இலங்கை சகோதர்களின் பாசம்
பாசம் என்பதில் வேறுபாடு ஏதும் இன்றி அண்ணன் மீதும் தம்பியின் மீதும் அதிக பாசம் கொண்டு, பாசம் என்பதற்கு இவனையன்றி வேறு யாரையும் உதாரணம் காட்ட முடியாது என்ற அளவில் கம்பனின் எழுதுகோலை இயக்க வைத்தவன் கும்பகர்ணன்.


கும்பகர்ணனைத் தூங்கி வழிகின்றவர்களுக்கு உதாரணம் காட்டும் தவறு நீண்ட காலமாக நடந்து வருகிறது. அவன் சகோதர பாசத்துக்கு உதாரணமானவன். சிறந்த வீரன். அண்ணனுக்கு மிக அதிகமான வெற்றிகளை ஈட்டித்தந்தவன்.
அந்த வெற்றிகளை அண்ணனுக்கு உரித்தாக்கியவன். அரசனாக அண்ணன் கட்டளையிடும் போது அவன் காலால் இட்ட பணிகளைத் தலையால் செய்து முடித்தவன் கும்பகர்ணன். சீதையைத் தூக்கி வந்திருக்கிறான் ராவணன். அந்த செய்கைக்கும் கும்பகர்ணனுக்கும் எந்த்த தொடர்பும் கிடையாது. ஆனால் ராவணன் அழைத்த மந்திராலோசனையின் போது ராவணன் வார்த்தையில் கம்பன் கூறுகிறான்-
சுட்டது குரங்கு எரி சூறையாடிடக்
கெட்டது, கொடிநகர், கிளையும் நண்பரும்
பட்டனர், பரிபவம் பரந்தது எங்கணும்
இட்டது இவ் அரியணை இருந்தது என் உடல்
அதாவது ஒரு குரங்கு தீ வைத்து சூறையாடி கொடிகள் கட்டப்பட்டுள்ள இந்த இலங்கை மாநகரமே அழிந்தது. நம் உறவினர்களும் நண்பர்களும் இறந்தனர். அவமானம் எங்கும் பரவியது. இங்கு இடப்பட்ட சிங்காதனத்தில் என் உடல் இருந்தது. அது இலங்கைக்கு நேர்ந்த தீமையை தடுக்க இயலாத பலனின்றி வெறுமனே கிடந்தது ‘என்று ராவணன் சலித்துப் போய் புலம்புகிறான்.
நீ அயன் முதல் குலம் இதற்கு ஒருவன்
நின்றாய் ஆயிரம் மறைப் பொருள் உணர்ந்து அறிவு அமைந்தாய்
தீயினை நயப்புறுதல் செய்தனை தெரிந்தாய்
ஏயின உறத் தகைய இத்துணையவேயோ?
அப்போது வந்து நிற்கிறான் கும்பகர்ணன். அவன் ஒருவன்தான் ராவணன் சபையில் கைநீட்டி அவனுடைய தவறை சுட்டிக்காட்டும் தைரியமும் உரிமையும் கொண்டவன். அவன் கேட்கிறான் -


அண்ணா- பிரம்மனை பிதாமகனாக கொண்ட இந்த குலத்தில் ஒப்பற்றவனாய் நீ நிலைத்து இருக்கிறாய். ஆயிரம் ஆயிரம் வேதங்களின் பொருளை எல்லாம் உணர்ந்து நல்லறிவு உடையவனாக இருக்கிறாய். ஆனாலும் நீ தீய செயல்களை விரும்பித் தெரிந்தே செய்தாய். விதியால் ஏவப்பட்டு உன்னால் நாம் அடையக்கூடும் தீங்கு இவ்வளவு மட்டுமோ? என்று கேள்வி எழுப்புகிறான். இன்னும் எத்தனையோ தீங்குகள் தொடரும் என்று வேதனைப்படுகிறான். அடுத்து விடவில்லை -
நல் நகர் அழிந்தது என நாணினை நயத்தால்
என் உயிர் எனத்தகைய தேவியர்கள் உன்மேல்
இன் நகை தரத் தர ஒருத்தன் மனை உற்றாள்
பொன் அடி தொழத் தொழ, மறுத்தல் புகழ் போலாம்.
மண்டோதரியின் தந்தை மயன் அமைத்துக் கொடுத்த இத்தனை அழகிய நகரமாகிய இலங்கை ஒரு குரங்கால் அழிந்து போய் விட்டதே என்று நாணமுற்றாய். உன் மீதுள்ள விருப்பத்தால் உன் மேல் உயிரையே வைத்துள்ள உன் மனைவிமார்கள் உன்னை நோக்கி மிக அழகாக புன்னகை வீசி நிற்க அதனை பொருட்படுத்தாது வேறு ஒருவன் மனைவியான சீதையை விருப்பத்துக்கு இணங்கச் செய்வதற்காக அவளுடைய பாதங்களில் வீழ்ந்து பல முறை வணங்கவும் அவள் எதற்கும் இணங்காது மறுத்து உரைப்பது உனக்குப் புகழ் தரும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?
வேறோரு குலத்தோன் தேவியை
நயந்து சிறை வைத்த செயல் நன்றோ?
பாவியர் உறும் பழி இதின் பழியும் உண்டோ?
நம் அரக்கர் இனம் அல்லாத வேறு ஒரு குலத்தவனாகிய ராமனுக்கு உரிய தேவியை நயந்து சிறை வைத்த செயல் நல்லதா? இதை விட வேறு பழி வேறு ஏதேனும் உள்ளதா? போரிலே ஒருவனைக் கொன்று அவன் நாட்டை கைக் கொள்ளலாம். இது வீரனுக்கு அழகு. ஆனால் இன்னொருவன் மனைவியை மறைமுகமாக தூக்கி வந்து நீ வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாயே. பாவத்திலும் கொடிய பாவத்தை செய்திருக்கிறாயே. பிறகு என்ன உனக்கு வெட்கம் வேண்டிய இருக்கிறது. ஏதோ சிம்மாசனத்தில் உன் உடல் மட்டும் கிடக்கிறது என்று கூறுகிறாயே. ஒருவனுடைய உள்ளம் அற்றுப் போனால் அது உடல்தானே? எப்படி அந்த காரியத்தை செய்தாய்?
எத்தனை பெரிய சாம்ராஜ்ஜியம் நம்முடையது? எத்தனை பேரை வென்று இருக்கிறோம்? கொன்றிருக்கிறோம்? இனமானம் என்றோம். குலமானம் என்றோம். ஆனால் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்? இன்னொருவன் மனைவியின் மீது குற்றமற்ற காதல் என்று கூறுகிறாயே. இன்னோருவன் மனைவியை தூக்கி வருவதே காதல். இதில் குற்றமற்ற காதல் என்பது உனக்கே கேவலமாக இல்லையா? மானம் என்றால் இடைபேணுவது காமம் என்ற புதிய அகராதியை தந்திருக்கிறாயே அண்ணா. மானிடர்களை பார்த்து பயப்படும் காரியத்தை செய்திருக்கிறாயே. நம் குலத்தில் இப்படி இன்னொருவன் மனைவியை வேறு யாராவது தூக்கி வந்து வைத்திருக்கிறார்களா?
சரி. இத்தனையும் தன் அண்ணனிடம் கூறினானே கும்பருணன். அவன் தன்னுயிர் போகும் என்ற அச்சத்தில் இதைக் கூறினானா? ராம லட்சுமணர்களை கண்டு அஞ்சி இதை கூறினானா? வானர சேனையின் பலம் அவனை அப்படி பேச வைத்ததா?
நீதியில் இருந்து வழுவியதால் அது தன் அண்ணனுக்கு கேடு விளைவிக்குமே என்ற அச்சம் தான் அந்த மாவீரனுக்கு. சகோதரன் மீதான பாசம் அவனை இப்படி அவன் இயற்கையை மீறி அவனை இப்படி பேச வைக்கிறது. நாடும் நகரமும் போனதென்று அழுதானா? அண்ணன் தருமம் தவறினான். அதன் விளைவு அண்ணன் மரணம்தான் என்பதை அறிந்து நெஞ்சம் பதைத்திருக்கிறான் கும்பகர்ணன்.
சரி. தன்னுடைய குறையை மட்டும் இந்த பாசமிகு தம்பி அண்ணனிடம் முறையிட்டாகி விட்டது. அண்ணன் கேட்பது போல இல்லை. அங்கேதான் உண்மையான வீரமும் பாசமும் பீறிக் கிளம்புகிறது. கும்பகர்ணன் ராவணனிடம் கூறுகிறான்.
ஏறு கடல் ஏறி, நரர் வானரரை எல்லாம்
வேறு பெயராதவகை வேரொடும் அடங்க
நுறுவதுவே கருமம் என்பது நுவன்றான்
அதாவது அந்த பகைவர்களின் படை இங்கே பெருகி வருவதற்கு முன்பே, ஒரே நாளில் இப்பெரிய கடலைக் கடந்து சென்று அந்த மானிடர்களையும் குரங்குப் பட்டாளங்கள் எல்லாவற்றையும் எங்கும் நகராத படிக்கு வேரோடு அழித்து ஒழிப்பதே நம்முடைய உடனடி செயலாக இருக்க வேண்டும் என்று கூறுகிறான். திட்டமிடுகிறான். தைரியம் அளிக்கிறான். சுட்டிக்காட்டுவது கடமை. உடன் நிற்பதும் கடமை. இந்த இரண்டிலும் இருந்தும் வழுவாத பாசக்குன்று இலங்கையில் சுடர் விட்டு எரிந்துள்ளது.
இவனல்லவா தம்பி. அண்ணா நீ தவறு செய்திருக்கிறாய். இனி ஒன்றும் செய்ய முடியாது. இனி சீதையை விட்டாலும் நமக்கு இழிவுதான். நம் குலத்துக்கு இன்னும் ஒரு இழுக்கு சேரும். அதனால் போரை சந்தித்து அந்த மானிடர்களையும் குரங்குகளையும் அடியோடு அழிப்போம் என்கிறான். என்ன ஒரு விசுவாசம்? என்ன ஒரு பாசம்? இவனல்லவா சகோதரன்? மந்திராலோசனை தொடர்கிறது. இந்திரஜித்து தானே படை எடுத்து வெற்றிக்கனியை ஈட்டித் தருவதாக சொல்கிறான். விபீஷணன் அவனைக் கடிந்து கொள்கிறான். நீ சிறுவன். இந்த விஷயத்தில் தலையிடாதே என்று அவனை எச்சரிக்கிறான். விபீஷணன் சுந்தர காண்டத்தில் அறிமுகமாகும் போதே ராவணனிடம் தூதுவனாக வந்த அனுமனைக் கொல்வது முறையாகாது என வாதிடுகிறான். அதாவது சமுதாயத்தின் ஒரு அங்கமாக, பாரம்பரியமாக சமூகம் கடைப்பிடிக்கும் ஒரு நெறியைத் தூக்கிப்பிடித்துத் தன் சகோதரனுக்கு எடுத்துரைக்கிறான். இது என் தனி மனித விருப்பம் என முன் வைத்து அல்ல.
பகைப்புலன் நணுகி, உய்த்தார் பகர்ந்தது பகர்ந்து பற்றார்
மிகைப்புலன் அடக்கி மெய்ம்மை விளம்புதல் விரதம் பூண்ட
தகைப்புலக் கருமத்தோரைக் கோறலின் தக்கார் யார்க்கும்
நகைப்புலன் பிறிது ஒன்று உண்டோ? நம் குலம் நவை இன்றாமே?”
அதாவது, பகைவர் நாட்டை அடைந்து தன்னை அனுப்பியவரின் செய்தியைத் தெரிவித்து, கேட்பவரிடம் உண்டாகும் கோபத்தைக் குறைக்கும் படி அவர்களிடம் பேசி, ஒரு விரதமாக உண்மையையே பேசும் நேர்மையான தூதர்களை நீ கொன்றால் அது நகைப்புக்கு இடமாவது தவிர நமது குலத்துக்கே பழி உண்டாகும்.
எந்தையும் நீ, யாயும் நீ, எம்முன் நீ, தவ
வந்தனை தெய்வம் நீ மற்றும் முற்றும் நீ
இந்திரப் பெரும் பதம் இழக்கிறாய்.
என நொந்து போனதால் நான் இந்த அறிவுரையை உனக்கு வழங்குகிறேன் என்கிறான். அண்ணா நீ கயிலாயத்தை பெயர்த்து எடுக்க முற்பட்ட போது நந்தி தேவன் வந்து தடுத்தார். அவரை குரங்கு போன்ற முகத்தை உடையவன் நீ என்று பரிகாசம் செய்தாய். அதற்கு நந்தி தேவன் சினம் கொண்டு குரங்குகளால் னக்கு அழிவு நேரும் என்று சபித்தார். அந்த சாபத்தால் ஏற்கனவே நீ வாலியிடம் தோற்றுவிட்டாய். இப்போது மீண்டும் வானரப்படை உனக்கு எதிராக நிற்கப் போகிறது என்றும்
தவவாழ்வை மேற்கொண்டு தனித்து வாழ்ந்த வேதவதியை ராவணன் திக்விஜயத்தின் போது பலாத்காரம் செய்ய அவள் உனக்கு நான் நோயாக வருவேன். உன்னை அழிப்பேன் என்று சாபமிட்டாள். அந்த வேதவதிதான் இப்போது சீதையாக நிற்கிறாள் அண்ணா என்று ராவணனுக்கு எதிரான சாபத்தை நினைவூட்டுகிறான் விபீஷணன். அதுமட்டுமின்றி ராமனின் பெருமைகளையும் அவன் வில்லின் பெருமையும் வானரப்படையின் வீரத்தையும் எடுத்துக் கூறுகிறான். அவன் மனதில் தோய்ந்து இருந்தது அண்ணன் மீதான பாசம். அவன் கண்ணுக்கு எதிரே அண்ணன் அழிந்து போவதை தடுத்து நிறுத்த அவன் எடுத்த இறுதி முயற்சி.
ராவணன் அரசவையில் அவனுக்கு எதிராக நின்று கைநீட்டிப் பேசும் தைரியம் கும்பகர்ணனுக்கும் விபீஷணனுக்கும் இருந்தது. இந்த தைரியம் அவர்களுடைய பாசத்தால் விளைந்தது. அதற்கு உரிமை கொண்டவர்களாக தம்மை நிலைநாட்டிக் கொண்டார்கள் இந்த சகோதரர்கள்.
ஒரு மனிதனின் அடையாளம் எது? தனி மனிதனா ? அல்லது சமுதாயத்தின் ஒரு அங்கமா ? என்னும் ஒரே கேள்வியே ராமாயணத்தின் மையச் சரடானது. இந்த இடத்தில், ராம லட்சுமண பரத சகோதரர்களை ஒப்பிடும் போது ராவண கும்பகர்ண விபீஷணர்களின் சகோதர பாசம் எந்தவிதத்திலும் குறைவானதல்ல. சொல்லப்போனால் பல வகைகளிலும் சிறந்து விளங்கியதை மேலே சுட்டிக்காட்டிய சம்பவங்களாலும் பாடல்களாலும் ஒப்புநோக்கினாலும் தெளிவாகிறது.
ராவணன் கூட்டிய மந்திராலோசனை கூட்டத்தில் கும்பகர்ணனை தொடர்ந்து விபீஷணனும் அவன் பங்குக்கு ராவணனை அறிவுரைகளால் துளைத்து எடுக்கிறான். முந்தைய சாபங்களை சொல்கிறான்.



