சங்கையில் சழக்கு இலன் – சம்பாதி
சீதையைத் தேடுவதற்கும், சீதையை அடையாளம் காண்பதற்கும் ராமனிடம் கணையாழி பெற்றுப் புறப்பட்டான் அனுமன். உடன் ஜாம்பவான்- இன்னும் பல வானரங்கள்.
இன்னும் பல வானரங்கள். அவன் சென்ற குழுவின் தலைவன் அங்கதன். வாலியின் மகன். இவர்களுக்குத் தரப்பட்டது ஒரு மாதகாலக் கெடு. இவர்கள் சென்றது தென்திசையில்.
இந்தக் குழு விந்தியமலையடிவாரம் சென்று சேர்ந்தது. அங்கெல்லாம் சீதையைத் தேடினார்கள். அங்கிருந்து நர்மதை ஆற்றைக் கடந்து ஹேமகூட மலையைச் சென்றடைந்தார்கள். இந்த மலையின் அமைப்பையும் சூழலையும் கண்டு ஒருவேளை இதுதான் ராவணனின் இருப்பிடமாக இருக்குமோ? இங்குதான் சீதாபிராட்டியை ராவணன் ஒளித்து வைத்திருக்கிறானோ?
வானரப்படை அந்த மலை மீது ஏறி அதகளம் செய்தனர். இதனால் அந்த மலையிலிருந்து யானைகளும், யாளிகளும் அகன்று ஒடின. சிங்கங்கள் அஞ்சி ஓடின. பாம்புகள் ஒன்றில்லாமல் அந்தப் பிரதேசத்தை விட்டு வேறு எங்கோ ஓடின. அங்கும் சீதையை அவர்களால் காண முடியவில்லை. அங்கு எந்தப் பிராணிகளோ தாவரங்களோ காணப்படவில்லை. கற்களும் பொடியாக மண்ணோடு கலந்திருந்தன.
வானரங்களுக்கு கோடையின் வெய்யில் தாங்கவில்லை. புழுப்போலத் துடித்தனர். அப்போது அங்கு அவர்கள் ஒரு பாதாள குகையைக் (பிலம்) கண்டனர். அதற்குள் இறங்கித் தேடிப் பார்த்த போது அங்கொரு நகரத்தைக் கண்டனர். மீண்டும் சிலர் இது தான் இராவணன் சீதையை சிறை வைத்துள்ள இடம் என்று நினைத்தனர். அங்கு ஓர் அழகிய மண்டபத்தில் சுயம்பிரபை என்ற பெண் தவம் செய்து கொண்டு இருந்தாள். வானரப்படையின் இரைச்சலால் தவம் கலைந்து கண்விழித்துப் பார்த்தாள். பின்னர் அனுமனை பார்த்து, “தாங்கள் யார்?” என வினவினாள். நாங்கள் சுக்ரீவனாலும் ராமனாலும் அனுப்பி வைக்கப்பட்ட சேனை. என் பெயர் அனுமன் என்றார். பிறகு அனுமன் சுயம்பிரபை குறித்துக் கேட்டான்.




“முன்னொரு காலத்தில் தேவலோகத்தை சேர்ந்த மயன் என்பவன் இங்கு அழகிய ஊர் ஒன்றை நிர்மாணித்தான். அவன் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து பிரம்மாவிடம் வரம் பெற்வன். அத்துடன் தெய்வப்பெண்ணான ஹேமையுடன் தான் அமைத்த அழகிய நகரில் கூடா ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தான். அவர்கள் இருவருக்கும் நான் துணை புரிந்தேன். மயன் ஹேமையுடன் இருப்பதாக நாரத முனிவர் இந்திரனிடம் கூறினார். இதனால் கோபமடைந்த இந்திரன் மயனைக் கொன்று விட்டு ஹேமையை தேவலோகத்திற்கு அனுப்பிவிட்டான். என்னை இந்தப் பாதாளத்திலேயே இருக்குமாறு சபித்தான். இராமரின் தூதுவனான அனுமன் விமோசனம் தருவான் எனக் கூறிவிட்டு சென்றார். நான் தங்களுக்காகத் தான் இத்தனை நாட்கள் தவம் செய்து கொண்டு இருந்தேன். என் சாபத்திலிருந்து மோட்சம் அளிக்கவேண்டும் என்று வேண்டினாள். அனுமன் விஸ்வரூபத்தை எடுத்து, அப்பாதாளத்தை வேருடன் பிடுங்கி கடலில் வீசி விட்டு சுயம்பிரபைக்கு அங்கிருந்து மோட்சத்தை அளித்தான். சுயம்பிரபை தேவலோகத்தை சென்றடைந்தாள்.
வானரங்கள் அனைவரும் அந்தப் பாதாளத்தில் இருந்து வெளியில் வந்தனர். அருகில் ஒரு பொய்கையைக் கண்டனர். அங்கு நீரை அருந்தியும், சோலையிலிருந்த தேன், காய், கனிகளையும் பசியாற உண்டு பொய்கைக் கரையில் படுத்து உறங்கினார்கள். அப்போது அங்க துமிரன் என்னும் பெயர் கொண்ட கொடிய அசுரன் ஒருவன் வந்து, தனக்கு சொந்தமான இந்த பொய்கையில் உறங்கும் வானரங்கள் யார் கேட்டவாறே அங்கதனின் மார்பில் அடித்துத் தூக்கினான். உறக்கம் கலைந்து எழுந்த அங்கதன் தன்னைப் பிடித்துத் தூக்கிய அசுரனைப் பார்த்து, ஒருவேளை இவன்தான் ராவணனோ என்று எண்ணி துமிரனை ஓங்கிஅறைந்தான்.
வலிமையுடன் அங்கதன் அடித்த அடியின் வேகம் தாளாமல் துமிரன் அந்த இடத்திலேயே விழுந்து இறந்தான். இந்த சந்தடி கேட்டு மற்ற வானரங்களும் தூக்கம் கலைந்து எழுந்தனர். அங்கதனிடம், இவன் யார் என்று அனுமன் கேட்க, அவன் தனக்குத் தெரியாது என்றான். ஒருவேளை ராவணனாக இருக்குமோ என்ற ஐயத்தில் அடித்தேன். இவன் இறந்து விட்டான் என்றான். அப்போது ஜாம்பவான், இவன் ராவணன் இல்லையென்றும், இவன் பெயர் துமிரன் என்றும் இவன் இந்தப் பொய்கை தனக்கு உடமை என்று எண்ணி இங்கு தங்க வரும் அனைவரையும் மாய்த்துக் கொண்டிருந்தவன் என்றும் கூறினான்.
வானரசேனை மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு, பெண்ணை நதிக்கரையை அடைந்தனர்.அங்கிருந்து பெருங்காடு ஒன்றடைந்து, தொடர்ந்து பற்பல மலைகள், காடுகள் என்று கடந்து சென்றனர். அங்கிருந்து விதர்ப்ப நாடு சென்று அங்கு அந்தண சிறுவர்கள் வேடம் தாங்கி நகரெங்கும் சீதையைத் தேடியலைந்தனர். பிறகு அங்கிருந்து பாண்டுமலை என்ற இடத்துக்கும் இறுதியில் கோதாவரி என்னும் நதியையும் அடைந்தனர். இந்த ஆற்றைக் கடந்து சோனை நதியைச் சென்றடைந்து அங்கிருந்து குலிந்த நாடு எனப்படும் மேலைக் கடற்கரை நாட்டைக் கடந்து கொங்கணப் பிரதேசத்தின் அருந்ததி மலையை அடைந்து, அதனையும் கடந்து திருவேங்கட மலையை வலம் வந்து பின்னர் தொண்டை வளநாட்டை அடைந்தனர். அங்கும் சீதையைக் காணாமல் இனி காண்பதற்கு கடல் அன்றி வேறு நிலப்பரப்பு எதுவும் இல்லாமல் போனதால் ஊக்கம் தளர்ந்து இறுதி நிலையை அடைந்தது போலச் சோர்வடைந்தனர்.
அதற்கு மேல் அவர்களுக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை. தென்கடலை ஒட்டியிருந்த மகேந்திரமலை என்று சுக்ரீவன் குறிப்பிட்ட மலைப்பகுதியை அடைந்து எதிரே பரந்து விரிந்து கிடந்த கடற்பகுதியைக் கண்டனர். வானர வீரர்கள் அனைவரும் சீதாபிராட்டியைக் கண்டு பிடிக்க முடியாமல் வருந்தி மனம் சோர்ந்தனர். மன்னன் சுக்ரீவன் விதித்த ஒரு மாதக் கெடுவும் முடிவடைந்த நிலையில், சீதாபிராட்டியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்னும் சேதி கேட்டு ராமன் உயிர் வாழமாட்டான். மன்னன் சுக்ரீவனும் நம்மைத் தண்டிப்பான் என்று வருத்தம் கொண்டனர்.
'அருந் தவம் புரிதுமோ? அன்னது அன்றுஎனின்,
மருந்து அரு நெடுங் கடு உண்டு மாய்துமோ?
திருந்தியது யாது? அது செய்து தீர்தும்' என்று
இருந்தனர் - தம் உயிர்க்கு இறுதி எண்ணுவார்’.
சீதாப்பிராட்டியைக் கண்டுபிடிக்காமல் எப்படி நாடு திரும்புவது? இங்கேயே தங்கி தவம் செய்வோமா அல்லது கொடிய நஞ்சை அருந்தி உயிர்களைப் போக்கிக் கொள்வோமா? என்ன செய்யப் போகிறோம் என்று கவலையுற்றனர்.


அப்போது அங்கதன் மிகுந்த வருத்தத்துடன் எழுந்து நின்று, சீதாபிராட்டி, இந்த உலகின் எந்த மூலையிலிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து ராமபிரானிடம் ஒப்படைப்பதாக ஆணையிட்டுக் கிளம்பினோம். இன்று வரை நாம் ஏற்றுக் கொண்ட காரியத்தை முடிக்கவில்லலை. இதனால் நிந்தனைக்கு ஆளாகியிருக்கிறோம். நமக்குக் கொடுக்கப்பட்ட காலவரம்பும் கடந்து போனது. இனி நம் காரியம் கைகூடுமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, எப்போதும் வாக்கை உயிர்போல மதிக்கும் நமக்கு இனி உயிரைத் தாங்கிக் கொண்டு வாழ்வதற்குத் தகுதியில்லை. ஏவிய காரியத்தை முடிக்கவில்லை என்று எந்தையும் நம் அனைவரையும் தண்டிப்பான். எம் இறைவன் ராமபிரானும் மனம் வருந்துவான். இதையெல்லாம் தாங்கி உயிர்வாழ எனக்கு விருப்பமில்லை. எனவே நான் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்” என்றான்.
''நாடி நாம் கொணருதும் நளினத்தாளை, வான்
மூடிய உலகினை முற்றும் முட்டி என்று
ஆடவர் திலகனுக்கு அன்பினார் எனப்
பாடவம் விளம்பினம்; பழியில் மூழ்குவோம்.”
என்று அவன் வார்த்தைகளைக் கம்பன் விளக்குகிறான். அங்கதனின் வார்த்தைகளைக் கேட்ட கரடிகளின் அரசன் ஜாம்பவான், “உருவிலும் வலிமையிலும் மலை போன்ற தோள்வலி கொண்ட வீரனே, நீ இறந்த பிறகு நாங்கள் மட்டும் அழுதுகொண்டு இருப்போமா? அரசகுமாரா, நீ சொல்வது போல இனி நாம் உயிர்வாழ்ந்து என்ன பயன்? எங்களுக்கு ஒரு உறுதிமொழி வேண்டும். நாங்கள் இறந்த பிறகும் நீ உயிர் வாழவேண்டும் என்பது எங்கள் விருப்பம்” என்றான்.
“நீங்கள் அனைவரும் இறந்தபிறகு நான் மட்டும் உயிருடன் நாடு திரும்புவேனா? நாம் அனைவரும் இங்கு இறந்தால் அந்தச் செய்தி என் தாயார் தாரைக்கும் சிற்றப்பன் சுக்ரீவனுக்கும் சென்று சேரும். அதைக் கேட்டு அவர்கள் உயிரிழப்பார்கள். இதன் விளைவாக ராம லட்சமணர்களும் உயிர் துறப்பார்கள்.இந்த செய்தி அயோத்தி சென்றடையும். அங்கு பரதன் முதலானோரும் உயிரை விடக்கூடும். இதன் விளைவாய் அவன் தம்பியும் தாய்மார்களும், ஏன் அயோத்தி மக்களுமே மடிந்து போவார்கள். ஜானகித் தாயின் பெயரால் இத்தனை அழிவும் நேருமே” என்று அழுதான் அங்கதன்.
“நீ உயிருடன் இருந்தால் எங்கள் மரணச் செய்தியை கிஷ்கிந்தைக்கு எடுத்துச் செல்லலாம். மேலும் உன்னையும் சுக்ரீவனையும் தவிர கிஷ்கிந்தையின் அரச பதவிக்கு உரியவர் யாருமில்லை என்பதாலேயே உன்னை உயிர் பிழைக்கச் சொன்னேன் மைந்தனே” என்றான் ஜாம்பவான்.
இவர்களுடைய உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்த அனுமன், “இன்னும் நாம் மூவுலகங்களிலும் பிராட்டியைத் தேடி முடிக்கவில்லை. வலிமை இருந்தும் நம்மால் தேட முடியவில்லை. பிராட்டியை எவ்வகையிலும் தேடிக் கொண்டு வரவேண்டும் என்பதே நம் அரசன் சுக்ரீவனின் ஆணை. ஆனால் குறித்த காலத்துக்கள் வேலை முடியவில்லை என்பதைப் பொருட்படுத்தா மாட்டான். எனவே நாம் நம் பிராட்டியைத் தொடர்ந்து தேடுவதுதான் நல்லது. அப்படித் தேடும்போது நாம் சடாயுவைப் போல உயிர்துறந்தால் அதுதான் சிறப்பு. விணாக பழிசுமந்து வாழ்வதா சிறப்பு” என்றான்.
நாடுதலே நலம் இன்னும்; நாடி, அத்
தோடு அலர் குழலிதன் துயரின் சென்று, அமர்
வீடிய சடாயுவைப் போல வீடுதல்
பாடவம்; அல்லது பழியிற்று ஆம்' என்றான்.
இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், ‘சடாயு’ என்ற பெயரை அனுமன் சொல்லவும் சற்றுத் தொலைவில் ஓர் மலையில் அமர்ந்திருந்த சம்பாதி என்ற கழுகின் வேந்தன் தன் தம்பியாகிய சடாயு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டுத் துணுக்குற்று சோகத்தால் அழுது புலம்பியவாறு, ஒரு குன்று நகர்ந்து வருவது போல வானர வீரர்களை நோக்கி வந்தான்.


“என் தம்பி சடாயுவா இறந்து போனான்? எப்படி இறந்தான் என்று கூறுங்கள் சகோதரர்களே” என்று கேட்டுக் கொண்டே வந்தான்.
கழுகரசன் சம்பாதி தன்னுடைய சிறகை இழந்தவன். அவன் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓட, “என் தம்பி சடாயுவைக் கொல்லும் ஆற்றல் கொண்டவனும் யாரேனும் இருக்கிறானோ? யார் அந்தச் செயலைச் செய்தது” என்று மிக்க கோபத்துடன் கேட்டான்.
வயது முதிர்ந்த சம்பாதி, சிறகுகளை இழந்து கண்கள் சுருங்கி அவற்றில் கண்ணீர் பொங்கி வர இவர்களை நோக்கி வந்ததும், வானரவீரர்களுக்கு அச்சம் ஏற்பட்டது. சில வீரர்கள் பின்வாங்கி ஓடத் தொடங்கினார்கள். அனுமன் மட்டும் சம்பாதியை நோக்கி முன்னேறினான். “வஞ்சக அரக்கனே, கள்ள வேடம் பூண்டு வந்த நீ யார்? இனி என்னிடமிருந்து உயிர் பிழைத்துப் போவாயோ?” என்று வினவினான்.
வெங் கதம் வீசிய மனத்தன், விம்மலன்,
பொங்கிய சோரி நீர் பொழியும் கண்ணினன்,
சங்கையில் சழக்கு இலன் என்னும் தன்மையை,
இங்கித வகையினால், எய்த நோக்கினான்.
அனுமன் இப்படி சொன்னாலும் எதிரே வந்த முதிய கழுகு, சகோதரன் இறந்த செய்தி கேட்டு கண்ணீர் உகுத்துக் கதறுகிறான் என்பதை உணர்ந்து கொண்டான். சம்பாதி மீண்டும், என் சகோதரன் சடாயுவின் உயிரைப் பறித்தவர் யார் என்று கூறமாட்டீர்களா? என்று மறுபடியும் கேட்டான்.
ராவணன் தான் சடாயுவை வஞ்சகமாகக் கொன்றான் என்பதை அனுமன் கூறியதைக் கேட்ட சம்பாதி துக்கத்தினால் நெஞ்சடைத்து மயங்கி விழுந்தான். ஒருவாறு உணர்வு மீண்டு அனுமனிடம், “என்ன காரணம் கருதி ராவணனுடன் சடாயு போர் புரிந்தான்? என்று கேட்டான்.
“எம் கோமான் ராமபிரானின் மனைவி சீதாபிராட்டியைக் கொடும் வஞ்சனையாளன் மாயையால் கவர்ந்து சென்ற போது, பெரும் நீதிமானான சடாயு ராவணனின் தேரைத் தாக்கி அழித்தான். அவனுடைய தோளையும் கிழித்து அவனை ஏறக்குறையத் தோற்கடித்து விட்டான். இதனால் பெருஞ்சினம் கொண்ட ராவணன், சிவன் தந்த வாளால் சடாயுவின் சிறகுகளை வெட்டினான். அதனால் சடாயு இறந்து போனான்.
“ஆஹா... என் வீரமிக்க சகோதரன் பெருந்தேவி சீதாப்பிராட்டியைக் காக்கும் பணியில் உயிர் துறந்து என்றும் அழியாத புகழுடம்பு ஏந்தியிருக்கிறான் என்று விம்மினான். தொடர்ந்து சம்பாதி, வானர வீரர்களைப் பெரிதும் பாராட்டினான். அவர்களனைவரையும் ‘ராமா’ என்னும் நாமத்தைத் தொடர்ந்து உச்சரிக்குமாறு இருகரம் வப்பி வேண்டினான். அதன்படியே அவர்கள் அனைவரும் ஒன்றாக ராமநாமத்தை உச்சரிக்கவும் சம்பாதியின் சிறகுகள் சிறிது சிறிதாக முளைத்து முழுவதுமாக வளரத் தொடங்கின. முழுச் சிறகுகளும் மீண்டு வரப்பெற்ற சம்பாதி வலிமை படைத்தவனாக கம்பீரத்துடன் எழுந்து நின்றான் சம்பாதி.
அனைவரும் ராமபிரானின் திருவருளைப் போற்றிக் கொண்டாடினார்கள். வானர வீரர்கள் சம்பாதியின் வரலாறு குறித்துக் கேட்க அவன் சொல்லலானான்.
“ராம நாமத்தின் வலிமையால் என் சிறகுகளை மீட்டுத்தந்த என் ஆருயிர் நண்பர்களே, நாங்கள் சம்பாதி, சடாயு என்று இரு சகோதரர்கள் கழுகுகளின் அரசர்கள். வேகமும் வலிமையும் கொண்ட சிறகுகளைக் கொண்டவர்கள். அருணன் என்னும் சூரியனின் பிள்ளைகள் நாங்கள். தேவருலகம் வரை பறந்து சென்று வரும் ஆற்றல் படைத்தவர்கள் நாங்கள். அப்படி நாங்கள் ஆகாய வழியாகச் சென்றபோது, எரிக்கும் கிரணங்களையுடைய சூரியனைக் கண்டோம். அப்போது எங்களுக்குள் போட்டி ஏற்பட்டது. யார் சூரியனுக்கு மிக அருகில் செல்ல முடிகிறது என்ற போட்டியில் சூரியனின் கிரணங்கள் என் தம்பியைத் தாக்கிய வேளையில், “என்னைக் காப்பாற்று” என்று அவன் வேண்டினான். உடனே நான், என் பெருஞ்சிறகினை விரித்து சூரியக் கிரணங்கள் அவன் மீது படாதவண்ணம் காத்தேன்.
இதனால் என் சிறகுகள் எரிந்து கருகி, உயிர் மட்டும் பிழைத்துக் கீழே விழுந்தேன். அன்றிலிருந்து என்னால் பறக்க இயலவில்லை. இதைக் கண்ட சூரியன் என்னிடம், “சம்பாதி, வருந்தாதே, சனகன் மகள் சீதா தேவியைத் தேடி வானர வீரர்கள் இந்தப் பக்கமாக வருவார்கள். அவர்களை ராமனின் திருநாமங்களை உச்சரிக்கச் செய்தால் உன் சிறகுகள் மீண்டும் முளைத்து மீண்டும் எழுவாயாக” என்று ஆசி வழங்கினான். “வீரர்களே, இதுதான் என் வரலாறு” என்றான்.
சம்பாதி கூறியதைக் கேட்ட வானரவீரர்கள், தந்தையே, அந்தப் புன்தொழில் அரக்கன் சீதாபிராட்டியைத் தென்திசை நோக்கிக் கொண்டு சென்றான் என்று அறிந்து இவ்வழி தேடி வந்துள்ளோம்” என்றனர்.
“நன்று. நீங்கள் வருந்தவேண்டாம். இதுவிஷயமாக எனக்குத் தெரிந்ததைக் கூறுகிறேன். அந்தப் பாதகன் ராவணன், நம் சீதாபிராட்டியைக் கவர்ந்து செல்வதை நான் என் கண்களால் பார்த்தேன். அவளைத் தூக்கிக் கொண்டு இலங்கை சென்றடைந்தான். அன்னையை அங்கே சிறை வைத்து விட்டான். நம்முடைய அன்னை இப்போது அங்கேதான் இருக்கிறாள். நீங்கள் உடனே அங்கே சென்று காண்பீராக!!” என்றான் சம்பாதி.
“யோசனை எழுநூறு உண்டால், ஒலிகடல் இலங்கை; அவ்வூர்
பாசவெம் கரத்துக் கூற்றும் கட்புலன் பரப்ப அஞ்சும்;
நீசன் அவ்வரக்கன் சீற்றம் நெருப்புக்கு நெருப்பு; நீங்கள்
ஏசறும் குணத்தீர் சேறல் எப்பரிச இயைவது? என்றான்”.
நீங்கள் எல்லோரும் அங்கே போவது என்பது எளியதன்று. அப்படி உங்களில் எவரேனும் ஒருவர் அங்கே செல்ல முடியுமானால் சென்று, தேவியைக் கண்டு, ராமபிரான் கூறியவைகளை அவரிடம் சொல்லி, அவர் துயரை நீக்கி தெளிவுறச் செய்து மீண்டு வருவீர்களாக” என்றான் சம்பாதி. ஆனால் அங்கே கட்டுக்காவல் அதிகம். தேவர்களும் முனிவர்களும் ஏன் மும்மூர்த்திகளுமே புகமுடியாத வண்ணம் காவலைக் கெட்டிப்படுத்தியிக்கிறான் ராவணன். அப்படி உங்களில் ஒருவன் அங்கே போகமுடியாவிட்டால், திரும்பிப்போய் ராமபிரானிடம் பிராட்டி இலங்கையில் இருக்கும் செய்தியை நீங்கள் சொல்லலாம்” என்றான்.
இப்படிக் கூறிவிட்டுத் தன் சகோதரன் சடாயுவுக்கு நீர்க்கடன் முடித்த சம்பாதி, வானத்தில் எழும்பிப் பறந்து சென்றான். அவன் சென்ற பிறகு வானரர்கள், கழுகரசன் பொய் சொல்ல மாட்டான் என்றார்கள். கடலைத் தாண்டி இலங்கை சென்று அன்னையைத் தேடிக் கண்டுபிடித்தால் மட்டுமே நாம் உயிர் பிழைக்க முடியும் என்று கூறினார்கள்.
இங்கு நம்மிடையே, கடல்கடந்து இலங்கை செல்லும் வலிமையுடையோர் நம்மிடயே யாவர் உளர் என்று கேட்டு ஒவ்வொருவரும் தத்தம் நிலைமையைக் கூறினார்கள். நீலன் முதலான வீரர்கள் தங்களால் கடலைக் கடந்து செல்வது இயலாது என்றனர். வாலியின் மகன் அங்கதன், தன்னால் கடல் கடந்து இலங்கை செல்ல முடியும் என்றும் அதே வேளையில் மீண்டு வந்து சேரும் வலிமை தனக்கு இல்லையென்று உரைத்தான். சாம்பன் என்னும் ஜாம்பவான் தனது இயலாமை குறித்து வருந்தினான்.
“மேலை விரிஞ்சன் வீயினும் வீயா மிகை நாளிர்
நூலை நயந்து, நுண்ணிது உணர்ந்தீர் நுவல் தக்கீர்
காலனும் அஞ்சும் காய் சினமொய்ம்பீர்; கடன் நின்றீர்
ஆலம் நுகர்ந்தான் ஆம் என வெம் போர் அடர்கிற்பீர்.”
மேலும் ஜாம்பவான், “நம்மில் யார் கடல் கடந்து செல்வது என்று ஆலோசனை செய்து கொண்டிருப்பது நமக்கு இழிவு அல்லவா? எனவே எல்லா விதங்களிலும் தகுதியுடைய அனுமனே அதற்கு ஏற்றவன்” என்றான். தொடர்ந்து அனுமனிடம், “பிரம்மதேவனே மாண்டால்கூட சிரஞ்சீவியாக வாழக்கூடிய வாழ்நாள் உடைய வீரனே! பற்பல சாத்திரங்கள் கற்ற மகாபண்டிதன் நீ.
காலனும் அஞ்சும் வலிமையுடைவன் நீ. ஆலகால விஷயத்தை உண்ட நீலகண்டனைப் போல போரிட்டு எதிரிகளை வதம் செய்யும் ஆற்றல் பெற்றவர் நீர்! பல்வகைப்பட்ட தெய்வத்தன்மை பொருந்திய படைக்கலன்களாலும் அழிக்க முடியாதவன் நீ. கடல் என்ன? இந்த அண்டங்களையே தாண்டவல்ல ஆற்றல் படைத்தவன் நீ. இலங்கைக்கு சென்று, வென்று, மீளும் வல்லமை படைத்தவன் நீ. புஜவலி என்றும் குறையாதவன் நீ. மேருமலையும் தோற்கும் வண்ணம் பேருருக் கொண்டவன் நீ. பெரு உருவைச் சின்னஞ்சிறு உருவமாக மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவன் நீ.
இந்த பூமியையே பெயர்த்து எடுக்கும் வல்லமை கொண்டவன். சூரியனைத் தொடவும் வல்லவன். புகை போகா வாயிலிலும் புகவல்லவன் நீ. உலகுக்கு இருளை நீக்கும் கதிரவனின் தேருக்கு முன்பாகவே சென்று வடமொழி நூல்கள் அனைத்தையும் கேட்டுத் தெளிந்து உணர்ந்தவன் நீ. நீயே இந்தக் கடல் கடந்து சென்று சீதாபிராட்டி பற்றிய நல்ல செய்தி ராமபிரானுக்குக் கொண்டு வந்து கீர்த்தி பெறுவாய். அன்னையும் துன்பக் கடலினைத் தாண்ட உன்னால் ஏதுவாக்க முடியும்” என்றான் ஜாம்பவான்.
இவ்வாறு ஜாம்பவான் அனுமனின் பெருமைகளையெல்லாம் அவனிடம் சொல்லி முடிக்க, அறிவில் சிறந்த அனுமன் தலை குனிந்து அல்லிப்பூ மலர்ந்தது போல ஒரு புன்னகை பூத்தான். அவனைச் சூழ்ந்திருந்த வானர வீரர்கள் மனம் மகிழும்படி அனுமன் பேசலானான்.
“முற்றும் நீர் உலகம் முற்றும்
விழுங்குவான், முழங்கி முந்நீர்,
உற்றதே எனினும், அண்டம்
உடைந்துபோய் உயர்ந்ததேனும்,
இற்றை நும் அருளும்,
எம்கோன் ஏவலும் இரண்டுபாலும்
கற்றை வார் சிறைகள் ஆக,
கலுழனின்கடப்பல் காண்டீர்!”
“நீங்கள் அனைவரும் இந்தக் கடலினைத் தாண்டிச் சென்று அன்னையைக் கண்டுவரும் ஆற்றல் உள்ளவராயிருந்தும் சிறியவனான என்னால் இந்தக் காரியம் முடியும் என்று என்னை நீங்கள் ஏவுவது நான் பெற்ற பெரும்பேறாகும். உங்கள் ஆசியும், ராமபிரான் இட்ட கட்டளையும் என்னுடன் துணைவர நான் இப்போதே இந்தக் கடலை கருடனைப்போலக் கடந்து செல்வேன் காண்பீராக” என்றான்.
“நான் இலங்கை சென்று மீண்டும் இங்கு வந்து சேரும் வரை, இங்கே இனிதே தங்கியிருங்கள். வானரர்கள் வாழ்த்து மழை பொழிய, தேவர்கள் பூமாரி பொழிய, அனுமன் மகேந்திர மலையின் உச்சியைச் சென்றடைந்தான். மூவுலகையும் ஈரடியால் அளந்த மாதவனின் பேருருவை எடுத்து உலகோர் வியக்க நின்றான்.
வானரப்படை மகேந்திரமலையிலேயே தங்கியிருக்க இலங்கையை நோக்கி அனுமனின் பயணம் துவங்கியது.

