Alwarthirunagari Perumal Temple | ஆழ்வார்திருநகரி பெருமாள் கோயில்
கோயில்களும் வரலாறுகளும் : அறிந்ததும் அறியாததும். I ஆழ்வார்திருநகரி பெருமாள் கோயில்: அறிந்ததும் அறியாததும்


தென் பாண்டி நாட்டில் திருச்செந்தூர் அருகே தாமிரபரணிக் கரையில் இருக்கும் ஆழ்வார்திருநகரி ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசத்தில் ஒன்றாகும்.
நம்மாழ்வார் அவதரித்த இத்தலம் நதிக்கரையில் இருக்கும் நவதிருப்பதிகளில் ஒன்றாக, குருவுக்குரிய (வியாழன்) தலமாக உள்ளது.
‘கூழ் குடித்தாலும் குருகூரில் வசித்து திருவடி சேர்’ என்றொரு பழமொழி உண்டு. இந்த குருகூரின் மற்றொரு பெயர் ஆழ்வார் திருநகரி என்பதாகும்.


இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் என திருப்பெயர் பெற்றார்.
108-வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோவில், நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
ஆதிநாதர் கோவில் ஒரு காலத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையிலிருந்தது. பின்னர் கோவிலையும் ஊரையும் பெரிய தாக்கும் பொருட்டு வடக்கே கரையை தள்ளி வைத்து அலகல்லும் படித்துறையும் கட்டினர். ஸ்ரீ ஆதிநாதர் கோவிலும் புளியமரமும் அவற்றை ஒட்டி இருந்தன.
நம்மாழ்வார் தங்கியிருந்த புளியமரம் இங்கு மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இம்மரம் ஏழு கிளைகளோடு உள்ளது. இரவில் உறங்காத காரணத்தினால் இம்மரம் உறங்காப்புளி’ என்றழைக்கப்படுகிறது.
அப்புளி இன்றும் பொந்தாயிரம் புளியாயிரம் என்ற பழமொழிக் கொப்ப பல பொந்துகளுடன் முதிர்ந்துள்ளது: இன்றும் ஸ்ரீ நம்மாழ்வாருக்கு பிடிக்காத காரியங்கள் இந்த தலத்தில் நடந்தால் இப்புளிய மரத்திலிருந்து நிணநீர் வடியும் என நம்பப்படுகிறது.
ஆழ்வார்கள் என்றாலே அது ஸ்ரீ நம்மாழ்வாரைத்தான் குறிக்கும். சின் முத்திரையோடு சிறு குழவியாக தவழ்ந்து வந்து இந்தப் புளியமரத்தின் பொந்தில் அமர்ந்த நம்மாழ்வார் 16 ஆண்டுகள் கழித்து வாய் திறந்து திருவாய் மொழிமலர்ந்தருளினார். வேதத்தின் சாரத்தை திருவாய் மொழியாக நம்மாழ்வார் வடித்துக்கொடுத்த இடம் இது.
ஸ்ரீராமன் மட்டும் ஆதிசேடன் மடியில் அமர்ந்தால் போதுமா, அர்ச்சாவதார மூர்த்திகளான தாங்களும் அமர வேண்டாமோ என்று நினைத்து பல திவ்யதேசங்களில் எழுந்தருளியுள்ள எம்பெருமான்கள் புளியமரத்தின் இலைகளிலும், கிளைகளிலும் அமர்ந்துகொண்டு எம்மைப் பாடுக, எம்மைப்பாடுக என்று நான் முந்தி நீ முந்தி என்று நம்மாழ்வாரிடம் பாடல் கேட்டதாக ஐதீகம்.
ஸ்ரீ நம்மாழ்வாரும் எந்த திவ்ய தேசத்திற்கும் நேரில் செல்லாது இந்தப் புளியமரத்தின் பொந்தில் இருந்து கொண்டே திவ்ய ஸ்தலங்கட்கு பாசுரம் அருளினார்.


தாமிரபரணி ஆற்றங்கரையில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் மூன்று பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது. பிரகாரத்தில் ராமர், வேணுகோபாலன், கருடன், திருப்புளியாழ்வார், நரசிம்மர், வராகப்பெருமாள், திருவேங்கடமுடையான், நாத முனிகள் ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளது.
பெருமாள் சன்னதியிலிருந்து சுமார் 60 அடி தூரம் தள்ளி ஆழ்வார் சன்னதி உள்ளது. பெருமாள் விமானத்தையும் விட ஆழ்வார் சன்னதி விமானம் சற்று பெரியது.
இங்கு ஆதிநாதரைவிட நம்மாழ்வாருக்குத்தான் ஒரு படி ஏற்றம். ஊரின் பெயரையே மாற்றிவிட்ட பெருமை அவருக்கு உண்டல்லவா? ஆழ்வார் தங்கித்தவம் செய்த புளியமரம் 7 கிளைகளோடு உள்ளது. ஆழ்வார் கோவிலைச் சூழ இருந்த பகுதிக்கு ஸ்ரீ பராங்குச சதுர்வேதி மங்கலம் என்பதே பெயர். சுமார் 700 வருடங்களுக்கு முன்பு வரை இப்பெயரே பிரசித்தமாயிருந்தது.


சங்கு சக்கரத்துடன் கருடன்
கருடன் இங்கு வழக்கமான கூப்பிய நிலையில் இல்லாமல் அபயஹஸ்தம், நாகர், சங்கு, சக்கரத்துடன் இருக்கிறார். நகரின் பழைய பெயர் திருக்குருகூர். நம்மாழ்வார் தம் திருவாய்மொழியில் பல இறுதிப் பாசுரங்களில் ‘குறுகூர்ச் சடகோபன்’ என்றே தன் பெயரைக் குறிப்பிடுகிறார்.
இத்தலத்திற்கு அருகாமையிலமைந்த திருக்கோளுரில் பிறந்த மதுரகவியாழ்வார் வடநாட்டிற்கு யாத்திரை சென்றபோது திடீரென்று அவருக்குத் தென்திசையில் ஒரு ஜோதி தோன்றி அவரைக் கவர்ந்திழுக்க இது விந்திய மலையில் தோன்றக் கூடுமென நினைத்த அவர் அங்குவந்து கண்டால் மேலும் தெற்கே தள்ளித் தெரிய இறுதியில் இவ்விடம் வந்து நம்மாழ்வாரின் அவதார மேன்மையைத் தெரிந்து வேறொன்றும் நானறியேன்” என்று நம்மாழ்வாருக்கு அடிபணிந்து உய்தலே தொழிலெனக் கொண்டு அவரால் மொழியப் பட்ட திருவாய் மொழியினை ஏட்டில் எழுதலுற்றார்.
நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை தொகுக்க வந்த நாதமுனிகள் மதுரகவியின் வம்சத்தாரிடம் கண்ணி நுன் சிறுத்தாம்மைப் பெற்று அதை பன்னீராயிரம் முறை ஜெபித்து ஸ்ரீநம்மாழ்வாரே பிரத்யட்சமாகி ஒரு திரையிட்டு அதனுள் அமர்ந்து கொண்டு
நாலாயிரம் பாக்களையும் அருள நாதமுனியே அவற்றை எழுதி தமிழன்னைக்கு பக்தி அணிகலனாகச் சூட்டினார்.
இவ்வூரில் வடகரையில் உள்ள காந்திஸ்வரத்தில் கருவூர்ச் சித்தர் என்னும் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார் அவரிடம் ஒரு நாய் இருந்தது. அது தினந்தோறும் குருகூர்த் தெருவிற்கு வந்து ஸ்ரீ வைணவர்கள் உணவருந்திவிட்டு எறிந்த எச்சில் இலையில்
உள்ள மீத உணவை உண்டுவந்தது. ஒரு நாள் அவ்விதம் எச்சில் இலையுணவை அருந்திவிட்டு நதியைக் கடந்து வரும்போது ஒரு நீர்ச்சூழல் ஏற்பட்டு அதனின்றும் மீள முடியாமல் உயிர் துறக்க நேர்ந்தது. அது உயிர் துறக்கும் சமயம் அதன் கபாலம் வெடித்து மாபெரும் ஜோதியாய் எழுந்து விண்ணுடன் கலந்தது. ஆகா இத்தகைய பேறு தமக்கு வாய்க்கவில்லையே என்று கருதிய கரூவூரார்
“வாய்க்குங் குருகைத் திருவீதி எச்சிலை வாரியுண்ட நாய்க்கும் பரமபதமளித்தாய் அந்த நாயோடிந்தப்பே ய்க்குமிட மளித்தாற்பழுதோ பெருமாள் மகுடஞ்சா ய்க்கும் படிக்கு கவி சொல்லு ஞானத் தமிழ்க்கடலே”
என்று பாடினார்.

