சிறியன சிந்தியாதான்
சீதையைத் தேடிக் கானகத்தில் அலைந்த ராமனும் லட்சுமணனும், சவரி, கவந்தன் ஆகியோரின் அறிவுரையின் பேரில் ருஷ்யமுக பர்வதம் எனப்படும் இரலையின் குன்றத்தை அடைந்து வானரங்களின் தலைவனான சுக்ரீவனையும் அவனுடைய அமைச்சனாகிய அனுமனையும் சந்தித்தனர்.
அனுமன் வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இடையிலான பிரச்சினை குறித்தும் வாலியின் வலிமை குறித்தும் விளக்கினான். ராவணனால் கவரப்பட்டுச் செல்லும் போது சீதை எறிந்த ஆபரணங்கள் தங்களிடம் கிடைத்ததாகக் கூறி அந்த ஆபரணங்களை ராமனிடம் வானரங்கள் ஒப்படைத்தன. “'கண்டது சீதையின் அணி கலன்களை; கொண்டவன் அரக்கன் இராவணன்” என்பது முடிவு செய்யப்பட்டது; அவன் எங்கிருந்தாலும் அவனைக் கண்டு தெளிந்து, கொண்டுவருவது தன் கடமை. அதற்கு நாங்களிருக்கிறோம் என்று சுக்ரீவன் கூறினான்.
“கொடுந்தொழில் வாலியைக் கொன்று கோமகன்
கடுங்கதி ரோன்மகன் ஆக்கிக் கைவளர்
நெடும்படை கூட்டினா லன்றி நேடரிது
அடும்படை அரக்கர்தம் இருக்கை ஆணையாய்.”
“முதலில் வாலியைக் கொன்று, பின் சுக்கிரீவனுக்கு முடிசூட்டு; அவன் அரசனாகி, ஆணை பிறப்பித்ததும் நெடும்படை வானர சேனை உன்னோடு ஒன்றாக நிற்கும். இந்த வானர சேனையில் முக்கியமானவர்களை நான்கு திசைகளுக்கும் அனுப்பி அரக்கர் தம் இருப்பிடம் தேடுவோம்” என்கிறான் அனுமன்.
ராமனும் இவன் சொல்வது சரி” என்று ஏற்றுக் கொண்டான். வாலியைக் கொல்வதன் மூலம் சுக்ரீவனுக்கு உதவி செய்ய முடிவெடுத்தான். அனுமன் வழிகாட்ட துணை அமைச்சர்களான தாரன், நீலன், நளன் ஆகியோரோடு ராம லட்சுமணர்களுக்கு வழிகாட்டச் சுக்ரீவனுடன் வாலியின் இருப்பிடத்தை நாடிச் சென்றனர் அனைவரும்.
வாலியின் இருப்பிடத்தை அடைந்ததும், “தான் செய்யத் தக்கது யாது?” என்று சுக்ரீவன் ராமனை நோக்கிக் கேட்டான்.
“நீ வாலியை வலியப் போருக்கு அழைத்துப் போர் புரியும்போது நான் தனியாக நின்று அவன் மேல் அம்பை விடுத்துக் கொல்வேன்” என்றான். உயரமான ஒரு பாறையின் மீது நின்ற வாலியைப் போருக்கு அறைகூவி ஆர்ப்பரித்தான் சுக்ரீவன்.
அப்போது தன்னுடைய மாளிகையில், கட்டிலின் மேல் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பதைப் போலத் துயின்றிருந்தான் வாலி.
“மாற்பெரும் கடகரி முழக்கம் வாளரி
ஏற்பது செவித்தலத் தென்ன ஓங்கிய
ஆர்ப்பொலி கேட்டனன் அமளி மேலொரு
பாற்கடல் கிடந்ததே யனைய பான்மையான்.”
இயல்பாகவே வெண்ணிறத்தவனான வாலி, சிறந்த சிவபக்தன் ஆனதால் வெண்ணீறு அணிந்த மேனியனாகவே காட்சிளிப்பவன். அதனால் அவனை “பாற்கடல் போல் கிடந்தான் வாலி” என்று பாடுகிறான் கம்பன்.
குகைக்குள் இருக்கிற சிங்கம் வெளியே யானை பிளிறுவதைக் காதுகொடுத்துக் கேட்பது போல வெளியில் நின்று சுக்ரீவனின் போர்முழக்கத்தை செவிசாய்த்துக் கேட்ட வாலி, கொதித்தெழுந்தான். கண்களில் தீப்பொறி பறந்தது. அவனுடைய சினத்தைக் கண்டு மனைவி தாரை பதைத்தாள். இவனுக்கு வாயால் சொல்லிப் பயனேதுமல்லையென்று அவனை இறுகத் தழுவிக் கொண்டாள். வாலி துடித்தான். அவள் தலை அவன் மார்பில் சாய்ந்து கிடந்தது.
வாலிக்கு அந்த நிலையிலும் தன் மனைவி மீது மாளாத காதல் பிறந்தது. அவள் கூந்தலை உச்சிமோந்து உவந்தான். அவன் மனதில் பொங்கிய சினத்தினாலும் கண்ணில் பறக்கும் தீப்பொறியாலும் அவளுடைய கூந்தல் தீய்ந்து போனது என்கிறான் கம்பன்.
“ஆயிடை தாரையென் றமிழிதிற் றோன்றிய
வேயிடைத் தோளினாள் இடைவி லக்கினாள்
வாயிடைப் புகைவர வாலி கண்வருந்
தீயிடைத் தன்னெடுங் கூந்தல் தீகின்றாள்”
அவளுடைய மெல்லிய தோள்களால் மட்டும் வாலியைத் தடுத்து நிறுத்த முடியாது. அன்பினால் அணைத்து அன்பினால் அவனை நிறுத்தினாள். அவனும் நின்று தன்அன்பால் உச்சி மோந்தான். ஆனால் அவள் கூந்தல் தீயில் தீய்ந்தது.
“என்ன ஒரு அபசகுனம்? இதில் ஏதோ சூது இருக்கிறது. போகவேண்டாம்” என்று தடுக்கிறாள் தாரை. “அவனே வந்து வலிய மாட்டிக்கொள்ளும் போது நாம் என்ன செய்ய முடியும்? அவனுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். அவனை விடமாட்டேன். எப்படிக் கொல்வேன் தெரியுமா? பாற்கடலில் மந்தர மலையை தேவர்களும் அசுரர்களும் கடைய முடியாது கைசலித்து நின்றபோது என்னை அழைத்த நேரத்திலே நான்போய் அந்த வாசுகிப் பாம்பின் தலையை வலக்கையாலும் வாலை இடக்கையாலும் பற்றிக் கடைந்து அந்த மந்தர மலை இற்று விழுமாறு செய்து அமுத த்தைக் கடைந்தெடுத்தேனே, அது போல, சுக்ரீவன் உடலே பாற்கடலாக அவன் முதுகெலும்பே மந்தர மலையாக அவன் இரண்டு கைகளே வாசுகிப் பாம்பாக அவன் உயிரைக் குடித்து வருகிறேன். என்னைத் தடுக்காதே. அவன் வலிய வந்து சண்டைக்கு இழுக்கிறான். நான் போகாமல் இருக்கக் கூடாது. எனக்கு வழிவிடு” என்று மனைவியைக் கெஞ்சினான்.
“ஏதோ தேவையான ஆதரவு தன் பக்கம் வந்துள்ளதாலேயே சுக்ரீவன் உன்னை சண்டைக்கு இழுக்கிறான். எனவே போகாதே. மேலும் சுக்ரீவனுக்கு உதவியாக அயோத்தியின் மைந்தன் ராமன் வந்திருக்கிறான் என்று சேனை ஒற்றர்கள் சொல்கிறார்கள். இது நல்லதற்கு அல்ல” என்று அழுகிறாள்.
இதனால் கடுங்கோபம் கொண்ட வாலி, என்ன வார்த்தை சொல்கிறாய்? ராமன் அறத்தைக் கடைப்பிடிப்பவன். இவ்வுலக மாயையில் கிடந்து உழலுகின்ற உயிர்களுக்கெல்லாம் அறநெறி ஒழுக்கங்களை முறையாக நடந்து காட்டி உய்விக்க வந்த ராமனுக்குப் பொருந்தாதனவற்றைக் கூறி உன் பெண்புத்தியால் தவறுசெய்து விட்டாய்.
“ஏற்ற பேருலகெலாம் எய்தி ஈன்றவள்
மாற்றவள் ஏவமற் றவள்தன் மைந்தனுக்கு
ஆற்றரும் உவகையால் அளித்த ஐயனைப்
போற்றலை இன்னன புகறற் பாலையோ”
இந்த உலகத்தின் பேரரசாட்சியைத் தந்தை கொடுக்கத் தனக்கு மகுடம் சூட்டும் வேளையில் மாற்றாந்தாயின் சொல்லைக் கேட்டு அவள் மைந்தனாகிய பரதனுக்கு அவ்வரச பதவியைக் கொடுத்து மகிழ்ந்த ராமனைப் போற்றாது வேறு என்னென்னமோ சொல்லிக் கொண்டிருக்கிறாய்” என்று அவளைக் கடிந்து கொண்டான் வாலி.
“தம்பியர் அல்லது தனக்கு வேறுயிர்
இம்பரின் இலதென எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானுமுற் றெதிர்ந்த போரிடை
அம்பிடை தொகுக்குமோ அருளின் ஆழியான்”
தன்னுடைய தம்பிமார்களை உயிரெனக் கருதி அவர்கள் மீது மாறாத அன்பு பூண்டவன் ராமன். அத்தகைய அருட்கடலாகிய அவன், நானும் என் தம்பியும் நடத்தும் சண்டையில் இடையே வந்து என் மீது போர் தொடுப்பானா? என்று கூறியபடியே தாரையை விலக்கி விட்டுப்போருக்குக் கிளம்பினான் வாலி.
ஏற்கனவே சொன்னது போல சோதியொளி வீசும் சுந்தரனாய் இலங்கினான் வாலி. அவனுடைய வெண்ணிறமும், வீரத்தின் திண்மையும், வலிமிகு உடலும் ஒலிமிகு குரலும், கணீரென்ற சிரிப்பும், களிப்பும் பீடுநடையும், பார்வையும் பார்ப்பவர்களைப் பின்வாங்க வைப்பனவாக இருந்தன.
மரங்களின் பின்னால் பதுங்கி நின்ற ராமன் வியப்பில் ஆழ்ந்து விட்டான். வாலியை முதன்முதலாகப் பார்த்த ராமனின் வியப்பை கம்பன் இவ்வாறு பாடுகிறான்.
“அவ்வேலை இராமனும் அன்புடைத் தம்பிக் கைய
செவ்வே செலநோக்குதி தானவர் தேவர் நிற்க
எவ்வேலை எம்மேகம் எக்காலொ டெக்கால வெந்தீ
வெவ்வேறு லகத்தினவன் மேனியை மாறும் என்றான்”
தன்னருகில் நின்ற லட்சுமணைனை விளித்து, “தம்பி, தேவர்களிலோ அசுரர்களிலோ இவனுக்கு ஒப்பாரும் மிக்காரும் யாருமில்லை. இவனது ஒளிவிடும் உடலுக்கு ஒப்பாக ஐம்பெரும் பூதங்களில் எதனைக் கூறலாம்? அல்லது கடலோ மேகமோ இவனுடைய மேனிக்கு இணையுண்டா?” என்று கேட்டான்.
ராமனோ தன் தம்பி பரதனுக்கு ராச்சியத்தைக் கொடுத்து விட்டு வந்த வள்ளல். லட்சுமணனோ அண்ணன் ராமனுக்காக அனைத்தையும் துறந்து அவனுடன் காட்டுக்கு வந்து பணிவிடை செய்யும் உன்னதத் தம்பி. அண்ணன் நிலையில் ராமனும் தம்பி நிலையில் லட்சுமணனும் உத்தமர்கள். வள்ளல்கள். எனவே லட்சுமணனை ‘வள்ளற்கிளையான்’ என்கிறான் கம்பன். ராமன் அந்த வள்ளற்கிளையானாகிய லட்சுமணனுக்கு, மறைந்து நின்று வாலியின் உயிரைக் கவர இருப்பதால் ராமன் கூற்றுவனாகக் காட்சியளிக்கிறான். அதனால் தன் அறிவே குழம்பிப் போயிருக்கிறது என்கிறான் லட்சுமணன்.
அண்ணனிடம் சொல்கிறான், “வீரனே, அறநெறி கெடும்படியாக நம்பிக்கைக்கு மாறான செயல்களைப் புரிவோரை நம்புவது நல்லதல்ல. தன் சொந்த சகோதரனையே கொல்வதற்கு ஒருவரின் துணையை நாடும் சுக்ரீவன் எப்படி மற்றவர்களுக்கு விசுவாசம் உள்ளவனாக இருப்பான்?. பிறகு மறைந்திருந்து கொல்வது நியாயமா?” என்று கேட்கிறான்.
“எனக்கு வாலியின் வரம் வழி மறிக்கிறது. எனவே அவனை மறைந்திருந்து தாக்க வேண்டியிருக்கிறது. மேலும் அவன் செய்தது அடாத செயல். அவன் தன் தம்பியின் மனைவியைக் கவர்ந்து வந்திருக்கிறான். தருமம் தவறியிருக்கிறான்” என்று லட்சுமணனுக்குப் பல்வேறு சமாதானங்களைக் கூறுகிறான்.
இதற்கிடையில் வானர வீரர்கள் சுக்ரீவனுக்கும் வாலிக்கும் இடையில் யுத்தம் துவங்குகிறது. இருவருக்கும் கடும்போர் நடக்கிறது. வாலி சுக்ரீவனை அடித்துத் துவைத்து எடுத்து விடுகிறான். அவனைக் குற்றுயிரும் குலையுயிருமாக வீசி எறிகிறான்.
இந்த நிலையில் வாலி மீது அம்பைத் தொடுப்பான் ராமன் என்று எதிர்பார்க்கிறான் சுக்ரீவன். அவனுக்கு ஆதி முதலே ராமன் மீது சந்தேகம் உண்டு. அதனால் தான் அவனை ஏழு மராமரங்களைத் துளைக்க வைத்து சோதனை செய்தான். இதனை மனதில் வைத்துத்துத்தான் ராமன் அவனை அடிபட வைத்து வேடிக்கை பார்த்தான் என்று பெரியவர்கள் தங்கள் உரைகளில் சொல்வார்கள்.
சுக்ரீவன் அரை உயிருடன் ராமனிடம் வந்து தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினான். இருவரும் ஒரே மாதிரி இருப்பதாலும் வித்தியாசம் தெரியாததால் சற்று யோசிக்க வேண்டிப் போனது என்று ராமன் அவனிடம் சமாதானம் கூறினான். சுக்ரீவனை சரியாக அடையாளம் கண்டு கொள்ள அவனை காட்டுப்பூ கொடியை அணிந்து மீண்டும் போரிடுமாறு கூறினான்.
சுக்ரீவனும் அவ்வாறே காட்டுப்பூக் கொடியை மாலையாக அணிந்து அண்ணனுடன் போரில் ஈடுபட்டான். இந்த முறையும் வாலி அவனை உண்டு இல்லையென்று ஆக்கி விட்டான். சுக்ரீவன் உயிர் போவது ஒன்றுதான் மீதமிருக்கிறது என்ற அளவில் அவனை வெகுவாகக் காயப்படுத்தி, கீழே வீசி எறிவதற்குத் தன் தலையின் மேல் அவனைத் தூக்கி நிறுத்தினான் வாலி.
இந்த சந்தர்ப்பத்தில் மறைவில் பதுங்கியிருந்த ராமனுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அவன் உடனே தன் வில்லில் அம்பு ஒன்றைப் பொருத்தி வாலியின் மார்பைக் குறிவைத்து அம்பை விடுவிக்கிறான். பாணம் வாலியின் நடுமார்பில் பாய்ந்தது.
அதுவரை வாலியைக் கொல்ல மனமில்லாமல் நேரம் கடத்தி வந்தான் ராமன். ஆனால் வாலி, தன் தம்பியைத் தூக்கித் தரையில் அடிக்குமளவு வந்த பிறகு, உடனே செயல்பட்டான். தம்பியர் பக்கம் மிகுந்த அன்பு கொண்ட ராமன் வாலியின் அடாத செயலைப் பொறுக்க முடியாமல் பாணத்தை ஏவினான் என்பார்கள் கமபராமாயண உரையாற்றும் பெரியோர்.
நீர், நெருப்பு, காற்று, மண் என்னும் நான்கு பூதங்களின் ஆற்றலைப் பெற்றவன் வாலி. நல்ல முதிர்ந்த, அதாவது, பழுத்த, கதலி வாழைப்பழத்தை ஊடுருவிச் செல்லும் ஊசியானது எவ்வாறு முழுதும் ஊடுருவிச் செல்லுமோ அது போல ராமபாணம் வாலியின் மார்பில் பாய்ந்தது என்கிறான் கம்பன். அத்தனை வேகம் கொண்ட பாணத்தை வாலி நெஞ்சிலிருந்து பிய்த்து எடுத்தான். குருதி வெள்ளம் குபுகுபுவெனக் கொட்டியது.
அண்ணனைக் கண்டு கண்ணீர் பெருக்கித் தம்பி சுக்ரீவனும் தரையிற்சாய்ந்தான். உண்மையில் அண்ணன் மீது அவனுக்குப் பகையில்லை. அரசின் மீது கொண்ட ஆசைதான் அவனை அல்லற்படுத்தியது என்று கூறுவார்கள். உடன்பிறந்த பாசம் எப்படி விடும்?
அம்பைப் பிடுங்கிய வாலி அதில் எழுதியுள்ள பெயரைப் பார்த்தான். திகைப்பு அடைந்தான். உலகுக்கெல்லாம் தருமத்தைப் போதிக்கும் ராமனா? ராமனா இந்த அடாத செயலைச் செய்தது?
“இல்லறம் துறந்த நம்பி எம்மனோர்க்காகத் தங்கள்
வில்லறம் துறந்த வீரன் தோன்றலால் வேதநூலில்
சொல்லறம் துறந்திலாத சூரியன் மரபும் தொல்லை
நல்லறந் துறந்த தென்னா நகைவர நாணுட் கொண்டான்”.
மனைவியைப் பிரிந்து வருந்திக் கொண்டிருக்கும் ராமன் என் பொருட்டாக வீரர்களுக்கு உள்ள தருமத்தையும் துறந்து இவ்விதம் செய்தானா? ராமன் மறைந்து நின்று அம்பு எய்த வீரமற்ற செயலைக் கண்டிக்கிறான். அது அவனுக்குக் குலப்பெருமை தரும் செயல் அல்ல என்றும் இடிக்கிறான். மறைந்து நின்று என் மீது அம்பு விட்டு இப்போது ஏதோ ஒரு சிங்கம் போல என் முன் நிற்கிறாயே? என்ன வீரம் இது? என்கிறான் வாலி.
அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட ராமன், வாலியின் அடாத செயல்களைப் பட்டியலிடுகிறான். மாயாவியுடன் நடைபெற்ற யுத்தத்தில் பல மாதங்கள் நீ குகையிலிருந்து வெளியில் வராததால் மந்திரிசபையின் அறிவுரை கேட்டு பதவியேற்ற சுக்ரீவனைத் தவறாக நினைத்து அவனைக் கொல்வதற்குத் துரத்தினாய். உன் அவசரப்பட்ட கோபம் அந்த ராஜ்ஜியத்துக்கும் அதன் மக்களுக்கும் எண்ணறாத் துயரம் தந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அறத்தைப் பற்றியும் இம்மை-மறுமை பற்றியும் சிந்திக்காமல் உன் தம்பியின் மனைவியை உனதாக்கிக் கொண்டாய். அவன் என்னைச் சரணடைந்தான். என் நண்பனான். எளியவர் துயர் துடைப்பது என் கடமை. எனவேதான் உன்னைக் கொல்லத்துணிந்தேன்” என்கிறான் ராமன்.
தன்னுடைய செயலை ராமன் நியாயப்படுத்தியதும் மீண்டும் வாலி தன் பக்கத்து நியாயத்தை ராமனுக்கு எடுத்துரைக்கிறான். இதனைக் கம்பன் தன் வார்த்தைகளில் சொல்வதாகச் சொல்கிறான்-
"தாய் என உயிர்க்கு நல்கித் தருமமும் தகவும் சால்பும்
நீ என நின்ற நம்பி நெறியினில் நோக்கும் நேர்மை
நாய் என நின்ற எம்மால் நவையற உணரல் ஆமே
தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தியாதான்"
அனைத்து உயிர்களிடத்தும் தாய் போன்ற அன்பைக் காட்டி அறமும், நடுநிலையும் நற்குணங்கள் நிரம்பியும் நீயே என்று சொல்லும்படி நின்றவனே. அறநூல்கள் சொன்ன நெறிப்படி நீ பார்க்கும் நேர்வழியை நாய் போன்ற இழிந்த நிலை கொண்ட என்னிடத்து அறியாமையால் நான் செய்த தீமைகளைப் பொறுத்தருள்வாய் என்று கூறினான், அந்த ‘சிறியன சிந்தியான்.’ இந்த இடத்தில் வாலியை ‘சிறியன சிந்தியாதான்’ என்று போற்றுகிறான் கம்பன்.
தொடர்ந்து ராமனிடம் பேசுகிறான் வாலி. ராமா, உன்னிடம் நான் வேண்டிப் பெறக்கூடியது ஒன்றுண்டு. அது யாதென்றால், என் தம்பி சுக்ரீவன், மதுவைக் குடிப்பதால் எப்போதாவது அவனுடைய அறிவு மாறுபடும்போது உனக்கு ஏதேனும் தீமை செய்வான் என்றால், அவன் மீது சினம் கொண்டு, இப்போது என் மீது செலுத்திய அம்பாகிய கூற்றினைச் செலுத்தாமல் இருக்க வேண்டும் என்று வேண்டினான்.
"தீவினை இயற்றுமேனும் எம்பிமேல் சீறி என்மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான்"
தொடர்ந்து அனுமனின் ஆற்றல் குறித்தும் இராமனிடம், வாலி உயர்வாகப் பேசினான். சுக்ரீவனைக் கட்டி அணைத்துக்கொண்டு, “தம்பி உனக்கு நான் சொல்லக்கூடியது ஒன்று உள்ளது என் இறப்புக்காக நீ வருந்த வேண்டாம். ராமன் பரம்பொருள். அவன் கட்டளையை ஏற்று, உள்ளத்தில் சஞ்சலம் ஏற்படாதபடி, அவனுக்குக் குற்றேவல் செய்தலில் நிறுத்தி, மூன்று உலகங்களிலும் மேன்மை அடைவாயாக. அவனுக்கு வேண்டிய சமயத்தில் உயிரையும் கொடுப்பாயாக. அரிய பிறப்புகளை எளிதில் நீங்கப் பெறுவாயாக.” என்று அறிவுரை கூறினான்.
பாணத்தால் துளைக்கப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்த வாலியைப் பார்த்துப் பலவாறு புலம்பி அழுதான் அவன் மகன் அங்கதன். அவனைத் தன் மார்புடன் அணைத்து, “ எல்லாவற்றிற்கும் தலைவனான ராமன் செய்த நல்வினையின் பயன் இது என்று கூறித் தேற்றினான். நான் முன் செய்த தவத்தால் இத்தகைய மரணம் எனக்கு வந்தது. ராமனே என்னிடம் வந்து, எனக்கு வீடு பேற்றைத் தந்தான். என் உயிருக்கு அவன் இறுதியை உண்டாக்கினான் என்று சிறிதும் நீ எண்ணாதே. அவனுடைய பகைவருடன் போர் செய்ய நேர்ந்தால், நீ துணையாகச் செல். தர்மத்தை ஆதரித்து நிலை பெற்று வாழும் உயிர்க்கெல்லாம் நலத்தைச் செய்பவனான ராமனின் மலர் போன்ற அடியை வணங்கி வாழ்வாயாக, என்று வாலி, அங்கதனுக்கு அறிவுரை கூறினான். மகனை ராமனுக்கு அடைக்கலம் தந்தான்.
ராமனும் அங்கதனை அடைக்கலமாக ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத் தன் உடைவாளை எடுத்து “நீ இதை ஏற்றுக் கொள்வாயாக” என்றான். இங்ஙனம் கூறிய அளவில் ஏழுலகமும் அவனைத் துதித்தன. பின்னர் வாலி இறந்து தன் உடலை விட்டு நீங்கி மோட்சம் அடைந்தான்.
“என்னலும் உலகம் ஏழும் ஏத்தின இறந்து வாலி
அந் நிலை துறந்து வானுக்கு அப் புறத்து உலகன் ஆனான்"
என்கிறான் கம்பன். வாலி இறந்த செய்தியை அறிந்த தாரை, போர்க்களம் வந்து இறந்து கிடக்கும் கணவன் வாலியைப் பார்க்கிறாள். அவனது உடலிலிருந்து ரத்தம் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. அப்படியே அவனது உடலில் விழுந்து கட்டிப் புரள்கிறாள்.
பெருக்கெடுத்து வரும் இரத்தம் தாரையின் உடலையும், கூந்தலையும் நனைத்து விடுகிறது. “மலைகள் போன்ற வலிமையான உன் தோள்களிடையே எப்போதும் நான் சாய்வேனே உனக்கு நேர்ந்த துன்பத்தைக் கண்டதும் இந்நேரம் என்னுடைய உயிர் பிரிந்திருக்க வேண்டும். அவ்வாறு பிரியாது உன் முன் நின்று கொண்டிருக்கிறேனே,” என்று கதறினாள். “என்னை நோக்கி மிக்க அன்புடன் நீயே என் உயிர் என்றாயே, உன் உயிரான நான், இங்கு துன்பமடைய, உன் உடல் மட்டும் எப்படி இன்பமடைய முடியும்? அப்படியானால் நீ கூறியது பொய்யோ என்று இறந்து கிடக்கும் வாலியை நோக்கிக் கதறி அழுதாள். “நாம் இல்லறத்தை இனிதே நடத்திய போது, என்னை நோக்கி உன் இதயம் என்னிடத்தில் உள்ளது என்றாய். நானும் உன்னை நோக்கி உன் இதயம் என்னிடத்தில் உள்ளது என்று மாறி மாறி கூறினோம். நாம் பேசியது உண்மையென்றால், உன் உடலில் பாய்ந்த ராமனின் அம்பானது என் இதயத்தைத் துளைத்து, என் உயிரைப் போக்கியிருக்க வேண்டும். ஆனால் இறந்திருப்பது நீ தானே? அப்படியென்றால் நாமிருவரும் ஒருவருக்கொருவர் இத்தனை நாட்களாகப் பொய் பேசிக் கொண்டிருந்தோமா?” என்று தாரை ஒப்பாரி வைத்து அழுதாள்.
வானர மகளிரைக் கொண்டு அவளை அந்தப்புரத்துக்குச் செல்வித்து அங்கதனைக் கைபிடித்து அழைத்து வந்த அனுமன், வாலிக்குச் செய்ய வேண்டிய ஈமக் கடன்களையெல்லாம் அவனைக் கொண்டு நிறைவேற்றினான்
சுக்ரீவன் இராமனால் மீண்டும் கிஷ்கிந்தையின் அரசனாக்கப்படுகிறான்; அங்கதன் இளவரசனாக்கப்படுகிறான். அங்கு இராவணனுக்கு நட்பான அரசாங்கம் அகற்றப்பட்டு, இராமனுக்கு நட்பான அரசாங்கம் அமைகிறது.
ராம லட்சுமணர்களின் தேடல் தொடருகிறது.