யார்கொல் இச்சொல்லின் செல்வன்?
ராமனும் லட்சுமணனும், சீதையைத் தேடிக் கானகத்தில் தங்கள் தேடலைத் தொடர்ந்தனர். கவந்தன் மற்றும் சபரியின் அறிவுரையின் படி வானரசேனையின் தலைவனான சுக்ரீவனின் நட்பைப் பெற்றுத்தான் தங்கள் தேடலை மேலும் தொடர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர் சகோதரர்கள்.
சகோதரர்கள் இருவரும் சுக்ரீவன் மறைந்து வாழும் ரிஷ்யமுக பர்வதத்தை நோக்கி வருகிறார்கள். இந்த இடத்தை ‘இரலையின் குன்றம்’ என்று கம்பன் தமிழ்ப்படுத்தியிருக்கிறான். இரலை என்றால் மான் என்று பொருள். மான் முகத்தின் வடிவில் இருக்கும் இந்த மலையில் சுக்ரீவன் தன்னுடைய அண்ணன் வாலிக்கு அஞ்சி நடுங்கி ஒரு குகைக்குள் பதுங்கியிருந்தான்.
இந்த மான் குன்றத்தில் ஒருமுறை மதங்க முனிவர் தவமியற்றிக் கொண்டிருந்த போது, துந்துபி என்ற அரக்கனுடன் போரிட்டு அவனைக் கிழித்துக் கொன்று வீசினான் வாலி. அவனால் கிழித்தெறியப்பட்ட துந்துபியின் உடலின் பாகம் மதங்கரின் ஆசிரமத்தில் விழுந்து அவனுடைய ரத்தம் தெறித்து அந்த இடம் அசுத்தமானது. அதனால் மிகவும் கோபமடைந்த மதங்கர், “இந்த மலையில் நீ பிரவேசித்தால் உன் தலை சுக்குநூறாகச் வெடித்து இறக்கக் கடவாய் என்று சாபமிடுகிறார். அந்த சாபத்தினால் வாலியால் பிரவேசிக்க முடியாத இடம் என்பதால் சுக்ரீவன் இந்த ரிஷ்யமுக பர்வதத்தில் தன் உயிருக்கு அஞ்சிப் பதுங்கியிருந்தான்.
இந்த நிலையில், தூரத்தில் ராமனும் லட்சுமணனும் எதையோ தேடி வருவதைக் கண்ட சுக்ரீவன், அவர்கள், தன்னைக் கொல்வதற்காக அண்ணன் வாலியால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்று நினைக்கிறான். உடனே தன்னால் அமைச்சனாக நியமிக்கப்பட்ட அனுமனிடத்தில் செல்கிறான்.
“காலின் மா மதலை! இவர் காண்மினோ; கறுவு உடைய
வாலி ஏவலின் வரவினார்கள் தாம்; வரி சிலையர்;
நீல மால் வரை அனையர்; நீதியா நினைதி' என,
மூலம் ஓர்கிலர் மறுகி ஓடினார், முழை அதனின்.”
“காற்றின் மைந்தனே, அனுமனே, அதோ பார்த்தாயா – இரண்டு பேர் வருகிறார்களே. நம் மீது தீராத பகை உடையவர்கள் போல எனக்குக் காட்சியளிக்கிறார்கள். என்னைக் கொல்வதற்காகவே அந்த வாலி, இவர்களை அனுப்பி வைத்திருக்கிறான் போலிருக்கிறது. அதற்காகவே கையில் வில், அம்புடன் என்னை நோக்கி இருவரும் வருகின்றனர். இருவரும் நீல மலை போல இருக்கிறார்கள். போய் அவர்கள் யார் என்னவென்று அறிந்து வா என்று கூறி அச்சப்பட்டுக்கொண்டே மீண்டும் குகைக்குள் பதுங்கிக் கொண்டான் சுக்ரீவன்.
இருவரையும் தான் கண்டு வருவதாகவும் அவனை விலகி அங்கேயே இருக்குமாறும் கூறி அனுமன் மலையின் உச்சியில் இருந்து ராமனையும் லட்சுமணனையும் பார்க்கிறான். அனுமனைப் பற்றிக் குறிப்பிடும் போது கம்பன் ஒரு அருமையான வார்த்தையைப் பயன்டுத்துகிறான்.
“செவிக்குத் தேனென இராகவன் புகழினைத் திருத்தும் கவிக்கு நாயகன்” என்கிறான். அனுமனைத் தன்னுடைய கவிக்கு நாயகனாக வரிக்கிறான் கம்பன். அனுமன் இல்லையென்றால் ராமநாம் என்பது சுத்தமான தேனாக இருக்காது. இந்த அனுமன் தொலைவில் வரும் ராம லட்சுமணனைப் பார்க்கிறான். அவர்களைப் பார்க்கும் போதே அனுமன் தெளிவான ஒரு முடிவுக்கு வருகிறான். இவர்கள் இருவரும் சுக்ரீவன் நினைப்பது போல வாலியினால் அனுப்பப்பட்டவர்கள் அல்லர். இருவரும் இணைந்து வருவது எப்படி இருக்கிறது என்றால், தருமமும், அந்த தருமத்தை செய்வதற்கான தகுதியும் இணைந்து வருவதைப் போல இருக்கிறது. அது போல இவர்கள் இருவரும் இணைந்து வருகின்றனர்.
சுக்ரீவன் நினைப்பது போல யாரையும் கொல்லவேண்டும் என்பது இவர்கள் நோக்கமல்ல என்று தோன்றுகிறது. அவர்கள் தேவாமிருதத்துக்கு இணையான ஏதோ ஒரு பொருளை இழந்து விட்டு அதைத் தேடிக் கொண்டு வருகிறவர்களாக இருக்கிறார்கள் என்று அனுமன் தன்னுடைய மதியூகத்தினால் தெளிவாகத் தெரிந்து கொள்கிறான்.
"தருமமும் தகவும், இவர் தனம் எனும் தகையர் இவர்
கருமமும் பிறிது ஓர் பொருள் கருதி அன்று அது
கருதின், அருமருந்து அனையது இடை அழிவு வந்துளது
அதனை, இருமருங்கினும் நெடிது துருவுகின்றனர் இவர்கள்"
தருமமும் நல்லொழுக்கத்தின் வடிவாகவே இவர்கள் கொள்ளத் தக்கவர்கள். தமக்குரிய செல்வமாக தருமத்தையும் தகவையும் எண்ணும் தன்மையுடையவர்கள். இவர்களது செயலும் வேறொரு பொருளை கருதியது அன்று. அது குறித்து ஆராய்ந்து பார்த்தால், பெறுதற்கரிய அமிழ்தம் போன்ற அரிய பொருளிற்கு இடையிலே அழிவு வந்திருக்கின்றது. அந்த அரிய பொருளையே இவர்கள் இரண்டு பக்கங்களிலும் நெடிதாகப் பார்வையை செலுத்தித் தேடுகிறார்கள் என்று அனுமன் முடிவுக்கு வருகிறான்.
அந்தணன் வடிவெடுத்து அவர்களை சந்திக்க முன்னேறுகிறான் அனுமன். சகோதர்கள் இருவரும் தன்னை நெருங்க நெருங்க, அனுமனின் உடலில் புதியதொரு அனுபவம் உண்டாகிறது. மனதின் பாரம் குறைவது போல இருந்தது. எலும்பெல்லாம் உருகுவது போல இருந்தது. ராமன் மீது எல்லையற்ற அன்பு பெருகி வருகிறது. என்பு நைந்து உருகி நெக்கு நெக்கு ஏங்கி அன்பெனும் ஆறு கரையது புரள என்பது போல அனுமன் நெருக்குருகுவதைப் போல உணருகிறான். அனுமன் பரவசத்தோடும் பெருமிதத்தோடும் ராமனுக்கு அருகில் சென்று வணங்கினான்.
ராமன் உடனே அனுமனைப் பார்த்து யார் நீ என்று கேட்டான். அதற்கு அனுமன் விடை பகர்ந்தான். “நான் வாயுவுக்கும் அஞ்சனா தேவிக்கும் மகனாகப் பிறந்தவன். என் பெயர் அனுமன். “காற்றின் வேந்தனுக்கு அஞ்சனை வயிற்றில் பிறந்தேன்; நாமமும் அனுமன் என்பேன்” என்று விரிவாய்ச் சொன்னான் அநுமன். “இம் மலையில் இருந்து வாழும் வேந்தன் சுக்கிரீவன்; அவனுக்கு யான் ஏவல் செய்வேன்; உங்கள் வரவு நல்வரவாகட்டும். நும்மை நோக்கி விரைவில் வந்தேன்; “அனையவன் ஏவலினாலே உம்மை அறிய வந்தேன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறான்.
இவன் நிச்சயம் அறிவும், ஆற்றலும், கல்வியும், ஞானமும் நிரம்பியவன்” என்பதை அவனுடைய சொல்லால் இராமன் அறிந்து கொள்கிறான். “தான் கல்லாத கலையும் அறியாத வேதங்களும் இல்லை என்று கூறும்படி இவன் பேசுகின்றான்; யார்கொல் இச்சொல்லின் செல்வன்?” என்று வியக்கிறான் ராமன். இவன் அந்தண வடிவத்தில் வந்தாலும் இவனுக்கு சொந்த வடிவம் வேறு இருக்கவேண்டும்” என்பதை இராமன் உணருகிறான்.
“நீ கூறும் உன்னுடைய தலைவன் சுக்கிரீவனைத்தான் தேடி வந்திருக்கிறோம். அவன் இருக்குமிடத்துக்கு எங்களை அழைத்துச் செல்வாயா?” என்று வினவினான் இராமன்.
இந்த நல்வாய்ப்பை எதிர்நோக்கி இருந்த அனுமன், அந்த ரிஷ்யமுகப் பருவத்தில் சுக்கிரீவன் உயிருக்கு அஞ்சி ஓடிவந்து ஒளிந்து கொண்டிருப்பதை உரைத்தான்; இந்திரன் மகனாகிய வாலி, சுக்கிரீவனைக் கொல்வதற்காகத் துரத்திக் கொண்டு வந்ததையும், சுக்கிரீவன் அங்கு வந்து ஒளிந்ததையும் கூறினான்; சுக்கிரீவன் வானரத் துணையோடு தங்கி இருக்கிறான்” என்றும் விளக்கினான்.
அவ்வாறே இராமனும்தான் அடைந்த துயரினை அனுமனுக்குச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான். அனுமன், வானர இனத்தினன் என்றும் தெரிவித்துத் தன் சுயஉருவை அவர்களுக்குக் காட்ட, வானும் மண்ணு மாய் நின்ற அவன் நெடிய வடிவத்தைக் கண்டு, வியந்தான் இராமன். அவனை ‘மாவீரன்’ என்று கூறிப் பாராட்டி மகிழ்ந்தான்.
அப்பொழுதே சுக்கிரீவனைத்தான் அழைத்து வருவதாய்க்கூறி விடைபெற்றான் அனுமன். சுக்ரீவனிடம் சென்று இராம லட்சுமணனைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறான் அனுமன்.
"வாலி என்ற அளவு இலா
வலியினான் உயிர் தெறக்
காலன் வந்தான்; இடர்க்
கடல் கடந்தனம்' எனா,
ஆலம் உண்டவனின் நின்று
அரு நடம் புரிகுவான்."
எடுத்த உடனே, இவர்கள் தெய்வ வடிவினர், திருமாலின் அவதாரம் ராமன் என்றெல்லாம் கூறினால் அது சுக்ரீவன் மண்டையில் ஏறாது என்று தெரிந்த அனுமன் அவனிடம், நேரிடையாக, வந்தவன், வாலி என்னும் அளவிலா வலிமையுடைய உன் சகோதரனின் உயிர் குடிக்க வந்த காலன் இவன் என்றும் அவனால் நாம் துயர் எனும் கடலைக் கடக்கப் போகிறோம் என்று கூறி களிநடனம் ஆடினான் என்கிறான் கம்பன்.
தன் மனைவி சீதையைத் தேடி அவர்கள் உன்னுடைய உதவியை நாடி வந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வந்திருப்பது அவர்களுடைய காரியத்துக்கு என்றெண்ணாதே. சீதையைத் தேடும் அந்த முயற்சியில் அவர்கள் வந்திருப்பது உன்னுடைய தவப்பயன். அதை நீ உணர்ந்து கொள் என்கிறான் அனுமன்.
இது கேட்டுத் தன் துன்பங்களுக்கு ஒரு முடிவு வரும் என்ற நம்பிக்கையை அடைந்தான் சுக்ரீவன். அவனுக்கு சற்றுத் தெளிவு உண்டானது. “உன்னையே உடைய எற்கு அரியது எப்பொருள்” என்று அனுமனைக் கேட்டான். அவனுடன் சென்று ராம லட்சுமணர்களை சந்தித்தான். வானரத் தலைவனாகிய அவன், மானுடர் தலைவனாகிய ராமனை அடைந்து அவனிடம் அடைக்கலம் பெற்றான். ராமனைக் கண்டபோது சுக்ரீவன் உள்ளத்தில் அளவற்ற தெளிவு பிறக்கிறது.
"தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவராம் தேவர் அன்றே
மாறி இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னோ
ஆறுகொள் சடிலத்தானும் என்று இவர்கள் ஆதி
வேறுள குழுவை எல்லாம் மானுடம் வென்றதம்மா."
இவன் தேவர்களுக்கெல்லாம் தேவன். இங்கு மனிதனாக வந்து தோன்றியிருக்கிறான். சடாமுடியில் நீரைத்தரித்த சிவன் முதலான எல்லா தேவர்களையும் இதோ இந்த மானிடம் வென்று விட்டது என்று களித்தான். சகோதரர்கள் இருவரும் அவனிடம் நல்ல முறையில் உரையாடி, நட்புறவு கொண்டு, அவனுடன் உடன்படிக்கையை செய்து கொண்டனர். குகனோடு ஐவராய் விளங்கிய தசரதன் புதல்வர்கள், சுக்ரீவனோடு அறுவரானார்கள்.
“சுகதுக்கங்களில் நாம் இருவரும் பங்கு பெறுவோம்; உனக்கு வரும் கெடுதி எனக்கு உரியதாய் ஏற்பேன்; எனக்கு வரும் துன்பம் உனக்கு வந்தது ஆகும்; உன்னுடைய பகைவர் எனக்கும் பகைவர்; என் பகைவர் உன்பகைவர்; என் நண்பர் உனக்கு நண்பர்; உன்னுடைய நண்பர் எனக்கு நண்பர்” என்று இராமன் சுக்ரீவனிடம் அறிவித்தான். இருவரும் உள்ளம் கலந்து, இனிய நண்பர் ஆயினர்; வானரர் ஆரவாரம் செய்து வாழ்த்துக் கூறினர் அனுமன் மகிழ்ச்சியின் எல்லையை அடைந்தான். சுக்கிரீவன் ராமனையும் லட்சுமணனையும் விருந்துண்ண அழைத்தான்; காயும் கனியும் கிழங்கும் கொண்டு வந்து வைத்தான்; அவற்றை உண்டு அனைவரும் அளவளாவினர்.
அப்போது, “வாலிக்கும் உனக்கும் என்ன பிரச்சினை?” என்று நேரடியாகக் கேட்டான் ராமன். அதற்கு சுக்ரீவன், “எதற்குக் கேட்கிறாய் ராமா? வாலி என்னை இடுப்பில் உதைத்து, விலாவிலே உதைத்து,கழுத்திலே உதைத்து என்று ஆரம்பிக்கிறான். இந்த நேரத்தில், அனுமன் அவனை விலகச் சொல்லி விட்டு வாலியைப் பற்றி அவன் பேசத் தொடங்குகிறான்.
வாலி தன்னைத் தாக்கியது பற்றித்தான் சுக்ரீவன் சொல்வானே தவிர வாலியின் பெருமையை அவன் சொல்ல மாட்டான் என்பதை அனுமன் உணர்ந்ததால் அப்படி அவனை விலக்கி வைத்தான் அனுமன். பகைவனாக இருப்பவன் வலிமையை எடுத்துச் சொல்ல வேண்டாமா?
"என்றவேலையில் எழுந்து, மாருதி
குன்று போல நின்று, இரு கை கூப்பினான்
நின்ற நீதியாய்! நெடிது கேட்டியால்!
ஒன்று, யான் உனக்கு உரைப்பது உண்டு எனா:"
என்று கூறி நடந்தவை அனைத்தையும் விளக்கத் தொடங்கினான் அனுமன். “அதோ தெரிகின்ற அந்த மலையில் இருக்கின்றவன் அந்த வாலி. அவன் நான்கு வேதமாகிய பயிர்கள் தழைப்பதற்கு வேலி போன்றவன். அதுமட்டுமல்ல. சூலப்படை கொண்ட சிவபெருமானின் கருணையை முழுவதும் பெற்றவன்.
"நாலுவேதமாம் நவை இல் ஆர்கலி
வேலி அன்னவன், மலையின்மேல் உளான்
சூலிதன் அருள் துறையின் முற்றினான்
வாலி என்று உளான் வரம்பு இல் ஆற்றலான்."
இன்னும் அவனைப் பற்றி என்ன சொல்ல வேண்டுமென்றால், தேவர்களும் அசுரர்களும், அமுதத்தை எதிர்பார்த்து, பாற்கடலில் வாசுகி பாம்பைச்சுற்றிக் கடைந்து கடைந்து பார்த்து கடைய முடியாமல் கைசலித்து நின்ற போது இந்த வாலி அங்கு சென்று, தேவர்களே, அசுரர்களே விலகுங்கள் என்று சொல்லி, வாசுகி என்ற பாம்பின் வாயை வலக்கையாலும், வாலை இடக்கையாலும் பற்றி கடகடவென்று கடைந்தான் ராமா. மந்திர மலை இற்றுக் கீழே விழுந்து விட்டது. அப்பேற்பட்ட தோள்வலிமை உடையவன் வாலி.
மேலும் அவனுக்கு எதிராக யார் நின்று போர் புரிந்தாலும் அவர்களின் வலிமையில் பாதி அந்த வாலிக்குப் போய்விடும்.
"கிட்டுவார்பொரக் கிடைக்கின், அன்னவர்
பட்ட நல் வலம் பாகம் எய்துவான்;
எட்டு மாதிரத்து இறுதி, நாளும் உற்று,
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்;"
எனவே இத்தனை வலிமை கொண்டவன் அந்த வாலி. அவனுடைய உத்தரவின்றி காற்று வீச முடியாது. கோள் செல்லாது அவன் முன்னர். முருகப்பெருமானின் வேல் செல்லாது அவன் மார்பில். அவன் வால் பட்ட இடத்திலே ராவணனின் ஆட்சி செல்லாது. ராவணனுக்கு வாலியைக் கண்டால் அத்தனை அச்சம். வாலி என்ற பெயரைக் கேட்டால் அவனுக்குக் குலைநடுக்கம். அவன் எங்காவது சென்றால் வாலி வந்தானா என்று கேட்பானாம். வாலி வரவில்லை. அவன் வால் மட்டும் வந்தது என்று சொன்னாலே காத தூரம் விலகி ஓடிப்போய் நிற்பானாம் ராவணன்.
ஒரு காலத்தில் வாலி ராவணனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான். “ராவணா, நீ என்னைப் பார்த்து அச்சப்படத் தேவையில்லை. உனக்குத் துன்பம் என்ன வந்தாலும் நான் உடனிருந்து காப்பேன் என்று ஒப்பந்தம் செய்து கொண்டான். தன்னைப் பார்த்து அஞ்சியவனிடம் வாலி வலியச் சென்று தருமசாட்சியாக அப்படி ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறான் என்கிறான் அனுமன்.
அந்த வாலி மூத்தவனாக, சுக்ரீவன் அவனுக்கு இளையவனாக, நான் அமைச்சனாக, குடிபடைகள் எல்லாம் கட்டுப்பட்டவர்களாக ஒன்றாகத்தான் இருந்தோம். எங்களுக்குள் பெரிய அளவில் பிரிவு ஏற்படக்கூடிய நிகழ்ச்சி ஒன்று நடந்த து. மாயாவி என்றொரு ராட்சசன். அவன் தன் பெயருக்கு ஏற்ப மறைந்திருந்து போர் செய்வதில் வல்லவன்.
அந்த மாயாவி உலகில் அனைவரையும் வென்று விட்டான். பின்னர் வாலியை வென்றால் மட்டுமே தன்னுடைய வலிமை நிலை பெறும் என்று கருதி வாலியைப் போருக்கு அழைத்தான். வாலி அந்த மாயாவியைத் துரத்திக் கொண்டு போனான். மாயாவி கபடத்தனமாக ஒரு குகைக்குள் சென்று நுழைந்து கொண்டான். வாலி மாயாவியைத் தொடர்ந்து குகைக்குள் போவதற்கு முன்பு என்னையும் சுக்ரீவனையும் அழைத்து, அனுமனே, சுக்ரீவனே நான் இந்த குகைக்குள் இருந்து திரும்பி வரும் வரை இந்த இடத்தை விட்டு நீங்கள் நகரக்கூடாது என்று கடுமையாக உத்தரவிட்டு அவன் உள்ளே சென்றான்.
சென்றவன் சென்றவன்தான். ஒரு மாதம், பல மாதம், ஒரு வருஷம் என்று காலம் கடந்து கொண்டே சென்றது. வாலி குகைக்குள்ளிருந்து திரும்பவில்லை. நாங்கள் நினைத்தோம். மாயாவி வாலியைக் கொன்று விட்டான் என்று. வாலி, மாயாவியைக் கொன்றிருந்தால் அவன் உடனே வெளியே வந்திருப்பானே. குகைக்கு உள்ளிருந்து அவன் வெளிப்படாமைக்குக் காரணம் மாயாவி அவனைக் கொன்றிருக்க வேண்டும் என்று நினைத்தோம். வாலியையே மாயாவி கொன்றிருந்தால் சுக்கிரீவனும் நாங்களும் எம்மாத்திரம் என்று கருதி, ஒரு பெரிய கல்லை அந்தக் குகைவாயிலில் அடைத்து விட்டு ஊர் திரும்பி சுக்ரீவனை மன்ன னாக ஆக்கி விட்டோம்.
நாங்கள் எண்ணியதற்கு மாறாக மாயாவியைக் கொன்றுவிட்டு வாலி வெளியில் வந்தான். குகையின் வாயில் பெரிய கல்லால் மூடப்பட்டிருப்பதைப் பார்த்து தன் காலால் எட்டி உதைத்து விட்டு சுக்ரீவனைத் தேடி வந்தான்.
சுக்ரீவன், அவன் காலில் விழுந்து கெஞ்சினான். நாங்கள் உன்னைக் கொல்ல வேண்டும் என்று அப்படிச் செய்யவில்லை. மாயாவி உன்னைக் கொன்றிருப்பான் என்று நினைத்தோம். இங்கே அரச பதவி காலியாக இருக்கிறதே என்று வானர குடிபடைகள் என்னை மன்னனாக்கினார்கள். ஆனால் எக்காரணம் கொண்டும் வாலி சுக்ரீவனை மன்னிக்கவில்லை. அவனைக் கொடுமைப்படுத்த த் தொடங்கினான். அவனிடம் ஆட்சியை மட்டுமின்றி சுக்ரீவன் மனைவியாகிய உருமை என்பவளையும் தன்னுடன் கவர்ந்து சென்றான். இப்போது சுக்கிரீவன் தன் உயிருக்கு அஞ்சி இந்த ரிஷ்யசிருங்க மலையில் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று கூறி முடித்தான் அனுமன்.
தம்பி பரதனுக்கு ஆட்சி தந்து, பாசத்தால் உயர்ந்த இராமனால் இதனை ஏற்க இயலவில்லை. மேலும் வாலி தன்னுடைய தம்பியின் தாரத்தைக் கவர்ந்து செய்த கொடுமையை மன்னிக்க இயலவில்லை; தம்பியைக் கொல்ல முயன்றதும் பின் தாரத்தைக் கவர்ந்து சென்ற இரக்கமற்ற செயல்களை அறிந்து, ராமனின் சினம் இருமடங்கு ஆகியது.
சுக்கிரீவனிடம் “நண்பனே, அஞ்சவேண்டாம். வாலியைக் கொன்று, உன் மனைவியை உன்னிடம் சேர்ப்பேன். உன்னுடைய ஆட்சியும் உன் கைக்கு மீண்டும் வரும் என்று உறுதியளித்தான் இராமன். இதைக்கேட்டு அனுமன் அகம் மிக மகிழ்ந்தான்.
ஆனாலும், சுக்கிரீவனுக்கு அடிநாதமாக ஒரு ஐயம் எழுந்தது. இடியொத்த அண்ணனின் வலிமையை நன்கு அறிந்தவன்; “மேரு மலையை எதிர்க்கும் ஆற்றல் பெருங்காற்றுக்கு ஏது?” என்று ஐயப்பட்டான்; பாற்கடலைக் கடைந்த பராக்கிரமம் நிறைந்தவன் வாலி, அண்டத்தை அளாவும் வேகம் கொண்டவன்; அத்தகையவனை இராமன் எதிர்க்க முடியும் என்பதில் அவனுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை; அனுமனைத் தனியே அழைத்து அது பற்றித் தன் ஐயத்தை வெளிப்படுத்தினான்.
அனுமன் அவன் ஐயத்தை அறிந்து, தெளிவு படுத்தினான்; “வாலியைக் கொல்லும் ஆற்றல் இராமனிடம் உண்டு” என்று கூறினான்; வேண்டுமென்றால் அவன் ஆற்றலை அறிய வாய்ப்பினைப் பெறலாம் என்றும் அறிவித்தான்; ஏழு மராமரங்களையும் ஒரே அம்பால் துளைக்கும் வல்லமை ராமனிடம் உண்டு என்பதை அவனுக்குத் தெளிவுபடுத்தினான்.
சுக்கிரீவனும் “அதுவே தக்கவழி என்று சிந்தித்தவனாய் மகிழ்ச்சி கொண்டான்; இராமனை அணுகித் தன் கருத்தை அடக்கமாய் அறிவித்தான்.
“உன்னுடைய வில்லின் ஆற்றலையும் அம்பின் வேகத்தையும் உன் விரத்தையும் எம் வானரர்கள் அனைவரும் காண விரும்புகிறார்கள். இந்த ஏழு மராமரங்களில் ஒன்றைத் துளைத்துக் காட்டினால் எங்களுக்கு ஊக்கமாக இருக்கும்” என்று தெரிவித்தான்.
“ஒரு மரம் என்ன ஏழு மரமும் என் ஒரே அம்பால் துளைபடும்” என்று கூறினான் ராமன். மராமரங்கள் ஏழும் ஒன்றன்பின் ஒன்றாய் வரிசையாய் நின்று கொண்டிருந்தன. இராமன் வில்லை வளைத்து, நாண் ஏற்றி அம்பு தொடுத்தான். அந்த ஒலியானது ஏழு உலகங்களுக்கும் கேட்டது. அனைவரும் நடுங்கினர். அந்த அம்பு ஏழு மராமரங்களையும் துளைத்து முடித்து ராமனிடமே வந்து சேர்ந்தது. இராமனுடைய வில்லாற்றலைக் கண்டு சுக்கிரீவன் சொல்லொணா மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கொண்டான். அதற்குமேல் அவர்கள் சிறிதும் தூரம் நடந்து சென்றனர். சென்ற வழியில் வாலி ஏற்கனவே கொன்ற துந்துபி என்ற அசுரனது எலும்புக் கூடு மலை போல் படிந்து கிடந்தது; அதனைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
வற்றி உலர்ந்த அந்த எலும்புக்கூடு வழிமறித்தது. இராமன் தன் தம்பியிடம் அதை அகற்றுமாறு குறிப்புக் காட்டினான். லட்சுமணன் தன் கால் நகத்தால் அதை உதைத்துத் துக்கி எறிந்தான். அது சென்ற இடம் தெரியாமல் நெடுந்தொலைவில் விழுந்து மறைந்தது. லட்சுமணன் ஆற்றலை அறியவும், இது சுக்கிரீவனுக்கு ஒரு வாய்ப்பாய் அமைந்தது.
அப்பொழுது வானரக்குலம், இடியும் அஞ்சும்படி வாய் திறந்து ஆரவாரித்தது. தூய நற்சோலையில் இராமனும் சுக்கிரீவனும் அமர்ந்து உரையாடத் துவங்கினார்கள். அப்போது சுக்கிரீவன் ஒரு விஷயத்தைச் சொன்னான்.
“இந்த வழியாக நாங்கள் சென்று கொண்டிருந்தபோது விண்வழியாய் இராவணன் கையகப்பட்ட அபலை ஒருத்தி, அழுத கண்ணீரோடு தான் முடித்து வைத்திருந்த அணிகலன் களைக் கீழே போட்டுச் சென்றாள்; அவற்றைப் பாதுகாத்து வைத்துள்ளோம்” என்று கூறி அவற்றை அவன்முன் வைத்தான்.
அந்த அணிகலன்கள் ராமனுக்கு உயிர் தரும் அமுதமாய்க் காட்சி அளித்தது; அணிகலன் கண்களினின்று மறைந்து அதனை அணியும் ஆரணங்களின் தோற்றம் அவன் கண் முன் வந்து நின்றது அணிகளைக் கண்டதால் மகிழ்ச்சியும், அணிக்கு உரியவள் அருகில் இல்லாததால், அயர்ச்சியும் அடைந்தான். இராமன் தன்னிலை கெட்டுச் சோர்ந்து மயங்கி விழுந்தான்; தான் உயிரோடு இருக்கும்போதே அணிகளைக் களையும் அவலநிலை ஏற்பட்டதே! என்று வருந்தினான். அருகிலிருந்த சுக்கிரீவன் ஆறுதலாய் நல்லுரைகள் தந்து மீண்டும் உணர்வுபெறச் செய்தான். “'கண்டது சீதையின் அணி கலன்களை; கொண்டவன் அரக்கன் இராவணன்” என்பது முடிவு செய்யப்பட்டது; அவன் எங்கிருந் தாலும் அவனைக் கண்டு தெளிந்து, கொண்டுவருவது தன்கடமை. அதற்கு நாங்களிருக்கிறோம் என்று சுக்கிரீவன் கூறினான்.
இதைத் தொடர்ந்து வாலியை வதம் செய்வேன் என்று சுக்கிரீவனிடம் சூளுரை செய்தான் ராமன். வாலி மறுமுனையில் இருந்த மலையில் ராமனின் கரங்களால் வதைபடத் தயாராக இருந்தான்.