இலங்கை அசோகவனம்: இந்தியர்களை ஈர்க்கும் சீதை கோவில்

உலகிலேயே சீதை அம்மனுக்கு கோவில் அமையப் பெற்ற இடமாக இலங்கை விளங்குகின்றது.

ர.அ. பிரசாத்

2/9/20241 min read

ராமாயணத்தில் அசோன வனம் என வர்ணிக்கப்படும் பகுதி என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இலங்கையின் மத்திய மலைநாட்டிலேயே சீதை அம்மனுக்கான கோவில் அமைந்துள்ளது.

அயோகத்தில் ராமர் கோவில் நிர்மாணிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டதை தொடர்ந்து, சீதை அம்மனை தரிசனம் செய்வதற்காக இந்தியாவிலிருந்து தற்போது பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகைத் தந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், அயோத்தில் ராமர் கோவில் தொடர்பான பேச்சு அதிகளவில் காணப்படுகின்ற பின்னணியில், இலங்கையில் சீதை அம்மன் கோவில் தொடர்பான பேச்சுக்களும் தற்போது அதிகரித்துள்ளது.

அசோக வனம் எங்குள்ளது?

இலங்கையின் மத்திய பகுதியில் நுவரெலியா நகரம் அமைந்துள்ளது.

நுவரெலியா நகரத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் பதுளை வழியாக செல்லும் போது, சீதாஎலிய என்ற இடத்தில் பிரதான வீதியிலேயே இந்த கோவில் அமைந்துள்ளது.

மூர்த்தி, தளம், தீர்த்தம் ஆகியவற்றை கொண்டதாக இந்த கோவில் அமைந்துள்ளமை விசேட அம்சமாகும்.

பிரதான வீதியில் ஆலயத்தின் கோபுரம் தென்படுவதுடன், வீதியிலிருந்து கோபுரத்தின் ஊடாக அமைக்கப்பட்டுள்ள படிகளில் இறங்கி கோவிலுக்கு செல்லும் வகையில் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு அருகாமையில் கங்கையொன்று ஊடறுத்து ஓடுவதனை அவதானிக்க முடிகின்றது.

கங்கைக்கு மறுபுறத்தில் பாரிய வனப் பகுதியொன்று இயற்கையாகவே அமைந்துள்ளதுடன், அந்த வனப் பகுதியில் அசோக மரங்கள் என கூறப்படும் மரங்களை இன்றும் அவதானிக்க முடிகின்றது.

சீதை அம்மன் அமர்ந்திருந்ததாக கூறப்படும் அசோக மரங்களை இன்றும் பார்வையிட முடியும்.

அதேநேரம், ராவணனினால் கடத்தி வரப்பட்ட சீதை, சுமார் 11 மாதங்கள் இந்த இடத்திலேயே சிறை வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

அவ்வாறு சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை தேடி வந்த அனுமான், இந்த இடத்தில் வைத்தே முதல் முதலாக சீதையை கண்டுள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.

அதற்கு சான்றாக, சீதையை அனுமான் சந்திக்கும் வகையிலான சிலையொன்று அந்த இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த சிலைக்கு கீழ், அனுமானின் பாதம் என கூறப்படும் அடையாளம் ஒன்றை இன்றும் அங்கு செல்லும் பக்தர்களுக்கு அவதானிக்க முடிகின்றது.

அதேபோன்று, கோவிலுக்கு அருகாமையில் செல்லும் கங்கையிலேயே சீதை நீராடியுள்ளதாக நம்பப்படுவதுடன், அந்த புனித கங்கையில் நீராடுவது பல நன்மைகளை பெற்றுத் தரும் என இன்;றும் பக்தர்கள் நம்பி வருகின்றார்கள்.

கோவில் மூலஸ்தானத்தில் சுயம்பு விக்கிரகங்கள்

இந்த சீதை அம்மன் கோவிலில் இரண்டு மூலஸ்தானங்கள் உள்ளதாக கோவிலின் பூசகர் சுதர்ஷன சர்மா தெரிவிக்கின்றார்;.

ராமர், சீதை மற்றும் லக்ஷ்மனன் ஆகியோரின் சுயம்பு விக்கிரகங்கள் இந்த கோவிலில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

இவ்வாறுள்ள சுயம்பு விக்கிரகங்கள் மூலஸ்தானத்தில் உள்ளதுடன், மற்றுமொரு மூலஸ்தானத்திலும் இதே சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

இந்த சிலைகளுக்கு மேலதிகமாக, பிள்ளையார், அனுமான் உள்ளிட்ட பல சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

அனுமான் வடிவிலாக மலைத் தொடர்.

கோவிலை சூழ, மலைத் தொடர்கள் காணப்;படுவதுடன், அதில் கோவிலுக்கு முன்பாக காணப்படும் மலைத் தொடரானது அனுமானின் உருவத்தில் காட்சியளிக்கின்றமை விசேட அம்சமாகும்.

சஞ்ஜிவீ மலையை அனுமான் கொண்டு செல்லும் போது, அதிலிருந்து வீழ்ந்த ஒரு பகுதியே இந்த மலைத் தொடர் எனவும் சிலர் கூறுகின்றார்.

அத்துடன், இந்த பகுதியில் அதிகளவிலான குரங்குகளின் நடமாட்டம் காணப்படுகின்றமையானது, அனுமான் இந்த இடத்திற்கு வந்தார் என்பதற்கு சான்று எனவும் பலர் நம்புகின்றார்கள்.

அயோத்திக்கு கொண்டு சென்ற கல்

அயோத்தில் ராமர் கோவில் நிர்மாணிக்கப்படும் சந்தர்ப்பத்தில், சீதை அம்மன் கோவிலிருந்து எடுக்கப்பட்ட கல்லொன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கோவிலின் தர்மகர்த்தாவாக சேவை புரியும், நாடாளுமன்ற உறுப்பினர் வீ.ராதாகிருஸ்ணன் இந்த புனித கல்லை, அப்போதைய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிடம் கையளித்திருந்தார்.

2021ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி இந்த கல் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், இலங்கையிலுள்ள சீதை அம்மன் கோவில் இந்திய அரசாங்கத்தின் பூரண நிதியுதவியின் கீழ் தற்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றது.

இவ்வாறு புனரமைக்கப்பட்டுவரும் கோவிலின் கும்பாபிஷேகம், எதிர்வரும் ஏப்ரல் மாதம் ராமர் ஜெயந்தி அன்று நடாத்தப்படவுள்ளதாக கோவிலின் தர்மகர்த்தாவும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.ராதாகிருஸ்ணன் தெரிவிக்கின்றார்.

கும்பாபிஷேக பெருவிழாவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதிகாரபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரலாற்று சிறப்புமிக்க சீதை அம்மன் கோவிலின் கும்பாபிஷேக பெருவிழா நடாத்தப்பட்டு, உலக வாழ் இந்து மக்களின் பாரம்பரியமிக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவிலான அமைப்பதே நோக்கம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

Subscribe to our newsletter