மலைக்குல மயில் - தாரை

இறந்து கிடக்கும் கணவன் வாலியைப் பார்த்தாள்- அப்படியே அவனது உடலில் விழுந்து கட்டிப் புரண்டாள். வாலியின் மார்பிலிருந்து பெருக்கெடுத்த இரத்தம் தாரையின் உடலையும், கூந்தலையும் நனைத்தது.

வியாசன்

4/3/20241 min read

வாலி-சுக்ரீவனுக்கு இடையிலான போரில், ராமன் இடைப்புகுந்து பதுங்கியிருந்து அவனைத் தன் பாணத்தினால் வீழ்த்தினான். ராமனுடனான நீண்ட வாத்துக்குப் பிறகு வாலி தன் மார்பில் தைத்திருந்த அம்பைப் பிடுங்கி எறிந்தான். அதற்கு முன்பு அங்கதனை ராமனுக்கு அடைக்கலம் தந்தான். ராமனும் அங்கதனை அடைக்கலமாக ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத் தன் உடைவாளை எடுத்து “நீ இதை ஏற்றுக் கொள்வாயாக” என்றான். இங்ஙனம் கூறிய அளவில் ஏழுலகமும் அவனைத் துதித்தன. பின்னர் வாலி இறந்து தன் உடலை விட்டு நீங்கி மோட்சம் அடைந்தான்.

“என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி
அந் நிலை துறந்து வானுக்கு அப் புறத்து உலகன் ஆனான்"

என்கிறான் கம்பன். வாலி இறந்த செய்தியை அறிந்த தாரை, போர்க்களம் வந்து இறந்து கிடக்கும் கணவன் வாலியைப் பார்த்தாள்- அவனது உடலிலிருந்து ரத்தம் பொங்கி வழிந்தது கண்டு அப்படியே அவனது உடலில் விழுந்து கட்டிப் புரண்டாள். வாலியின் மார்பிலிருந்து பெருக்கெடுத்த இரத்தம் தாரையின் உடலையும், கூந்தலையும் நனைத்தது. கதறினாள். துடித்தாள் ஒப்பாரி வைத்து அழுதாள். வானர மகளிரைக் கொண்டு‍ அவளை அந்தப்புரத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கதனைக் கைபிடித்து அழைத்து‍ வந்த அனுமன், வாலிக்குச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களையெல்லாம் அவனைக் கொண்டு‍ நிறைவேற்றினான். சுக்ரீவன் இராமனால் மீண்டும் கிஷ்கிந்தையின் அரசனாக்கப்பட்டான். அங்கதன் இளவரசனாக்கப்பட்டான். அங்கு இராவணனுக்கு‍ நட்பான அரசாங்கம் அகன்று, இராமனுக்கு‍ நட்பான அரசாங்கம் அமைந்தது.

பின்னர், ராமன் சுக்ரீவனை அழைத்து அறிவுரைகளை வழங்கினான். சுக்ரீவா, நீ அங்கதனோடு ஒற்றுமையாக இருந்து நல்லரசை நடத்து. அமைச்சரையும் படைத்தலைவரையும் தக்க வகையில் பயன்படுத்திக் கடமைகளை செய்து முடிப்பது அறிவுடைமையாகும். செல்வத்தைக் காத்துதக்க வழியில் செலவு செய்ய சிந்தனை செலுத்துவாயாக. நாட்டு மக்களிடத்துத் தாயினும் அன்பு செலுத்து. அதேசமயம் தீமை செய்பவர்களைக் களை நீக்குவதுபோலத் தண்டிக்கத் தயங்காதே. என் அறிவுரையை ஏற்று ஆட்சியை இனிது நடத்து வாயாக; மழைக்காலம் கழிந்த பின்பு கடல் போன்ற நின் சேனையுடன் இங்கு வந்து சேர்வாயாக” என்று சொல்லி அனுப்பினான்.

சில நாட்கள் தங்களோடு தங்கும்படி, ராமனையும் லட்சமணனையும் கேட்டுக் கொண்டான் சுக்ரீவன். “தவ வாழ்க்கையை மேற்கொண்ட எங்களுக்கு அரண்மனை வாசம் கூடாது. அதோடு, சீதையைப் பிரிந்து துயருறும் தனக்கு சுக வாழ்க்கை தேவையில்லை என்றும் கூறி நகருக்கு வந்து தங்குவதற்கு மறுத்தான் ராமன்.

ராமனின் கூற்றுக்கு மறுவார்த்தை ஏதும் பேசாத சுக்ரீவன், அவனது உயர்ந்த தவ உறுதியைக் கண்டு, அவனுடைய விருப்பத்துக்கு மாறாக எதையும் செய்ய விரும்பாதவனாய், கண்களில் நீர் பெருக, நெடுஞ்சாண் கிடையாகக் கீழே விழுந்து வணங்கி அளவற்ற துக்கத்தை சுமந்து கொண்டு கிஷ்கிந்தை நகரை நோக்கிச் சென்றான்.

இங்கே கம்பன், சுக்ரீவன், ராமனை வணங்கிய விதத்தை, “நெடிது தாழ்ந்து” என்ற பதத்தை உபயோகிக்கிறார். நெடிது தாழ்தல் என்றால் உடலின் எட்டுப் பாகங்களும் தரையில் பட விழுந்து வணங்குதல் என்று பொருளாகும்.

அங்கதனை அழைத்து ராமன், நீ சுக்ரீவனை உன்னுடைய சிறிய தந்தை’ என்று நினைக்காது, பெற்ற தந்தையாக மதித்து, அவனுடைய ஏவலை ஏற்று, அவனுக்கு நன்மகனாய் நடந்துகொள்” என்று அறிவுரை கூறி அவனைக் கிஷ்கிந்தைக்கு அனுப்பி வைத்தான்.

அனுமனை அழைத்து, பேரெழில் வீர!. நீ போய் சுக்ரீவனின் அரசுக்குத் துணையாக இரு” என்றான். அதற்குப் பொய் என்பதே அறியாத அனுமன், “அடியேன் இங்கேயே தங்கி உங்களுக்கு என்னால் இயன்ற குற்றேவல்களை செய்கிறேன்” என்றான். அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடமை ஆகிய நற்பண்புகளைக் கொண்ட வாலி இங்கு அரசாட்சி செய்தான். இப்போது அவன் இல்லாத நிலையில் புதியவன் சுக்ரீவன் ஆளும்போது நாட்டை எதிரிகள் எவரேனும் கைப்பற்ற நினைக்கலாம். எனவே நீ போய் அவனுடன் இருந்து நல்லாட்சி செய்து எங்களுக்கு உதவும் வண்ணம் படைகளைத் திரட்டிக் கொண்டு வந்து சேர்வாயாக” என்றான்.

“ஆழியான் அனைய கூற, ஆணை ஈதாகின், அஃதே
வாழியாய்! புரிவன் என்று வணங்கி மாருதியும் போனான்
சூழிமல் யானை அன்ன தம்பியும் தானும் தொல்லை
ஊழி நாயகனும் வேறோர் உயர்தடம் கின்றம் உற்றான்”

ராமன் அவ்வாறு கூற, “தங்கள் ஆணை இதுவாகில், அப்படியே செய்கிறேன் என்று அனுமன் கிஷ்கிந்தைக்குப் புறப்பட்டான். சுக்ரீவன், அங்கதன் மற்றும் அனுமனை அனுப்பிவிட்டு ராமனும் லட்சமணனும் தங்கியிருந்த மலைக்குப் பெயர் பிரஸ்ரவண மலை. அவர்கள் அங்கு சென்று தங்கியது தக்ஷிணாயன காலம். சூரியன் தெற்கு நோக்கி நகருகின்ற காலம். ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள ஆறு மாதங்கள் தக்ஷிணாயன புண்ணிய காலம் என்பார்கள். இராமன் தென்திசை நோக்கி ஏவிய தூதனைப் போல சூரியனும் தென்திசை நோக்கிப் பயணமானான். பின்னால் அனுமன் தென்திசைக்கு ராமனின் தூதனாகப் போகப் போகிறான் என்பதை சூரியன் தென்திசை நோக்கிப் பயணமாவதற்கு ஒப்பிட்டுக் கம்பன் வர்ணிக்கிறான்.

காலம் ஓடிக் கொண்டிருந்தது. ஒருவழியாகக் கார் காலமும் முடிவடைந்தது. மழை நின்று வானம் வெளுத்தது. தனக்கு வாக்களித்தபடி சுக்ரீவன் இந்நேரம் படையைத்திரட்டி இங்கே வந்திருக்க வேண்டும். ஆனால் அவன் சொன்னபடி படை கொண்டு வரவில்லையே என்று ராமன் கடுஞ்சினம் கொண்டான்.

“லட்சுமணா, நமது உதவியால் பெறற்கரிய அரசாட்சியைப் பெற்றதை சுக்ரீவன் எண்ணிப் பார்க்காமல் சொன்ன சொல் மறந்தான். செய்நன்றி மறந்தான். அதுமட்டுமின்றி நம் வீரத்தையும் மறந்து விட்டான். சுகபோகத்தில் அமிழ்ந்து கிடக்கிறான் போலும். நீ போய் அவன் மனநிலை அறிந்து வா” என்றான்.

ராமனது ஆணைப்படி, சுக்ரீவனை நாடி, இலக்குவன், கிஷ்கிந்தை நகருக்குச் சென்றான். “மராமரத்தைத் துளைத்த ராமனின் அம்பு போல” அவன் விரைந்து சென்றான் என்கிறான் கம்பன். கிஷ்கிந்தை மலையை அடைந்து, அங்கு ஓர் குன்றின் உச்சியில் ஏறி ஆண்சிங்கம் போல நின்று பார்த்தான். இக்காட்சியைக் கண்ட வானரங்கள் ஓடிச்சென்று அங்கதனிடம், மிகுந்த கோபத்துடன் லட்சுமணன் வந்திருப்பதை சொல்கின்றன. அவன் லட்சுமணன் குறிப்பறிந்து சிற்றப்பன் சுக்ரீவனிடம் சென்றான்.

அங்கு அரண்மனையில், மெத்தென்று மலர்கள் பரப்பிய மஞ்சத்தில் இளமகளிர் பாதங்களை வருட நித்திரை செய்து கொண்டிருந்தான் சுக்ரீவன். தெளிந்த அறிவின்றி, கள் குடித்த போதைக்கு ஆளாகி, மதிமயங்கிக் கிடந்த சுக்ரீவனிடம் சென்று மெல்ல அவனை எழுப்புகிறான்.

"எந்தை! கேள்! அவ்விராமற்கு இளையவன்
சிந்தையுள் நெடும் சீற்றம் திருமுகம்
தந்தளிப்பத் தடுப்பரும் வேகத்தன்
வந்தனன், உன் மனக் கருத்து யாது? என்றான்”

நிலைமை விபரீதமாகச் சென்று கிடப்பதை உணராமல் சுக்ரீவன் போதையில் படுத்துக் கிடந்தான். இவனிடம் பேசிப் பயனில்லை என்று அங்கதன் அனுமனிடம் நிலைமையை விளக்கினான். அன்னை தாரையை அணுகி, சுக்ரீவனுக்கு நிலைமையைத் தெரிவியுங்கள் என்று அனுமன் அறிவுரை கூறினான்.

வாலியின் மறைவுக்குப் பிறகு அவனுடைய மனைவி தாரை, சுக்ரீவனுடனே வசித்து வந்தாள். மற்ற ராமாயணங்களில், வாலியின் மரணத்துக்குப் பிறகு தாரை, சுக்ரீவனை மணந்து கொண்டு அவனுடைய பட்டத்து அரசியாக இருந்தாள் என்று கூறுகின்றன. ஆனால் கம்பன் தன்னுடைய ராமாயணத்தில், சுக்ரவன் அவளைத் தன்னுடைய தாயாக ஏற்றுத் தன் அரண்மனையில் தங்க வைத்திருந்தான். அரசாட்சி தொடர்பாக ஒவ்வொரு விஷயத்திலும் அவளுடைய ஆலோசனைகளைக் கேட்டு நடந்தான் என்று கூறுகிறான் கம்பன். தாரையை சுக்ரீவன் மணந்தான் என்ற குறிப்பு கம்பராமாயணத்தில் எங்கும் கிடையாது.

மேலும் தாரை மதியூகம் மிக்கவள். சுக்ரீவன் ராமனை அழைத்துக் கொண்டு வாலியைப் போருக்கு அழைத்த போது அவனுக்குத் தக்க அறிவுரைகள் நல்கியவள். அவனைத் தடுக்க முயற்சித்தவள். சேனையின் ஒற்றர்கள் அளித்த செய்தியை வாலிக்கு எடுத்துக் கூறி, ராம லட்சுமணர்களின் பலத்தினால்தான் சுக்ரீவன் இப்படி சண்டைக்கு அழைக்கிறான் என்றும் போருக்குப் போகவேண்டாம் என்றும் வாலிக்கு எடுத்துரைத்தவள் தாரை. இப்படிப்பட்ட மதியூகம் கொண்ட தாரைக்கு அனுமனும் அங்கதனும் நிலைமையை விளக்கினார்கள். தாரை இவர்களைப் பழித்தாள். “ராமலட்சுமணர்கள் செய்த உதவி மீதான நன்றி மறந்து விட்டீர்கள் போலும்” என்றாள்.

இதற்கிடையே கிஷ்கிந்தா மலையின் பாறை ஒன்றின் மீது சிங்கம் போலக் கர்ஜித்து நின்ற லட்சுமணனுக்கு அஞ்சி, வானரங்கள் ஒன்று சேர்ந்து கோட்டைக் கதவைச் சார்த்தி பாறைகளைக் கொண்டு வழியை அடைத்து வைத்தன. இதைக் கண்ட லட்சுமணன் கடுஞ்சினத்தால் தனது பாதங்களால் அக்கதவை ஓங்கி ஒரு உதை விட்டான். அக்கதவும், கோட்டை மதிற்சுவரும், வாயிலையொட்டிய மலைகளும் நொறுங்கி விழுந்தன. இதைக் கண்ட வானரங்கள் திசைக்கொன்றாக ஓடிப்போய் பதுங்கிக் கொண்டன.

இதையறிந்த அங்கதன் முதலானோர் மீண்டும் தாரையிடம், இதோ லட்சுமணன் வந்து விட்டான்” என்று அச்சத்தில் நடுங்கினார்கள். தாரை யோசித்தாள். பெண்ணாகிய நான் அவன் முன் சென்றால் அந்தப் பெருந்தகை தன் கோபத்தைக் காட்ட மாட்டான். நான் போய் அவனிடம் விளக்கிக் கூறுகிறேன் என்று கிளம்பினாள்.

கிஷ்கிந்தைக்குள் நுழைந்த லட்சுமணன், நேராக சுக்ரீவனின் மாளிகை வாயில் முன்வந்து நின்றான். அப்போது எதிரே பெண்கள் கூட்டம் புடைசூழ, ‘மலைக்குல மயில்’ தாரை சென்று லட்சுமணன் முன்பு தோன்றினாள். வானர சேனை தன்னை எதிர்கொள்ளும் என்று நினைத்த லட்சமணன் இப்படி பெண்கள் கூட்டமாக நிற்பதைக் கண்டு தலைகுனிந்து நின்றான். அப்போது லட்சுமணனை நோக்கித் தாரை சொன்னாள்.

“மைந்தா, நாங்கள் எல்லையற்ற காலம் செய்த தவத்தின் பயனாக நீ எம் இல்லம் தேடி வந்திருக்கிறாய். நாங்கள் புனிதம் அடைந்தோம். நீ தனித்து எம் இல்லம் வந்தது, யாம் செய்த புண்ணியமே” என்றாள்.

முதலில் இப்படிப் பேசியவளின் முகத்தை லட்சுமணன் ஏறிட்டுப் பார்க்கவில்லை. பின்னர் சற்று சினம் குறைந்து அவளது ஒளி இழந்த முகத்தைத் தன் தலை நிமிர்ந்து பார்த்தான். அங்கே அவன் எதிரில் கைம்மைக் கோலத்தில் தாரை நிற்பதைக் கண்டதும் அவனுக்குத் தன்னுடைய தாயின் நினைவு வந்தது. அவளும் இப்படித்தானே கைம்மைக் கோலத்தில் மங்கலமிழந்து, களையிழந்து காட்சியளிப்பாள் என்று வருந்திய பிறகு தாரைக்கு பதில் கூறினான்.

“கார்காலம் முடிந்ததும் சேனைகளை ஒன்று திட்டி, அவர்களை நாலா திசைகளிலும் அனுப்பி சீதா பிராட்டியைத் தேடித்தருவேன் என்று என் அண்ணன் ராமபிரானுக்கு அளித்த வாக்கை சுக்ரீவன் மறந்திருக்கிறான் போலும். அவன் கொடுத்த வாக்கை நிறைவேற்ற என்ன செய்யப் போகிறான் என்பதைத் தெரிந்து வா என்று என் அண்ணன் என்னை அனுப்பியிருக்கிறார்” என்றான்.

இதற்குத் தாரை, ஐயனே, சிறியவன் தீமை செய்தால் சீற்றம் கொள்ள வேண்டாம். நீங்கள் செய்த உதவிகளை சுக்ரீவன் மறக்கவில்லை. அவன் பல இடங்களுக்கும் தூதர்களை அனுப்பி படைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான். இதனால் தாமதம் ஏற்பட்டது. நீங்கள் செய்த உதவிக்கு நாங்கள் எப்படி நன்றிக்கடன் செலுத்துவது? செம்மை சேர் உள்ளத்துக்கு உரியவர்களே, சுக்ரீவன் உங்களைப் புறக்கணித்தால் அவன் இம்மையிலும் மறுமையிலும் வறுமை எய்தி அனைத்தையும் இழப்பான்” என்றான்.

இது கேட்ட லட்சுமணன் அவள் மீது கருணை மிகுந்து தன் கோபத்துக்காக வெட்கப்பட்டுக் கொண்டு நின்றான். நிலைமை சீரடைவதைக் கண்டு அனுமனும் அங்கதனும் மெல்ல அங்கே வந்தனர். அங்கதன் ஏற்கனவே சுக்ரீவனிடம் சொல்லி அவனைத் தயார் செய்து வைத்திருந்தான். “நாம் எந்தத் தவறும் செய்யவில்லையே? லட்சுமணனுக்கு எதற்கு நம் மீது கோபம்?” என்று கேட்டான் சுக்ரீவன். அதற்கு அங்கதன்-

“இயைந்த நாள் எந்தை நீ சென்று எய்தலை; செல்வம் எய்தி
வியந்தனை; உதவி கொன்றாய்; மெய்யிலை என்ன வீங்கி
உயர்ந்தது சீற்றம்; மற்று இது உற்றது செய்கை முற்றும்
நயம் தெரி அனுமன் வேண்ட நல்கினன் நம்மை, இன்னும்”

“நீ சொன்ன வார்த்தைப் படி சொன்ன நாளில் அவர்களுக்கு நீ உதவி செய்யப் போகவில்லை. அவர்கள் உதவியால் உனக்குக் கிடைத்த செல்வச் செருக்கில் உன்னை மறந்து விட்டாய். செய்நன்றி மறந்தாய் என்று அவர்கள் உன் மீது கோபம் கொண்டிருக்கிறார்கள். நல்ல வேளை என் தாய் தாரை லட்சுமணனிடம் பேசி அவனை சமாதானப்படுத்தியிருக்கிறாள். அனுமனும் அவனிடம் நயம்படப் பேசி அவர்கள் கோபத்தைத் தணித்திருக்கிறான்” என்றான்.

அங்கதனின் வார்த்தைகளைக் கேட்ட சுக்ரீவன், லட்சுமணனை அரண்மனைக்குள் அழைத்து வருமாறு அவனை அனுப்பித் தன் படை பரிவாரங்களுடன் புடைசூழ வாயிலில் நின்று வரவேற்றான். வானரப் பெண்கள் மலர்களையும் நறுமணப் பொடிகளையும் தூவி சாமரங்களைக் கொண்டு வீசி லட்சமணனை வரவேற்றனர். அங்கே ஒரு அரியணையில் அமருமாறு லட்சமணனை வேண்டினான் சுக்ரீவன். லட்சுமணன் அதனை மறுத்தான்.

“கல்மனம் படைத்த கைகேயி ராமனுக்கு அரசாட்சி இல்லை என்றதும் மணி துறந்து எம்பிரான் புல்லணையில் வைக, நான் மட்டும் பூப்போட்ட மெல்லணை மேல் அமர்வதோ?” என்று கூறி கல் தரையில் அமர்ந்தான் லட்சுமணன்.

இதைக் கண்ட சுக்ரீவன் திகைத்துப் போய் நின்றான். விம்மினான். கண்களில் நீர் ஆறாய் பெருக நின்றான். நீராடிவிட்டு உணவு உண்ண அழைத்தபோதும் இளவல் மறுத்தான்.

“பச்சிலை கிழங்கு, காய் பரமன் நுங்கிய
மிச்சிலே நுகர்வது வேறுதான் ஒன்று
நச்சிலேன்; நச்சினேனாயின், நாய் உண்ட
எச்சிலே அது, இதற்கு ஐயம் இல்லையால்”

அதாவது, ராமன் உண்ட பச்சிலை, கிழங்கு, காய் இவற்றில் மிச்சம் இருப்பதைத் தவிர தான் வேறு ஒன்றையும் உண்கிலேன். அப்படி நான் விரும்பினேனால், அது நாய் உண்ட எச்சிலாகத்தான் இருக்கும்” என்று உறுதிபடக் கூறினான் லட்சுமணன் என்கிறான் கம்பன்.

இதைக்கேட்ட சுக்ரீவனுக்கு செல்வமும் அரசவாழ்க்கையும் வெறுப்பு அளித்தது. அனுமனை அழைத்து, “நெறிவலோய்! முன்பு நான் இட்ட கட்டளையின் படி வானர சேனையைத் திரட்டச் சென்றிருக்கிற தூதர்களோடு இனி வரும் வானர சேனையையும் உன்னோடு அழைத்துக் கொண்டு வந்து இந்த இடத்திலேயே இரு” என்று ஆணையிட்டு லட்சுமணனுடன் ராமன் இருக்கும் இடம் நோக்கிச் சென்றான். உடன் அங்கதனும் சென்றான். அனைவரும் ராமன் இருக்கும் இடம் நோக்கி விரைவாகச் சென்றனர். காட்டிலிருந்த ராமனைக் காண வந்த பரதன் போல சுக்ரீவன் வேகமாகவும் ஆர்வத்தோடும் வந்தான் என்கிறான் கம்பன்.

ராமன் தங்கியிருந்த இடத்தை அடைந்த சுக்ரீவன் அவனைக் கண்டு வணங்கி நின்றான். அவனை அருகழைத்த ராமன் அவனுடைய உடல்நலம் மற்ற நலன்களைப் பற்றி விசாரிக்க, “நின்னருள் பெற்ற எனக்கு என்ன குறை?” என்றான் சுக்ரீவன். பிறகு அனுமனைப் பற்றி விசாரிக்கிறான் ராமன். அவன் படைகளைத் திரட்டிக் கொண்டு வந்து கொண்டிருக்கிறான் என்ற கூறினான். நீயும் உடன் போய் படை திரட்டி வா என்ற அவனை அனுப்பி வைத்தான் ராமன்.

வானரப்படைகள் ஒன்று திரண்டன. பல்வேறு திசைகளிலிருந்தும் வானரப்படைகள் ஒன்று குவிந்தவண்ணமிருந்தனர். கண்ணுக்கெட்டிய வரை இருந்த வானரப்படையை லட்சுமணன் பார்வையிட்டான். அப்படி வந்து சேர்ந்த படைகளைப் பற்றி கம்பன் சொன்ன கணக்கைப் பார்ப்போம்.

கொஞ்சம் மூச்சை இறுகப்பிடித்துக் கொண்டு அதை வாசிப்போம்.

சதவலி என்னும் வீரன் ஆயிரம் வலிமை கொண்ட படைத்தளபதிகளோடும், பதினாயிரம் கோடி படைவீரர்களுடன் வந்து சேர்ந்தான். சுடேணன் என்பவன் மேரு மலையைப் பிடுங்கி எடுக்கக் கூடிய வலிமை கொண்ட பத்து லட்சம் கோடி குரங்குப் படையுடனும், சுக்ரீவனுடைய மாமனார் தாரன் அதாவது ருமையின் தந்தை ஆறு எண்ணாயிர கோடி வானர படையுடனும், அனுமனின் தந்தையும் அஞ்சனையின் கணவனுமான கேசரி என்பவன் ஐம்பது ஆய நுறாயிரம் கோடி பெரிய படையுடனும், சுவாட்சன் என்பவன் ஈரிரண்டு ஆயிரம் கோடி படையுடனும், வராகம் போன்ற கரடி இனத்தலைவனான தூமிரன் இரண்டாயிரம் கோடி கரடிப்படையுடனும், பெரிய மலையைப் போன்ற உருவம் கொண்ட பனசன் என்பவன் பன்னிரெண்டாயிரம் கோடி படையுடனும், கொடிய கூற்றை ஒப்பும் வானர வீரனான நீலன் பதினைந்து கோடி நெடி வானரப்படையுடனும், கவயன் என்னும் வீரன் முப்பதினாயிரம் கோடி குரங்குச் சேனையுடனும், முப்பது கோடி குரங்குச் சேனையுடன் தரிமுகன் என்பவனும், ஆயிரத்து அறுநூறு கோடி பெரிய படையுடன் சாம்பன் என்பவனும், இரண்டு கோடி வெம்படையுடன் துன்முகன் என்பவனும், கோடி கோடி நூறாயிரம் எண்ணுள்ள படை கொண்டு துமிந்தன் என்பவனும், நூறு லட்சம் கோடி படைகளுடன் மைந்தன் கஜகோமுகன் என்னும் வீரனும், ஒன்பது கோடி படை வீரர்களடன் கமுதன் என்ற படைத்தலைவனும், ஐந்தாயிரம் கோடி சேனையுடன் அனுமனும். நூறாயிரம் கோடி சேனையுடன் நளன் என்பானும், கணக்கற்ற சேனை வெள்ளத்தோடு கும்பசங்கர் என்னும் படைத்தளபதியும், இப்படிப் பற்பல வீரர்கள் தத்தம் படைகளுடனும் வந்து சுக்ரீவனை வணங்குகின்றனர்.

இப்போது கொஞ்சம் மூச்சை வாங்கிக் கொள்ளலாம்.

சரி. அது இருக்கட்டும். இப்படி நாலா திசைகளிலிருந்தும் குவிந்த சேனை வெள்ளத்தைக் காண வருமாறு ராமனை சுக்ரீவன் வேண்டினான்

“ஐயனும் உவந்து அகம் என முகம் மலர்ந்து அருளித்
தையலாள் வரக் கண்டனனாம் எனத் தளிர்ப்பான்
எய்தினான் அங்கோர் நெடுவரச் சிகரத்தில் இருக்கை
வெய்யவன் மகன் பெயர்த்தும் அத்தானையின் மீண்டான்".

இப்பெரும் படையைக் கண்டு தன் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து ஏதோ சீதையே நேரில் வந்து விட்டது போலக் கிளர்ச்சி அடைந்தான் ராமன் என்கிறான் கம்பன். மந்திராலோசனை தொடங்கியது. சீதையைத் தேடுவதற்காக நாலா திசைகளுக்கும் வீரர்களை அனுப்புகிறான் சுக்ரீவன். மேற்கு திசைக்கு இடபன் என்னும் வீரனையும், சதவலி என்ற தளபதியை குபேரன் வாழும் வடக்கு திசைக்கும், விந்தன் என்பவனை இந்திரனுக்குரிய கிழ் திசைக்கும் செல்லும்படி ஆணையிடுகிறான். பிறகு அனுமனை நோக்கி, “ஐய, நீ புவனம் மூன்றும் நின் தாதையின் புக்கு உழல் தவன வேகத்தை ஓர்கிலை, தாழ்த்தனை கவன மாக்குரங்கின் செயல் காட்டியோ” என்றான்.

அதாவது, அனுமனே, நீ உன் தந்தையாகிய வாயுபகவானைப் போல மூவுலகிலும் சஞ்சரிக்க வல்லவன் உன் ஆற்றலை வெளிக்காட்டும் தருணம் இதோ வந்து விட்டது. நீ போய் சீதா பிராட்டியை எங்கிருந்தாலும் தேடுக. பாதாளத்திலோ, பூமியிலோ, சுவர்க்கத்திலோ எங்கிருந்தாலும் தேடிக் கொணர்க என்றான்.

“ராவணன் தென்திசையில் இருக்கிறான். நீ அத்தென்திசைக்குச் சென்று அரக்கர்களை வென்று புகழ் பெறவேண்டும். உன்னையன்றி வேறு யாரால் இந்தக் காரியத்தை செய்ய முடியும்? உனக்குத் துணையாக ஜாம்பவானையும் அங்கதனையும் அழைத்துச் செல். இரண்டு வெள்ளம் வானரப்படைகளையும் உன்னுடன் அழைத்துச் செல்” என்று ஆணையிட்டான் சுக்ரீவன்.

தெற்கு நாடிச் சென்று, விந்திய மலைக்குச் சென்று அங்கிருந்து நர்மதா நதிதீரத்தை அடைந்து, அங்கிருந்து ஹேமகூடத்தை அடைவீர்கள். அதை வேகமாகக் கடந்து பெண்ணை நதிக்கரையை நோக்கிச் சென்று அங்கும் நன்கு தேடிப் பார்த்து தெற்கு நோக்கிச் செல்லுங்கள்” என்றான். இப்படித் தேடித்தேடி, கோதாவரி, திருவேங்கடமலை, தொண்டை நாடு, காவிரி வளநாடு, என்று தேடி பிறகு தென்தமிழ்நாடாம் பாண்டியர்கள் ஆளும் பிரதேசத்தை அடைந்து பொதிகை மலை கண்டு, அகத்திய முனிவரின் தமிழ்ச்சங்கம் கண்டு, பொருநைத் திருநதி கண்டு எல்லா இடங்களிலும் தேடி ஒரு மாத காலத்துக்குள் இங்கு வந்து சேர வேண்டும் என்றான்.

பிறகு ராமன், அனுமனைத் தனியே அருகழைத்து, “உன் தேடலில் நீ சீதையைக் காண்பாயானால் அவள்தான் சீதை எனத் தெளிவதற்காக அவளது அங்க அடையாளங்கள் சிலவற்றைக் கூறுகிறேன் என்று அவளுடைய பாதங்களின் மென்மை பற்றி விவரிக்கிறான். தாமரை மலரோ பிற மலர்களோ அவள் பாதங்களுக்கு இணையாக மாட்டாது என்கிறான்.பிறகு தனக்கும் சீதைக்கும் இடையில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளை அவளுக்கு நினைவூட்டி சீதையிடம் கூறும் படி சொல்கிறான்.

முன்பு ராமன் மிதிலைக்குச் சென்ற போது மாடத்தில் நின்று கொண்டிருந்த சீதையைக் கண்டதும் அப்போது ஒருவரை ஒருவர் கண்ணோடு கண் நோக்கிய செய்தியைக் கூறினான். அரசவையில் சிவன் தனுசு முறிந்து விட்டது என்ற செய்தி அறிந்ததும் தான் கன்னி மாடத்தில் நின்றிருந்த போது முனிவனுடன் வந்தவன்தான் அதை முறித்திருக்க வேண்டும். இல்லையெனில் என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று சீதை நினைத்த செய்தியை அவளுக்கு உரைப்பாயாக. நான் காட்டுக்குப் புறப்பட்ட போது தானும் உடன்வருவதாக அவள் கூறினாள். இது காறும் என் சுகதுக்கங்களில் பங்கு கொண்ட நீ, இனி துன்பம் தருபவளாக ஆக நினைத்தாயோ என்று நான் கூறியதை அவளுக்கு நினைவு படுத்து. அதற்கு சீதாபிராட்டி, என்னைத் தவிர மற்ற யாவும் இன்பம் தருபவையோ என்று சிரித்துக் கூறியதையும் நினைவு படுத்து. சீதையோடு தான் கானத்துக்குப் புறப்பட்ட போது, அயோத்தி நகரக் கோட்டையைத் தாண்டும்போதே கானகம் வந்து விட்டதோ என்று கேட்ட அவளது பேதைமையை சுட்டிக் காட்டுவாயாக என்றான்.

இவ்வாறு தங்களுக்கு இடையிலான பல நிகழ்ச்சிகளைக் கூறுமாறு சொல்லி, தன் கணையாழியை சீதையிடம் அடையாளமாகக் காட்டும்படி அனுமனிடம் கேட்டுக்கொண்டான். ராமனிடமிருந்து கணையாழியைப் பெற்ற அனுமனும், அங்கதன், ஜாம்பவான் ஆகியோருடனும் பெரிய படைகளுடனும் தென்திசை நோக்கிப் புறப்பட்டான். சுக்ரீவன் சொன்ன வழியில் பயணப்பட்டனர். வழியில் பல்வேறு அனுபவங்களைக் கடந்தவாறே தங்களின் லட்சியத்தை நோக்கி விரைந்தனர்.

தேடலை முடித்து விட்டு ஒரு மாதத்துக்குள் திரும்ப வேண்டும் என்ற அவசரமும் அவர்களுக்கு இருந்தது.

Subscribe to our newsletter