வினையறு நோன்பினாள் – சபரியின் பேரன்பு

சபரியைப் பற்றிய பாடல்கள் கம்பராமாயணத்தில், ஆரண்ய காண்டத்தில் வருகின்றன. இந்த ஆரண்ய காண்டத்தின் இறுதிப்பகுதி சபரி மோட்சம்.

வியாசன்

2/13/2024

ராமகாதையில் பல்வேறு பாத்திரங்கள் அன்பினால் வடிக்கப்பட்டவை. பேரன்பினால் தோய்த்து எடுக்கப்பட்டவை. ராமன் மீது கொண்ட பாசத்தையும் பக்தியையும் வெளிப்படுத்துபவை. உடன் பிறந்த தம்பியரிலிருந்து எங்கோ கானகத்தில் உள்ள குகன், அரக்கர் குலத்தில் பிறந்த விபீஷணன், கானகத்தில் மதங்க முனிவரின் ஆசிரமத்தில் வளர்ந்த சபரி என்று ஒவ்வொருவரும் அளவற்ற அன்பை சுமக்கின்றனர். ராமன் மீது பாசத்தைப் பொழிகின்றனர்.

குகனைப் போலவே, ராமனைப் பார்க்கும் முன்னரே ராமன் மீது தன் உயிரை ஆகுதி போல ஆண்டுகள் பலவாக வளர்த்து வைத்து அந்த அன்பு ஒன்றையே பூரண ஆகுதியாக அவனுக்குப் படைத்து மகிழ்ந்தவள் சபரி. அடர்வனத்தில் ராமனுக்காகக் காத்திருந்து, “வினைகளை அறுத்த வினையுறு நோன்பினாள்” என்று கம்பனால் போற்றப்படுகிறாள் சபரி.

வேடுவப் பெண்ணான சபரி, தன்னுடைய ஐந்தாவது வயதிலேயே காட்டில் தன்னுடைய கூட்டத்தை விட்டு விலகி, யாரிடமும் சொல்லாமல் வெகுதூரம் காட்டுவழியில் சிறிதும் அச்சமின்றி, நடைபயணமாகப் பயணிக்கிறாள்.

நீண்ட பயணத்துக்குப் பிறகு அவள் அடைந்த இடம் ரிஷ்யமலை அடிவாரத்தில் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்த மதங்க முனிவரின் இருப்பிடம். அங்கு முனிவர்களும் சீடர்களும் பம்பை நதியில் குளிக்கச் செல்வதைப் பார்க்கிறாள். வழியெங்கும் முட்களும் செடிகொடிகளும், சுள்ளிகளும் பாதையில் பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதைப் பார்க்கிறாள். சுள்ளிகளைப் பொறுக்கித் தூர எறிந்து, முட்களை அகற்றி பாதையைச் சீராக்கி வைக்கிறாள். அவ்விடம் எப்போதும் தூய்மையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும் வகையில் பெருக்கி, நீர் தெளித்து வைக்கிறாள். அந்த ஆசிரமத்தின் சுற்றுப்புறம் பொலிவு அடைகிறது.

மறுநாள் அவ்வழியே சென்ற மதங்க முனிவர், முள்ளும் கல்லும் சுள்ளிகளும் நிறைந்த அப்பாதையை செப்பனிட்டது யார் என்று சீடர்களிடம் கேட்கிறார். அவர்கள் தங்களுக்குத் தெரியாது என்றும் விடிந்த பிறகு பார்த்த போது இப்படி அந்த இடம் புதிய பொலிவுடன் விளங்கியது பற்றியும் கூறுகின்றனர். மறுநாள் விடியற்காலை ஒரு சிஷ்யனை மறைந்திருந்து பார்க்கச் சொல்கிறார். அந்த சிஷ்யன் சிறுமி சபரி அங்கு செய்த மாயத்தைக் கண்டுபிடித்து முனிவரிடம் கூறுகிறான். முனிவர் சபரியை அழைத்து வரச்சொல்கிறார். ஞானதிருஷ்டியில் அவருக்கு அந்தப் பெண்ணின் பிறப்புக்கான காரணம் அவருக்குப் பிடிபடுகிறது. அவளுடைய வேண்டுகோளுக்கோளுக்கு இணங்க ஆசிரமத்திலேயே தங்கி தனக்குப் பணிவிடை புரிய அனுமதிக்கிறார்.

ஆசிரமத்திலும் சபரி சில சிரமங்களை எதிர்கொள்கிறாள். முனிவரின் ஆசிரமத்தில் ஒரு பெண்ணைத் தங்க வைத்தது குறித்து வம்பு சிலர் பேசினார்கள். முனிவரையும் அவளையும் இணைத்து அவதூறு செய்தார்கள். அவற்றை முனிவர் கண்டுகொள்ளவில்லை. அப்படி வம்பு பேசியவர்களில் ஒருவன் பம்பை நதியில் இறங்கிக் குளிக்கச் சென்றபோது. அந்த நதியே நிறம் மாறி கருமை நிறம் அடைந்தது. அழுக்கும் மாசும் நிரம்பி யாரும் கால்வைக்க முடியாத அளவுக்கு நாறிப்போனது. விஷயத்தை சிலர் மதங்க முனிவரிடம் எடுத்துச்சென்றபோது, அவர் புன்முறுவல் செய்தவாறே, “அப்படியா விஷயம்? ஒன்றும் பிரச்சினையில்லை. நான் சொன்னேன் என்று சபரியை அந்த நதியில் நீராடச் சொல்லுங்கள்” என்றார். குருவின் ஆணைப்படியே சபரி, சற்றும் முகச்சுழிப்பின்றி அந்த ஆற்றில் நீராடக் கால் வைத்தாள். அந்தக் கணமே, கருமையடைந்து கழிவு நீராக ஓடிக் கொண்டிருந்த அந்த நதியின் நீர் ஸ்படிகம் போலத் தெளிவாக மாற்றமடைந்து ஓடத் தொடங்கியது. சபரியைப் பற்றி இழிவாகப் பேசியவர்கள் எல்லாம் தங்களின் பேச்சுக்களை நிறுத்திக் கொண்டனர். அவளை பக்தியுடன் பார்க்கத்தொடங்கினார்கள்.

இப்படியே நீண்ட காலம் அந்த ஆசிரமத்தில் முனிவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தாள் சபரி,

தன்னுடைய காலம் முடிவுக்கு வரப்போவதை அறிந்த மதங்க முனிவர்., அவளை அழைத்து, “என் காலத்துக்குப் பிறகும் நீ இந்தக் குடிலிலேயே தங்கியிரு. தகுந்த நேரத்தில் ராமனும் லட்சுமணனும் இங்கு வருவார்கள். பெருமாளின் திரு அவதாரமான ராமனுக்குப் பூஜையும் பணிவிடையும் பேற்றினை நீ பெறுவாய். உன் பிறவியின் பயனை அடைந்து மேலுலகம் அடைவாய்” என்று ஆசீர்வதித்தார். சபரி அங்கேயே தன் வாழ்க்கையைத் தொடருகிறாள். மதங்க முனிவருக்குப் பின்னர் அனைவராலும் மதித்துப் போற்றப்பட்டாள்.

ராமனின் தரிசனம் தனக்குக் கிட்டும் என்று மதங்க முனிவர் சொன்ன கணத்திலிருந்து ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டு அவனுக்காகக் காத்திருக்கத் தொடங்கினாள். மூப்படைந்த பிறகும், தளராது அவனுக்குப் புசிக்கத் தருவதற்காக வனத்திலேயே கிடைக்கும் சிறந்த பழங்களையும் புஷ்பங்களையும் சேகரித்து எந்நேரமும் அவன் வரலாம் என்று தயாராகக் காத்திருக்கிறாள்.

முதுமை அதிகரித்தும் அவள் காத்திருத்தல் தளர்வு அடையவில்லை. தான் உண்ணும் போது அவன் வந்து விட்டால் என்ன செய்வது என்று உணவைத் தவிர்க்கிறாள். தான் உறங்கும் போது அவன் வந்து விட்டால் என்ன செய்வது என்று உறக்கத்தைத் தவிர்க்கிறாள். ஆசிரமத்தின் சுற்றுப் புறத்தை தினமும் பெருக்கி சுத்தமாக்கி வைக்கிறாள். ராமனுக்காகக் கொண்டு வந்த பழங்களை ஒரு கடி கடித்து சுவைத்துப் பார்த்து சுவையாக இருப்பனவற்றை ராமனுக்காகத் தனியே எடுத்து வைக்கிறாள். துவர்ப்பாக இருக்கும் பழங்களை அவள் உட்கொள்கிறாள். ஆசிரமத்தின் ஒரு மூலையில் அவள் கடித்த கனிகள் காய்ந்தும் உலர்ந்தும் கிடக்கின்றன. அவள் காத்திருத்தல் ஆண்டுக்கணக்கில் தொடருகிறது.

ஒரு வழியாக சீதாபிராட்டியைத் தேடியவாறு வனத்தில் அலைந்த ராமனும் லட்சுமணனும் பம்பை நதிக்கரையில் சபரி ஆசிரமத்துக்கு வருகின்றனர். அன்று. சபரியின் காத்திருந்தல் ஒருவழியாக முடிவுக்கு வருகிறது. சபரியை சந்தித்த முதல் பார்வையில் ராமன் நெகிழ்ச்சி அடைகிறான். தாயைக் கண்ட சேயின் பரவசத்தை அடைகிறான். சபரியின் நெகிழ்வுக்கோ அளவே இல்லை. இந்த இடத்தில் கம்பன் சொல்கிறான்-

அன்னது ஆம் இருக்கை நண்ணி,
ஆண்டுநின்று, அளவு இல் காலம்
தன்னையே நினைந்து நோற்கும் சவரியைத்த
லைப்பட்டு, அன்னாட்கு
இன்னுரை அருளி, 'தீது இன்று
இருந்தனைபோலும்' என்றான் -
முன் இவற்கு இது என்று எண்ணல் ஆவது
ஓர் மூலம் இல்லான்.

அதாவது, ஆதிமூலமான ராமன், தன்னையே நினைந்து நோன்பிருந்த சபரியை அணுகி, அவளுக்குப் பல நல்லுரைகளை நல்கி, ஒரு தீமையும் உன்னை அண்டாது இருந்தனை போலும்” என்று வினவுகிறான். சபரி நெக்குருகி கண்களில் நீர் அருவியாகச் சொரிந்து, பொய்யான என்னுடைய உலகப் பற்று நீங்கியது. இதுவரை நான் செய்த அருந்தவத்தின் பலனை அடையும் காலம் வந்து விட்டது. என் பிறப்பு ஒழிந்தது பெம்மானே” என்று உருகி நிற்கிறாள். கம்பர் இதனை,

ஆண்டு அவள் அன்பின்
ஏத்தி அழுது இழி அருவிக்கண்ணள்
'மாண்டது என் மாயப் பாசம்;
வந்தது வரம்பு இல் காலம்
பூண்ட மா தவத்தின் செல்வம்;
போயது பிறவி' என்பாள்;
வேண்டிய கொணாந்து நல்க
விருந்துசெய்து இருந்த வேலை.

“வரம்பு இல் காலம் பூட மா தவத்தின் செல்வம் போயது பிறவி என்பாள்” வரம்பில்லாக்காலம் நான் இருந்த மாதவத்தின் பயனை இன்று அடைந்திருக்கிறேன் என்று சொல்லி ராம லட்சுமணகளுக்கு விருந்து படைக்கிறாள். அவள் கடித்துச் சுவைத்த பழங்களை ராமனுக்குத் தருகிறாள். லட்சுமணன் ராமன் கையைத் தடுக்கிறான். ராமன் அவனை அலட்சியம் செய்து சபரி அளித்த கனிகளை கண்ணில் நீர் சொரியப் புசிக்கிறான். அவளுடைய அன்பு ராமனை நெகிழ வைக்கிறது.

அனகனும் இளைய கோவும் அன்று
அவண் உறைந்தபின்றை
வினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின் நோக்கி, வெய்ய

ராமனும் இளையபிரானும் அன்று சபரியின் ஆசிரமத்திலேயே தங்குகின்றனர். “அரசியே எங்கள் புண்ணியம் பூத்தது. அம்மையே வாழி என்று சகோதர்கள் வாழ்த்தி நின்றினர்.

வினைகளை அறுத்த வண்ணம் நோன்பினைக் கடைப்பிடித்த சபரி ராமனை மெய்யான அன்புடன் நோக்குகிறாள். விரைந்து செல்லும் குதிரைகளை உடைய சூரியனின் மைந்தன் சுக்ரீவன், பரித்தேரோன் மைந்தன் என்று சுக்ரீவனை சொல்கிறாள். அந்த சுக்ரீவன் இருக்கும் ருசியசிருங்க மலைக்கு செல்லும் வழியை ராமனுக்கு உரைக்கிறாள் சபரி. சீதையைத் தேடிச் செல்வதற்கு அவன் உபாயங்கள் சொல்வான் என்றும் அவர்களுக்கு வேண்டிய உதவிகள் அங்கு கிட்டும் என்றும் ராம லட்சுமணர்களுக்கு வழியை உணர்த்துகிறாள் சபரி.

சபரியின் அன்பில் கட்டுண்ட ராமன் அவளுக்கு நயன தீட்சை வழங்குகிறான். மைந்தனின் பரிவுடன் தனக்காகப் பல ஆண்டுகள் நோன்பிருந்து காத்திருந்த தாயின் அன்பில் உருகுகிறான். தன்னுடைய நோன்பை முடித்து வினையை அறுத்த சபரி, மதங்க முனிவரின் ஆசிப்படி, ராமனை தரிசித்து அவனுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்து, சீதையைத் தேடிச் செல்ல அவனுக்கு மேற்கொண்டு வழியைக் காண்பிக்கிறாள். வீடுபேற்றிற்கு வழிகாட்டும் அறிஞர் போல் எடுத்துரைத்தாள் என்கிறார். பின்னர், தன் வினைகளை அறுத்த நோன்பினை முடித்த அவள் “உழந்து பெட்ரா யோகத்தின் பெற்றியாலே தன் உடல் துறந்து, தான் அத்தனிமையின் இனிது சார்ந்தாள்” என்று கம்பன் பாடுகிறார். சபரி (சவுரி) பிறப்பு நீங்கும் படலம் என்றே இப்படலம் பெயரிடப்பட்டுள்ளது.

மோட்சம் அடைந்த சபரியைப் பணிந்து வணங்கி சகோதர்கள் இருவரும் “அதிசயம் அளவின்று எய்தி, பொன்னடிக் கழல்கள் ஆர்ப்ப, புகன்ற மாநெறியில் போனார்… என்று ராம லட்சுமணர்கள் சபரிக்கு மோட்சம் அளித்துப் பின்னர் அந்த ஆசிரமத்தை விட்டு ருசியசிருங்க மலைக்குப் புறப்படுகின்றனர்.

இவ்வாறு, ராமகாதையில், அன்புக்கு இலக்கணமாக மற்றொரு அழியாப் பாத்திரமாக விளங்குகிறாள் சபரி.

Subscribe to our newsletter