பையா என்பவர் ஆலயத்தை பொறுப்பெடுத்து நடாத்தி வந்துள்ளார். அதன்பின்னரான காலத்தில் ஸ்ரீ முருகன் ஸ்தாபனத்தினர் ஆலயத்தின் நிர்வாகத்தை பொறுப்பேடுத்து நடாத்தியுள்ளதுடன், ஆலயத்தின் திருப்பணிகள் பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்த காலக் கட்டத்தில் இறக்குவானை பரியோவான் பாடசாலையின் ஒத்துழைப்பும் ஆலயத்திற்கு கிடைத்துள்ளது. பாடசாலை மாணவர்கள் ஆலயத்திற்கு பாரிய உதவிகளை வழங்கியுள்ளனர். ஒவ்வொரு வெள்ளிகிழமைகளிலும் பாடசாலை மாணவர்கள் ஆலயத்திற்கு காலை வேளையில் சென்று வழிபாடுகளை நடாத்த ஆரம்பித்தனர். பாடசாலை மாணவர்கள் சுமார் ஒரு மணித்தியாலம் அம்மன் புகழ் பாடி வழிபாடுகளை நடாத்த ஆரம்பித்ததை அடுத்து, ஆலயத்திற்கு வருகைத் தரும் அடியார்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்தது. அதன்பின்னராக காலத்தில் இறக்குவானை மற்றும் அதனை சூழவுள்ள பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களும், இந்த ஆலயத்தை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். ஆலயத்தின் பெருமை மேலும் மேலும் அதிகரித்தது. தமது வேண்டுதல்கள் நிறைவேறியதை அடுத்து, இறக்குவானை ஸ்ரீமுத்துமாரியம்மன் மீதான பக்தி வலுப் பெற்றது. ஆலயத்திற்கு நாளா திசைகளிலும் இருந்து நிதியுதவிகள் கிடைக்கப் பெற்றன. இதையடுத்து, ஆலயம் புனர்நிர்மானம் செய்யப்பட்டு 1976ம் ஆண்டு முதல் தடவையாக கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வில் இன, மத, மொழி வேறுபாடுகளை கடந்து, அனைத்து மக்களும் கலந்துக்கொண்டுள்ளனர். ஆலயத்திற்கு வருகைத் தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமானதை தொடர்ந்து, சமய பெரியார்கள் ஆலயத்திற்கு வரவழைக்கப்பட்டு, சமய போதனைகள் நடத்தப்பட்டன. அம்மன் புகழ் அனைத்து திசைகளுக்கும் பரவ ஆரம்பித்தது. 1970ம் ஆண்டு காலப் பகுதியில் நாட்டின் தலைசிறந்த ஈழத்து நாதஸ்வர கலைஞர்கள் ஆலயத்திற்கு வரவழைக்கப்பட்டு, இசை நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. ஈழத்து நாதஸ்வர கலைஞர்களான சிவத்திரு சின்னராசா, சிவத்திரு சந்தானகிருஸ்ணன் குழுவினரது நாதஸ்வர இசை நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. அத்துடன், தமிழக இசை மேதையான பித்துக்குளி முருகதாஸ் அவர்களது பக்தி பாடல் இசை நிகழ்ச்சியும் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆலயத்தின் சப்பரத் திருவிழாவானது யாழ். இன்னுவில் பாஞ்சாட்சர குழுவினரது அலங்காரத்துடன் நகரம் வளம் வந்து அம்மனது திருவிழா மெருகூட்டப்பட்டது. இறக்குவானை நகரம் முழுவதும் நாளா திசைகளிலும் வாழும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழா கண்டு அம்மன் அருள் பெற்று தம் நேர்த்திகளை செலுத்தி இன்று வரை அம்மன் வழிபாட்டை தொடர்ந்து வருகின்றமை இறக்குவானை நகரில் காணக்கூடிய ஓர் சிறப்பம்சம் எனலாம்.

இவ்வாறு சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்த இவ்வாலயம் 1981ம் ஆண்டு சிவத்திரு. ஜி.பெருமாள் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின்னர், ஆலயம் யாரும் எதிர்பாராத அளவிற்கு பாரியளவில் புனரமைக்கப்பட்டது. பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்க, ஆலயத்தின் வளர்ச்சியும் அவ்வாறே அதிகரிக்க தொடங்கியது.

இந்த நிலையில், 1992ம் ஆண்டு ஆலயத்தின் புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், ஆலயத்தின் பணிகளுக்கு பல தடவைகள் இடையூறுகள் ஏற்பட்டன. எனினும், ஆலய தர்மகர்த்தாவாக செயற்பட்ட சிவத்திரு ஜி.பெருமாள் மற்றும் ஆலய குருக்கள் சிவஸ்ரீஆ.மகேந்திர சர்மா ஆகியோரின் விடா முயற்சியுடன் ஆலயத்திற்கு இராஜ கோபுரம் நிர்மாணிக்கப்பட்டது. சிங்கராஜ வன அடிவாரத்தை அலங்கரிக்கும் வகையில் இந்த இராஜ கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இராஜ கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக தமிழகத்தில் இருந்து பல சிற்ப கலைஞர்களை ஆலய தர்மகர்த்தாவாக செயற்பட்ட சிவத்திரு ஜி.பெருமாள் அழைத்து வந்துள்ளார். தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை கலியப்பெருமாள் சோமசுந்தரம் ஸ்தபதி தலைமையில் இந்த ஆலயம் ஆகம முறைப்படி புனரமைக்கப்பட்டது. இரத்தினபுரி மாவட்டத்தில் இராஜ கோபுரத்துடன் இருந்த ஒரு சில ஆலயங்களில், இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் முதன்மை இடத்தில் விளங்கியது.

இராஜ கோபுரத்துடனான இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு 1998 மற்றும் 2010ம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மீண்டும் ஆலயம் புனரமைக்கப்பட்டு இந்த ஜனவரி மாதம் (21) 2024ல் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது.. இராஜகோபுரம், விமானம், எழுந்தருளி மூர்த்திகள், வைரவர், கொடி ஸ்தம்பம், பலிபீடம் நந்தி, நவக்கிரகங்கள், சண்டேஸ்வரர், ஐயப்பர் பீடம், விஷ்ணு பீடம், தீர்த்தக்கிணறு உள்ளிட்ட பல அம்சங்களை கொண்ட இரத்தினபுரி மாவட்டத்தின் தலைசிறந்த ஆலயமாக இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் விளங்குகின்றது.

மாசி மகத்தினை தீர்த்த நாளாக கொண்டு இந்த ஆலயத்தில் மகோற்சவம் நிகழ்த்தப்படுகின்றது. கற்பூரச்சட்டி திருவிழா, வேட்டைத் திருவிழா, சப்பரத் திருவிழா, தேர்த் திருவிழா, தீர்த்தத் திருவிழா, சங்காபிஷேகம், பூங்காவனம், வைரவர் மடை என மகோற்சவத்தில் இடம்பெறும் விழாக்கள் அம்பிகையின் விழாவை பறைசாற்றுவதாக அமைகின்றது. சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் முத்தேர் பவனி வரும் ஓர் ஆலயம் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயமே ஆகும்.

இறக்குவானை அம்பிகையை சரணடைந்தால், அனைத்தும் வளம் பெறலாம்.

R. A. Prasad

R. A. Prasad

Subscribe to our newsletter