தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயு
தன்னைவிடப் பலமடங்கு பலசாலி ராவணன் என்பது தெரிந்தும் தன் உற்ற நண்பனுடைய மகனின் மனைவியை அவன் தூக்கிச் சென்ற போது முழு பலத்தையும் பிரயோகித்துப் போரிட்டு மடிந்த சடாயுவின் தியாகத்தை ராமனும் லட்சுமணனும் போற்றித் துதிக்கின்றனர்.


கருடனின் மூத்த சகோதரன் அருணன். இவன் சூரியனின் தேரோட்டி. அருணனின் மனைவி ச்யேனி. இவர்களுக்கு இரு பிள்ளைகள். மூத்தவன் சம்பாதி. இளையவன் சடாயு. இந்த சடாயு ராமனின் தந்தை தசரதனுக்கு நெருங்கிய நண்பன். இது சாதாரண நட்பன்று. உடன்பிறந்த சகோதரனுக்கும் மேலான நட்பு. ராமாயணத்தில் கழுகு வடிவிலான பாத்திரம் இந்த சடாயு. ராமனிடத்திலும் அவன் மனைவி சீதையிடத்திலும் பேரன்பு செலுத்தியவன் இவன். ராமன் இவனை தந்தையாக பாவித்து ஈமச்சடங்குகள் செய்திருக்கிறான். கம்பராமாயணத்தில் இந்த சடாயுவின் உயிர்த்தியாகத்தை ஒப்பற்ற ஒன்றாக வடிவமைத்திருக்கிறான் கம்பன். இவன் பெயரை ‘சடாயு’ என்று தன் பாடல்களில் அழைக்கிறான் கம்பன்.
ராமாயணத்தில் உயிர்த்தியாகம் செய்பவர்கள் மூவர். முதலில் தசரதன். அயோத்தியில் மறுநாள் ராமனுக்கு முடிசூட்டு என்று தேதி குறித்து முறையான அறிவிப்பும் செய்தான் தசரதன். ஆனால் அன்றிரவே தான் பெற்ற தனியொரு வரத்தின் துணையால் தசரதனின் அந்த முடிவை மாற்றினாள் கைகேயி.
அரசவையின் முடிவு அந்தப்புறத்தில் மாறியது. இதனைக் கடுமையாக எதிர்த்துக் கேள்வி எழுப்பியவன் லட்சுமணன். இதனால் தர்மசங்கடத்தில் ஆழ்ந்தான் தசரதன். ராமன் காட்டுக்குப் போகப் போகிறான் என்ற முடிவினால் இருவகையிலும் அறங்களைக் காக்க வழியின்றி ராமன் மீதான புத்திர சோகத்தினால் உயிர் துறக்கிறான் தசரதன்.
கும்பகர்ணனின் மரணம் அறத்தின் பால் சார்ந்து இல்லாமல் இருந்தது. தரும நியாயங்களை அறிந்திருந்தும் அவன் சகோதரன் மீது வைத்த பாசத்தினால் அவன் பக்கம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து ராவணனுக்காக போரில் உயிர் துறக்கிறான் கும்பகர்ணன்.
சடாயுவும் ஒரு போரில்தான் உயிர் துறக்கிறான். ஆனால் இவன் மரணம் நீதியின் பக்கம் இருந்திருக்கிறது. இவனுடைய தியாகமே ஒப்பற்றது என்று பலராலும் போற்றப்படுகிறது.
சடாயுவின் இளைமைக்காலம் பற்றிப் பார்ப்போம். ஒருமுறை தன் சகோதரன் சம்பாதியுடன் வானில் உயரப்பறப்பது யார் என்ற போட்டியில் இறங்கினான் சடாயு. இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பறக்கத் தொடங்கினார்கள். அண்ணனை விடத் தான் அதிக உயரம் பறக்க வேண்டும் என்று சடாயு ஒரு கட்டத்தில் சூரியனின் வெப்பக்கதிர்கள் தாங்காமல், சிறகுகள் கருகத் தொடங்கும் அளவு பறந்தான். தம்பியின் நிலை கண்டு பதற்றம் அடைந்த சம்பாதி அவனுக்கு மேல் உயரமாகப் பறந்தான். சூரியக் கதிர்கள் அவனுடைய சிறகுகளை எரித்தன. சிறகுகளை இழந்த நிலையில் நிசாகர முனிவரின் ஆசிரம வாயிலில் விழுகிறான் சம்பாதி.
சம்பாதி அப்படி தம்பிக்கு மேலும் உயரப்பறந்து தன் சிறகால் தம்பியைக்கு நிழல் அளித்ததால் சடாயு உயிர் பிழைத்தான். பின்னர் அன்னை வாலாம்பிகை உடனுறை பவரோக வைத்தியநாத சுவாமியை தரிசித்து அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடி சிவனையும் அம்பிகையையும் மும்முறை வலம் வந்து வணங்கினான் என்றும் புராணக்கதை ஒன்று உள்ளது.
அதன் பிறகு தண்டகாரண்யத்தில் தங்கியிருந்தான் சடாயு. அப்போது ஒருமுறை தன் படைகள் சூழ அங்கு வேட்டைக்கு வந்தான் தசரதன். வெய்யிலின் தாக்கத்தால் சோர்ந்து ஒரு மரத்தின் அடிப்பாகத்தில் தலைவைத்துப் படுத்திருந்தான். நன்கு உறங்கிப் போனநிலையில் தூக்கக் கலக்கத்தில் காலின் அருகில் இருந்த பாம்புப்புற்றை காலால் உதைத்தான். புற்றில் இருந்த பாம்பு சீண்டப்பட்டு வெளியில் வந்தது. சற்று தூரத்திலிருந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த சடாயு சடாரென்று பறந்து வந்து தன் கூர்மையான அலகினால் அந்தப் பாம்பைக் கவ்வி அதை இருதுண்டுகளாக ஆக்கி எறிந்தான்.
அரவம் கேட்டு எழுந்த அரசனிடம் நடந்தவற்றைக் கூறினான் சடாயு. அதுமட்டுமின்றி, தசரதனின் களைப்பைக் குறிப்பால் உணர்ந்து அவனுக்குக் கனிகளும் நீரும் தந்து உபசரித்தான். எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காது தன் உயிரைக்காத்த சடாயுவை தன்னுடைய சகோதரான ஏற்றுக் கொண்டான் தசரதன். இதன் காரணமாகவே தசரதன் மகன் ராமனுக்கு சடாயு பெரிய தந்தை என்று தமிழ் அறிஞர் பி.ஸ்ரீ.ஆச்சார்யா விளக்குகிறார்.
ராமனும் சடாயுவும் சந்திப்பு கம்பராமாயணத்தில் ‘சடாயு காண் படலத்தில் ஐந்து பாடல்களில் வருகிறது.
நடந்தனர் காவதம் பலவும்;
நல் நதி
கிடந்தன, நின்றன,
கிரிகள் கேண்மையின்
தொடர்ந்தன, துவன்றின;
சூழல் யாவையும்
கடந்தனர்; கண்டனர்
கழுகின் வேந்தையே;
சீதையோடு ராமனும் இலக்குவனும் புனித நதிகள் பலவற்றையும் கடந்து, தொடர்ந்து நின்ற மலைகள் பலவற்றையும் மலைக்காது தொடர்ந்து, அம்மலைகள் சூழ்ந்த காடுகளைக் கடந்த சமயம் கழுகுகளின் வேந்தன் சடாயுவைக் கண்டனர் என்கிறார் கம்பன். இது முதல் சந்திப்பு.
வனை கழல் வரி சிலை
மதுகை மைந்தரை,
அனையவன்தானும் கண்டு
அயிர்த்து நோக்கினான்,
'வினை அறு நோன்பினர்
அல்லர்; வில்லினர்;
புனை சடை முடியினர்;
புலவரோ ?' எனா
வீரக்கழல் புனைந்து, வில்லேந்தி வலிமையுடன் நிற்கும் இந்த மைந்தர்களைக் கண்டு யாராயிருக்கும் என்று ஐயமுறுகிறான் சடாயு. இவர்களைப் பார்த்தால் முன்வினைகளைப் போக்க விரும்பும் தவமுனிவர்கள் அல்ல. கையில் வில்லை ஏந்தியிருக்கிறார்கள். சடைமுடி தரித்திருக்கிறார்கள். ஒருவேளை இவர்கள் தேவர்களோ என்று எண்ணுகிறான் சடாயு.
இவர்களை யார் என்று சடாயு கேட்க, கடலாற்சூழ்ந்த உலகம் யாவையும் காக்கும் வல்லமையுடைய வீரக்கழல்கள் அணிந்த தசரன் மைந்தன் நாங்கள் என்று ராம இலக்குவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்.
தான் அருணன் மகனென்றும். அவன் சொல்லுமிடமெல்லாம் செல்லும் ஆற்றலுடையவன் என்றும் தன் அரசாட்சியில் அனைத்துப் பகைவர்களையும் அழித்தொழித்த தசரதனின் உற்ற நண்பன் என்றும் இமையாரோடு, அதாவது தேவர்களோடு வருணங்கள் வகுத்தபோது வந்துதித்தவன் என்றும் கழுகுகளுக்கெல்லாம் அரசன் என்றும் சம்பாதி என்பவனின் தம்பி சடாயு என்று தன்னை ராமனுக்கு அறிமுகப்படுத்திக் கொள்கிறான் சடாயு.
ராமனும் இலக்குவனும் தாங்கள் பஞ்சவடி செல்லும் திட்டத்தை சடாயுவிடம் கூறுகின்றனர். அதைக்கேட்டு
பெரிதும் நன்று; அப் பெருந்
துறை வைகி, நீர்
புரிதிர் மா தவம்; போதுமின்;
யான் அது
தெரிவுறுத்துவென்' என்று அவர்
திண் சிறை
விரியும் நிழலில் செல்ல,
விண் சென்றனன்.
மிகவும் நன்று. பஞ்சவடி நீங்கள் நீர்த்துறையில் தங்கி தவங்கள் புரிவதற்கு ஏற்ற இடம். வாருங்கள் போவோம். நான் பாதை காட்டுகிறேன் என்று கூறி தன் பெரிய இறகுகளை விரித்து அந்த நிழலில் மூவரும் நடக்க வானில் உயரப்பறந்தான் ஜடாயு, என்கிறான் கம்பன்
இவர்களின் மற்றொரு சந்திப்பு மிகவும் துயரமான நிலையில் ஏற்படுகிறது. பஞ்சவடியில், ராமனும் சீதையும் லட்சுமணனும் தங்கியிருந்த நிலையில் சீதையின் வற்புறுத்தலால் பொய்மானைத் தேடி ராமனும் பின்னர் லட்சுமணனும் துரத்திக் கொண்டு ஓடிய நிலையில் தவக்கோலத்தில் வந்து சீதையைக் கவர்ந்து செல்கிறான் ராவணன். இதனைக் கண்ட சடாயு அவனை வழிமறிக்கிறான். இருவருக்குமிடையில் கடுமையான போர் நடக்கிறது. போரில் சடாயுவின் இறக்கைகளை வெட்டி வீழ்த்துகிறான் ராவணன். தன்னைக் காப்பாற்ற வந்த சடாயு, குரூரமாகத் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாகப் பரிதாபமாகக் கிடப்பதை வேதனையுடன் பார்க்கிறாள் சீதை.
அவளுக்கு வேறு வழியில்லை. உயரத்திலிருந்தபடியே சடாயுவிடம் தழுதழுக்கக் கோருகிறாள், “ஐயா என் பொருட்டுத் தாங்கள் சிறிது காலம் உயிர் பிழைத்திருக்க வேண்டும். என் நாயகன் ராமன் என்னைத் தேடி இப்பக்கம் வருவாரானால் அவரிடம் என் நிலைமையை நீங்கள் கூற வேண்டும். என்னைத் தூக்கிச் செல்பவன் யார் என்றும் என்னை எங்கே தூக்கிச் செல்கிறான் என்பது பற்றியும் நீங்கள் கூறவேண்டும்” என்று வேண்டினாள்.
வலியும் வேதனையும் தாங்கவியலாத சடாயு மவுனமாகத் தலையசைத்துத் தன் ஒப்புதலைத் தெரிவிக்கிறான். விமானம் இலங்கையை நோக்கிப் பறந்தது. சீதை எதிர்பார்த்தபடியே, அவளைத் தேடி வருத்தம் தோய்ந்த முகத்துடன் ராம லட்சுமணர்கள் அப்பக்கம் வந்தனர். அங்கே உயிரிழக்கும் நிலையில் ஈனஸ்வரத்தில் முனகியபடிக் கிடந்த சடாயுவைக் கண்டு பதற்றம் அடைந்து சடாயுவிடம் ஓடோடி வருகின்றனர். சீதை கேட்டுக் கொண்டபடியே, ராம லட்சுமணர்கள் வரும்வரை தன்னுயிர் தன்னை விட்டு நீங்காதபடி பார்த்துக் கொண்டான் சடாயு.
ராமனிடம் நடந்தவற்றைச் சொல்கிறான் சடாயு. உடனடியாக சென்றால் ராவணனை இலங்கைக்குச் செல்வதற்கு முன்பே வழிமறித்து சீதையை மீட்க முடியும் என்றும் கூறுகிறான். தன்னுடைய கடமை முடிந்த நிலையில் உயிர் துறக்கிறான் சடாயு. இந்த சம்பவம் பற்றிப் பல பாடல்கள் ஆரண்ய காண்டத்தில் இருந்தாலும் சடாயுவின் மரணத்தில் ராமன் கலங்கி நிற்கும் நிலை பற்றிய இப்பாடல் யாரையும் மனம் கலங்க வைக்கும்.
அறம்தலை நின்றிலாத அரக்கனின்,
ஆண்மை தீர்ந்தேன்;
துறந்தனென், தவம் செய்கேனோ?
துறப்பெனோ உயிரை? சொல்லாய்;
பிறந்தனென் பெற்று நின்ற
பெற்றியால், பெற்ற தாதை
இறந்தனன்; இருந்துளேன் யான்; என்
செய்கேன்? இளவல்!' என்றான்.
இளையோனே, அறவழியில் நிலைத்து நிற்கும் ஆற்றல் இல்லாத அரக்கனால் ஆண்மையை இழந்த நான் அனைத்தையும் துறந்து தவம் செய்வோனோ அல்லது உயிரை மாய்த்துக் கொள்வேனோ இவை இரண்டில் எது சரியானது என்று நீ சொல். என்னை மகனாகப் பெற்ற தன்மையால் பெற்றவன் இறந்தான். இப்போது ஆரண்யத்தில் என்னைப் பெற்ற பெற்ற தந்தையும் இறந்து போனான். மகனாகப் பிறந்து நான் மட்டும் இன்னும் உயிர் தாங்கி இருக்கின்றேன் என்று துயரத்தின் உச்சத்தில் புலம்புகிறான் ராமன்.
பெற்ற தந்தை தசரதனுக்கு ஈமக்கடன்கள் செய்யும் பாக்கியத்தை இழந்த ராமன் காட்டில் தனக்காக உயிர் நீத்த சடாயுவுக்கு தந்தைக்குச் செய்யும் அத்தனை ஈமக்கடமைகளையும் செய்கிறான் என்பதை மற்றொரு பாடலில் மிகவும் விரிவாகச் சொல்கிறான் கம்பன். ஆரண்ய காண்டத்தில் சடாயு உயிர் நீத்த படலத்தில் பல பாடல்கள் இத்துயரச் சம்பவங்களை விளக்குகின்றன.
தன்னைவிடப் பலமடங்கு பலசாலி ராவணன் என்பது தெரிந்தும் தன் உற்ற நண்பனுடைய மகனின் மனைவியை அவன் தூக்கிச் சென்ற போது முழு பலத்தையும் பிரயோகித்துப் போரிட்டு மடிந்த சடாயுவின் தியாகத்தை ராமனும் லட்சுமணனும் போற்றித் துதிக்கின்றனர். புள்ளினமான சடாயுவுக்குத் தன்னுடைய காப்பியத்தில் மிகவும் சிறப்பான இடத்தைத் தந்திருக்கிறான் கம்பன்.



