வெவ்விய பெரும்பூதம்

கானகத்தில் அயோமுகி மற்றும் கவந்தனுடன் சகோதரர்களின் சந்திப்பு குறித்துப் பார்ப்போம்.

வியாசன்

3/10/20241 min read

கானகத்தில் ராவணனுடன் மோதி இறந்த சடாயுவுக்கு தந்தைக்கு ஈடாக இறுதிச் சடங்குகள் செய்து விட்டு பின்னர் அங்கிருந்து தங்கள் தேடலைத் தொடருகின்றனர் சகோதரர்கள். இந்த நிலையில் அரக்கன் கவந்தன் மற்றும் சபரி ஆகியோருடன் ராம லட்சுமணர்களின் சந்திப்பு மற்றும் அவர்களின் வழிகாட்டுதல் ஆகியவை கம்பராமாயணத்தில் முக்கியமான நிகழ்வுகளாகும். ஒரு திருப்புமுனையும் கூட சொல்லலாம். சரி. இனி கவந்தனுடன் சகோதரர்களின் சந்திப்பு குறித்துப் பார்ப்போம்.

சீதையை ராவணன் கபடவேடம் பூண்டு, கவர்ந்து சென்றதும் ராமனும் லட்சுமணனும் அவளைத் தேடிக் கானகமெங்கும் அலைந்து திரிந்தனர். ராமன் உணவும் உறக்கமும் இன்றி வேதனைப்பட்டான். சீதையின் நினைவு அவனை வாட்டியது. ஊணும் உறக்கமும் மறக்கச் செய்தது. பொதுவாக லட்சுமணன் தான் பதினான்கு ஆண்டுகள் இமைக்காமல் இருந்தான் என்பார்கள்.

“இமைத்தில இராமன் என்னும் புண்ணியன் கண்ணும்
வன்தோள் தம்பிகண் போன்ற அற்றே”

என்று லட்சுமணனின் கண்களைப் போல ராமனின் கண்களும் இமைக்கவில்லை என்று கம்பர் கூறுகிறார்.

அப்படி இருவரும் மலைத்தொடரில் வெய்யில் வாட்டும் கானகத்தில் தேடிச் சென்றார்கள். குன்றுகளையும் ஆறுகளையும் கடந்து நடந்து சென்றவாறிருந்தனர். வழியில் பறவைகள் தங்கும் குளிர்மிகு சோலையொன்றில் புகுந்தனர். மாலைப்பொழுது மறைந்து இருட்பொழுது வந்து சேர்ந்தது. மாலை மறைந்து இருள் வந்து சேர்ந்தது. அங்கிருந்த ஒரு பளிக்கறை மண்டபத்தில் இருவரும் தங்கினார்கள். இராமன் லட்சுமணனிடம் குடிப்பதற்கு நீர் வேண்டும் என்று கேட்டான். அவன் ராமனை விட்டுத் தனியே மீண்டும் கானகத்தினுள் நீரைத் தேடிச் சென்றான்.

லட்சுமணன் நீரைத்தேடிக் காட்டில் சிங்கம் போல் அலைந்து கொண்டிருந்தான். அந்த வனத்தில் இரும்பு போல முகம் கொண்ட ‘அயோமுகி’ என்ற அரக்கியொருத்தி, அவனைக் கண்டு மோகம் கொண்டு, அவனைத் தூக்கிச் சென்று தன் இச்சையைத் தணித்துக் கொள்ள முடிவெடுத்தாள். அவனைப் பின்புறமாக நெருங்கித் தழுவினாள். “இருட்டில் முரட்டுத்தனமாகத் தழுவும் நீ யார்?” என்று லட்சுமணன் கேட்க, “ஏசல் இல் அன்பினளாய் இனிது உன்பால் ஆசையின் வந்த அயோமுகி” என்றாள். “உன்னைத் தழுவப் பெருவிருப்பம் கொண்டிருக்கிறேன். “முன்னம் ஒருத்தர் தொடா முலையோடு உன் பொன்னின் மணித்தட மார்பு புணர்ந்து என் இன்னுயிரைக் கடிது ஈகுதி” என்கிறாள். இதுவரை யாரும் தொடாத என் முலையோடு உன் மணித்தட மார்பு புணரவேண்டும். உன்னை அடையாவிட்டால் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்” என்றாள்.

“என் முன்வந்து நீ நின்றால் உன் மூக்கை அறுப்பேன்” என்று லட்சுமணன் அதட்டியும் கேட்காமல் அவனை வாரி எடுத்துக் கொண்டு வான்வழியே சென்றாள். அவன் கோபம் தணிந்த தும் அவனைத் தழுவி இன்பம் பெறலாம் என்று நினைத்தாள். லட்சுமணனின் சினம் பலமடங்காயிற்று.

பளிக்கறை மண்டபத்தில் லட்சுமணனுக்காகக் காத்திருந்த ராமனின் துயர் மேலும் பலமடங்காயிற்று. சீதையைப் பிரிந்த துயர் ஒருபுறம். இப்போது நீர் கொண்டுவரச் சென்ற இளையவன் ஏதோ ஆபத்தில் சிக்கியிருக்கிறானோ என்றும் சீதையைக் கவர்ந்த ராவணன் இவனையும் கடத்திச் சென்று விட்டானோ என்றும் நினைத்தான். அல்லது அவனைக் கொன்று விட்டானோ அல்லது சீதையைக் காப்பதில் தவறிய குற்ற உணர்ச்சியால் தம்பி தன் உயிரை மாய்த்துக் கொண்டானோ என்றும் கலங்கினான் ராமன்.

கண்ணை இழந்தவன் போலக் கதறி அழுதான் ராமன். “நான் அரசு துறந்தபோதும் தனி ஒருவனாக என்னைப் பின் தொடர்ந்தாய். என் துக்கத்தில் பங்கு கொண்டு என்னோடு வந்தாய். அத்தகைய நீ என்னைவிட்டுப் பிரிதல் தகுமா? அறத்தின் செயல் இதுவாக இருக்குமேயானால் அடுத்த பிறவியில் உனக்கு நான் தம்பியாகப் பிறந்து உனக்கு என் கடமையைச் செய்வேன்” என்று வருந்தி தன் உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தான் ராமன்.

அங்கு அரக்கி அயோமுகியின் மாயப்பிடியில் அகப்பட்டிருந்த லட்சுமணன், அம்மாயையில் இருந்து விடுபட்டுத் தெளிவடைந்தான். சினம் எல்லை மீற அவளுடைய மூக்கை அறுத்தான். அவளுடைய கூக்குரல் காடுமுழுவதும் எதிரொலித்தது. அக்குரல் ராமன் வரை எட்டியது. “இது ஏதோ ஓர் அரக்கியின் குரலாகத்தான் இருக்க வேண்டும்” என்று ஓரளவு அனுமானித்தான் ராமன்.

சடாரென்று அக்கினி அஸ்திரத்தை ஏந்திக் கொண்டு ஒலிவந்த திக்கு நோக்கிப் புறப்ப்ட்டான். புயலை விட வேகமாக லட்சுமணன் இருக்குமிடத்தை அடைந்தான்.

அவனைக் கண்ட லட்சுமணன், “வள்ளலே, வருந்தற்க என்றான். இழந்த கண்ணொளியை மீண்டும் பெற்றது போல, பிரிந்த கன்றை மீண்டும் அடைந்த பசுவைப்போல ஆனான் ராமன். நடந்தவை குறித்து ராமன் கேட்கிறான். என் மீது மோகித்து என்னைப் பீடிக்க நினைத்த அயோமுகி என்ற அரக்கியின் மூக்கையும், செவியையும், உதடுகளையும் அறுத்து முடித்தேன். அவள் கூக்குரலிட்டுத் தப்பி விட்டாள் என்கிறான் லட்சுமணன். பெண்ணின் உயிரைப் போக்காமல் விட்டது உத்தமம். அதுதான் அறநெறியும் என்றான் ராமன்.

மனத்துயரம் நீங்க சற்று அமைதியடைந்த ராமன், வருணனை நினைத்து மந்திரம் கூற, வருணன் மழை நீரைத்தந்தான். இருவரும் அதனை அருந்தி வேட்கை தணித்தனர். அந்த மலையில் லட்சுமணன் அமைத்துக் கொடுத்த மரப்படுக்கையில் படுத்துக்கொண்டான் ராமன். உணவும் உறக்கமும் இன்றி வேதனைப்பட்டான். சீதையின் நினைவு அவனை வாட்டித் துயிலிழக்கச் செய்தது.

விடியற்காலையில் எழுந்து இருவரும் தங்கள் தேடலைத் தொடர்ந்தனர். மீண்டும் காடு மலையெங்கும் அலைந்து திரிந்தனர். ஒருவழியாக தண்டகாரண்யத்தை அடைகின்றனர். இவர்கள் சென்ற வழியில் கவந்தன் என்ற அரக்கன் எதிர்ப்படுகிறான். கவந்தம் என்பது தலையற்ற உடல்-அதாவது முண்டத்தைக் குறிப்பது. இவனது தலை வெளியில் தெரியாமல் வயிற்றுக்குள்ளேயே இருப்பதாலும் தலையற்ற முண்டம் போன்ற தோற்றத்தினை உடையவனாக இருந்ததாலும் இவனுக்குக் கவந்தன் என்னும் பெயர் ஏற்பட்டது.

இந்தக் கவந்தன் ஒரு முனிவரின் சாபத்தினால் அரக்க உருப்பெற்றவன். ஒருநாள் இவன் இந்திரனை எதிர்த்தபோது, அவன், இவனுடைய தலையை உள்ளே, வயிறு வரை செல்லும் படி அழுத்தி விட்டான். அவனுக்குப் பற்களோடு வாய் அவன் வயிற்றில் இருந்ததாம். தவிர மிகவும் நீளமான இரண்டு கைகளைப் பெற்றான். அந்தக் கைகளை விரித்து நீட்டி மடக்கி ஒன்று சேர்க்கும்போது இடையில் அகப்பட்ட உயிர்களையெல்லாம் தின்று விடுவான். எறும்பு முதல்‌ யானை ஈறாக எல்லா உயிர்களும்‌ அவன்‌ கையில்‌ அகப்பட்டன. காட்டில் வாழ்ந்த உயிரினங்கள் அனைத்தும் அவனிடம் அஞ்சி நடுங்கின.

கவந்தன் இருகைகளையும் நீட்டி மடக்கி அகப்படச்செய்த உயிர்கள், “திறமை அற்ற அரசனின் நாட்டு மக்கள் படுவது போன்ற துன்பத்தை அனுபவித்தன” என்கிறான் கம்பன். கவந்தனின் கைகளில் அகப்பட்ட உயிர்களின் வேதனையை ராமனும் லட்சுமணனும் பார்த்தனர். திக்குகள் அனைத்தையும் தன் கைகளுக்குள் அடக்கிய கவந்தனின் கரங்களுக்குள் ஒரு கட்டத்தில் ராமனும் லட்சுமணனுமே வலுவாக அகப்பட்டுக் கொண்டனர்.

“இது நிச்சயம் அரக்கர் செயலாகத்தான் இருக்க வேண்டும். எனவே, சீதை இந்த இடத்துக்கு மிக அருகிலேதான் இருக்க வேண்டும்” என்கிறான் ராமன். லட்சுமணன் அதை மறுக்கிறான். “இது அரக்கர் செயலாக இருந்தால் அவர்களின் முரசமும் சங்கமும் முழங்க வேண்டுமே“ என்கிறான். ஒருவேளை தங்களைப் பிணைத்திருப்பது மந்தர மலையைச் சுற்றிய வாசுகி என்ற சர்ப்பமோ என்று நினைக்கிறான் லட்சுமணன். எதுவாக இருந்தாலும் இருக்கட்டுமே என்று இருவரும் துணிந்து இரண்டு யோசனை தூரம் நெருங்கிச் சென்று அந்த அரக்கனை நேருக்கு நேர் சந்தித்தனர்.

இவனிடமிருந்து நாம் தப்பிக்க முடியாது என்று ராமன் முடிவு செய்தான். அதற்குத் தன்னை ஆளாக்கிக் கொண்டான். “சீதையைப் பிரிந்தேன். சடாயுவை இழந்தேன். கொடும்பழிக்கு ஆளாகி விட்டேன். இனியும் நான் உயிர் வாழ்வது தக்கதன்று. இந்தப் பூதத்துக்கு நான் உணவாகி விடுவதுதான் உத்தம். இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு சீதையின் தந்தை ஜனகனின் முகத்தைப் பார்க்க முடியும்? மனைவியைக் காப்பதற்குத் திறனில்லாத இவன் வாழ்ந்தென்ன பயன் என்று அயோத்தி மக்கள் நினைப்பார்கள்.அதற்கு முன்பு உயிரை விட்டால் என் பாவமும் பழியும் தீரும் என்று ராமன் நினைக்கிறான்.

அண்ணனுக்கு ஆறுதல் கூறும் விதமாக, “பெருந்துயரில் உன்னைத் துவளவிட்டு நான் மட்டும் எப்படித் திரும்புவேன் அண்ணா?. என் அன்னை சுமத்திரை, “முன்னம் முடி, இறப்பை ஏற்றுக்கொள்” என்று என்னை உன்னுடன் அனுப்பினாள். அப்படிப்பட்ட தாயின் முகத்தில் நான் எப்படி விழிக்க முடியும்? ராமன் போருக்கு அஞ்சி உயிர்விட்டான் என்ற பழி உன்னைச் சேராதா? இதைவிடக் கொடிய விலங்கு வந்தாலும், அரக்கன் வந்தாலும் நம்முடைய வாளின் முன் எம்மாத்திரம்? துணிந்து நின்றால், இந்த அரக்கனை நாம் முடித்து விடலாம் என்று கூறிக்கொண்டே முன்னேறிச் சென்றான் லட்சுமணன்.

லட்சுமணனின் உற்சாகத்தைக் கண்ட ராமனுக்கும் அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது. விண்ணை முட்டி நின்ற கவந்தனின் தோள்களை இருவரும் வாள் கொண்டு வெட்டி வீழ்த்தினர். அருவியைப் பொழியும் மலைபோல் குருதி சொரிய நின்றது அந்தக் கரிய உருவம். அந்த அரக்கவடிவு, ஆற்றல் இழந்து செயல் இழந்து, ராமனின் பெருமையைப் பலவாறு பாடியது. ராமன் பாதம் பணிந்து வணங்கி நின்றது. அரக்க உருவம் அவர்கள் முன்பு பணிந்து நின்றது.

“நீ யார்?” என லட்சுமணன் கேட்க, “என்னுடைய நாமம் தனு என்பது. நான் ஒரு தேவலோகப் பாடகன் முனிவர் ஒருவரின் சாபத்தால் நான் இப்படி அரக்க வடிவை அடைந்தேன். சாபவிமோசனம் பெற பிரம்மாவை நோக்கித் தவமிருந்தேன். சாபவிமோசனம் அளிக்க மறுத்த பிரம்மா, எனக்கு நீண்ட வாழ்நாளை வரமாக அளித்தார். என் வலிமையை பரிசோதிக்க வேண்டி, இந்திரனுடன் போரிட்டேன். இந்திரன் தன் வஜ்ராயுத்தால் என் தலைமீது ஓங்கி அடித்து என் தலையை வயிற்றுக்குள் புதைத்தான். வலிதாங்காமல் கதறினேன். இரக்கம் கொண்ட இந்திரன், என் மார்பில் ஒரு கண்ணும் வயிற்றுப் பகுதியில் பற்களுடன் கூடிய வாயையும் உண்டாக்க வழி செய்தான். இதனால் கழுத்தில்லாமல் நீண்ட கைகளுடன் கீழ்ப்பகுதி உடலுடன் விகாரமாக வாழ்ந்தேன். மேலும் இந்திரன், தற்போதைக்கு வழியேதும் இல்லையென்றாலும் நீண்ட ஆண்டுகள் கழித்து மஹாவிஷ்ணு ராமனாக அவதரிக்கப் போகிறார்.அப்போது அவருடைய கரம் தீண்டிய பிறகு நீ அரக்க வடிவம் நீங்கி மீண்டும் கந்தர்வனின் வடிவம் பெறுவாய்” என்று விமோசனம் அளித்தான்.

அதன் படி, இப்போது, தங்களின் மலர்க்கரம் தீண்ட மீண்டும் என் பழைய வடிவைப் பெறுவேன், எனக்கு நீங்கள் மோட்சம் அருள வேண்டும் என்று கூறி உயிர்நீத்தான் கவந்தன். தண்டகாரண்யத்தில், சிதையை அடுக்கி, கவந்தனுடைய உடலுக்குத் தீயூட்டினான் ராமன். எரியும் சிதையில் இருந்து மிகவும் அழகிய கந்தவர்வான தனு வெளிவந்தான்.

“உங்கள் வரவுக்காக இங்கு நான் ஆயிரம் ஆண்டுகள் காத்திருந்தேன். தங்கள் மலர்க்கரங்கள் எனக்கு மோட்சத்தை அருளியது. உங்களுக்கு என் நன்றிக் கடனை செலுத்த வேண்டும். உங்கள் பயணத்தின் நோக்கம் எனக்குத் தெரியும். சிவனும் போற்றத்தக்க ஆற்றல் மிக்க பூதகணங்களைப் பெற்றுள்ள ராவணனைத் தேடி நீங்கள் போகிறீர்கள். புணை எனப்படும் படகு இன்றி வெள்ளத்தைக் கடக்க முடியாது. அதே போல உற்ற துணையில்லாமல் நீங்கள் உங்கள் பகையை வெல்ல முடியாது. ராவணன் பூதகணங்களைத் தன் துணையாகப் பெற்றது போல நீங்களும் உற்ற துணையைப் பெற்றே அவனை வெல்ல முடியும். அதற்கு ருசியசிங்க மலையில் வானரங்களின் தலைவன் சுக்ரீவனும் அவனுடைய வானர சேனைகளுமே சரியானவர்கள். அவர்களை அடைந்து, அவர்களின் துணை கொண்டு நீங்கள் ராணவனைக் கொன்றொழித்து தங்கள் மனைவி சீதையை மீட்கலாம் பெருமானே” என்று கூறிய கவந்தன் சாபம் நீங்கியவனாக மீண்டும் கந்தர்வனாக உருமாறி வானலோகம் சென்றான்.

ராமனுக்குப் பறவையும் அன்பு காட்டியது. சாபம் நீங்கிய நிலையில் அரக்கனும் அடுத்து அவன் செய்ய வேண்டிய காரியத்தையும் சந்திக்க வேண்டிய வீரனையும் அவனுடைய படையைப் பற்றிய அறிமுகம் தந்து அவன் துணை கொள்ளலாம் என்று பரிந்துரைக்கிறான். ராமனுக்காக அவன் ஆயிரம் ஆண்டுகள் காத்திருந்து மோட்சம் பெற்றான்.

கவந்தனின் ஆலோசனையை ஏற்று இருவரும் மதங்க முனிவரின் ஆசிரமத்தை நோக்கிச் சென்றனர். அங்கு சபரி தன் பிறவிக் கடலைக் கடக்கவும் ராமனின் நயனதீட்சை பெற்று மோட்சம் பெறவும் அவர்களுக்கு சுக்ரீவனும் அவனுடைய வானரப்படையும் வசிக்கும் ருசியசிருங்க மலைக்குச் செல்லும் பாதையைக் காட்டுகிறாள். இதனால் தன் வினையை அறுக்கிறாள். இதனை, ”வினையறு நோன்பினாள் சபரி” என்னும் தலைப்பில் ஏற்கனவே பார்த்தோம்.

ராமனும் லட்சுமணனும், சுக்ரீவன், அனுமன் மற்றும் வானரப்படைகளின் நட்பில் திளைப்பது குறித்து வாலி மோட்சம் குறித்தும் இனி காண்போம்.

Subscribe to our newsletter